Published : 12 Jan 2021 01:46 PM
Last Updated : 12 Jan 2021 01:46 PM
சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியின்போது இந்திய வீரர் சிராஜுக்கு எதிராக இனவெறியுடன் ரசிகர்கள் பேசியதற்கு ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் மன்னிப்பு கோரி, வருத்தம் தெரிவித்துள்ளார்.
சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் 4-வது நாளின்போது, 2-வது செஷன் முடியும் தறுவாயில், இந்திய வீரர் முகமது சிராஜ் எல்லைக் கோடு அருகே ஃபீல்டிங்கில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த உள்நாட்டு ரசிகர்கள் சிலர், சிராஜைப் பார்த்து இனவெறியைத் தூண்டும் விதத்திலும், அவமதிப்புக்குரிய வார்த்தைகளைக் கூறியும் விமர்சித்தனர்.
முகமது சிராஜ் உடனடியாக கேப்டன் ரஹானேவிடம் சென்று ரசிகர்கள் இனவெறியுடன் தன்னை அவமதித்துப் பேசுவதாகப் புகார் அளித்தார். இதையடுத்து, நடுவர் பால் ரீஃபிலிடம் ரஹானே புகார் செய்து, போட்டியை சில நிமிடங்கள் நிறுத்துமாறு கூறியதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இந்தத் தகவல் உடனடியாக மைதான பாதுகாப்பு போலீஸாருக்குத் தெரிவிக்கப்பட்டு, அந்தப் பார்வையாளர்கள் மாடத்திலிருந்த ரசிகர்கள் அனைவரும் அங்கிருந்து அகற்றப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.
போட்டியின் 3-வது நாளிலும் முகமது சிராஜ், பும்ரா ஆகியோரை நோக்கி தகாத வார்த்தைகளாலும், இனவெறியைத் தூண்டும் வார்த்தைகளாலும் ரசிகர்கள் பேசியது குறித்து பிசிசிஐ சார்பில் போட்டி நடுவரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்திய வீரர்களை இனவெறியுடன் ஆஸி. ரசிகர்கள் பேசியது குறித்து ஐசிசி விசாரணை நடத்தத் தொடங்கியுள்ளது. இந்தச் சம்பவத்தை ஆஸி.கேப்டன் டிம் பெய்ன், பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் உள்ளிட்ட பலரும் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் ஆஸி. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய வீரர் முகமது சிராஜிடமும், இந்திய அணியிடமும் ஆஸி. ரசிகர்கள் நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கோரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
அதில், “முகமது சிராஜ், இந்திய வீரர்கள், அதிகாரிகள் ஆகியோரிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். இனவெறியைத் தூண்டும் வகையான வார்த்தைகளை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் சகித்துக்கொள்ள முடியாது, ஏற்கவும் முடியாது. ஆஸி. உள்நாட்டு ரசிகர்கள் இன்னும் நாகரிகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.
கடந்த 2 டெஸ்ட் போட்டிகளாக விளையாடாமல் 3-வது டெஸ்ட்டில் நான் களமிறங்கியது மகிழ்ச்சியாக இருக்கிறது. 3-வது டெஸ்ட் போட்டியில் கிடைத்த முடிவு திருப்தியளிக்கவில்லை என்றாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இது நடக்கும். 5 நாட்கள் கடினமான நடக்கும் ஆட்டத்தில் எங்கள் வீரர்கள் சிறப்பாகவே செயல்பட்டார்கள்.
இந்திய வீரர்களும் கடைசிவரை போராடி போட்டியை டிரா செய்ததற்குப் பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன். அதனால்தான் டெஸ்ட் போட்டியை விரும்புகிறோம். டெஸ்ட் போட்டி எளிதானது அல்ல. யார் வெற்றியாளர் என்பதை முடிவு செய்யும் பிரிஸ்பேன் டெஸ்ட்டுக்காகச் செல்கிறோம். காபாவில் அனைவரும் சந்திப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT