Published : 13 Jan 2021 05:25 PM
Last Updated : 13 Jan 2021 05:25 PM
2021-ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தின்போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம், தங்கள் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை அணியிலிருந்து விடுவிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் 20-ம் தேதிக்குள் ஐபிஎல் அணிகள் அனைத்தும் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்கள், விடுவிக்கப்பட உள்ள வீரர்கள் பட்டியலை அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஸ்டீவ் ஸ்மித்தை தக்கவைக்க விரும்பவில்லை எனத் தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு வேண்டுமானால் ஸ்மித் சிறந்த கேப்டனாக இருந்திருக்கலாம். ஆனால், ராஜஸ்தான் அணிக்கு ஒருபோதும் இருந்தது இல்லை. கடந்த ஐபிஎல் தொடரில் கடினமாகப் போராடியும் ப்ளே ஆஃப் சுற்றை அடைய முடியவில்லை.
தனிப்பட்ட முறையிலும் 2 அரை சதங்கள் மட்டுமே அடித்த ஸ்மித், மற்ற போட்டிகளில் எல்லாம் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து 311 ரன்கள் மட்டுமே தொடரில் குவித்தார். கடந்த ஐபிஎல் போட்டியில் ஸ்மித்தின் ஸ்ட்ரைக் ரேட் 131 ஆகவும், சராசரி 25 ஆகவும் சரிந்துவிட்டது.
கிரிக்இன்ஃபோ தகவலின்படி, “ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம், தங்கள் அணியை ப்ளே ஆஃப் சுற்றுவரை கொண்டு செல்லக்கூடிய கேப்டனை விரும்புகிறார்கள். ஆனால், ஸ்மித்தின் திறமை கேப்டனாக, பேட்ஸ்மேனாக ஜொலிக்கவில்லை. கடந்த 2018-ம் ஆண்டு தொடரின்போது, ரூ.12.5 கோடிக்கு வாங்கப்பட்ட ராஜஸ்தான் அணிக்குப் பெரிய அளவில் ஸ்மித் கைகொடுக்கவில்லை.
2018-ம் ஆண்டு சீசனில் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய சர்ச்சை காரணமாக விளையாடவில்லை. ரஹானே கேப்டன்ஷிப்பில் ஓரளவுக்குச் சிறப்பாக ஆடிய ராஜஸ்தான் அணி ப்ளே ஆஃப் வரை 2018-ல் சென்றது. ஆனால், ஸ்மித் வந்தவுடன் ரஹானே கழற்றி விடப்பட்டு, மீண்டும் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டார். முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 2013, 2015, 2018 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுவரை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால், ஸ்மித்தின் செயல்பாடு கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் கடந்த இரு தொடர்களிலும் மனநிறைவாக இல்லை என்பதால், 2021-ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஸ்மித்தை விடுவிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை ஸ்மித் விடுவிக்கப்பட்டால், அடுத்த கேப்டனாக அணியில் அனுபவ வீரராக சஞ்சு சாம்ஸன் இருக்கிறார். ஆனால், இந்திய வீரர் கேப்டனாக நியமிக்கப்படுவாரா அல்லது வெளிநாட்டு வீரர் நியமிக்கப்படுவாரா என்பது ஐபிஎல் ஏலத்துக்குப் பின் தெரிந்துவிடும். ஆனால், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஸ்மித், ராஜஸ்தான் அணியில் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT