Published : 12 Jan 2021 09:50 AM
Last Updated : 12 Jan 2021 09:50 AM
ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டதலிருந்து இந்திய அணி மினி மருத்துவமனையாக மாறிவிட்டது. தொடர்ந்து வீரர்கள் காயம் அடைந்து நாடு திரும்புவதும், போட்டியிலிருந்து விலகுவதும் நடந்து வருகிறது.
அந்த வரிசையில் தற்போது இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் காயம் காரணமாக பிரிஸ்பேனில் நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
ஏற்கெனவே காயம் காரணமாக இசாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி, கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விலகியுள்ள நிலையில், இப்போது பும்ராவும் கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து விலகுவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த 3-வது டெஸ்ட் போட்டியின்போது பும்ராவுக்கு அடிவயிற்றில் பிடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவரால் பிரிஸ்பேனில் வரும் 15-ம் தேதி தொடங்கும் கடைசி டெஸ்ட்டில் பந்துவீச இயலாத சூழலில் இருப்பதால், விலகுவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது உறுதி செய்யப்படவில்லை.
இருப்பினும், இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வெல்வதில் தீவிரமாக இருக்கிறது. ஆதலால், பும்ரா 50 சதவீதம் உடல்தகுதியுடன் இருந்தாலும் அவரை விளையாட வைக்கவும் இந்திய அணி நிர்வாகம் தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால்,பும்ரா விளையாடுவது கடைசி நேர முடிவுக்கு உட்பட்டது என்பதே நிதர்சனம்.
பும்ராவுக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் காயம் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் காயம் பெரிதாக மாறிவிடக் கூடாது என்பதால், பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்பதில் மருத்துவக் குழுவினர் அறிவுறுத்தியதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமல்லாமல், அடுத்த மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. அந்தத் தொடரை மனதில் வைத்து பும்ராவுக்குக் கூடுதல் ஓய்வளிக்க வேண்டும், காயத்தால் அவதிப்பட்டுவிடக் கூடாது என்பதால், 4-வது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவது தவிர்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 14-ம் தேதி விளையாடும் 11 வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்படும்போது முடிவு தெரிந்துவிடும்.
பிரிஸ்பேன் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் ஆடுகளம். இந்த ஆடுகளத்தில் பும்ரா போன்ற பந்துவீச்சாளர்கள் ஆஸி. பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பர். இப்போது பும்ரா அணியில் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.
பும்ரா இல்லாத நிலையில் தமிழக வீரர் டி.நடராஜன் அணிக்குள் வருவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. வரும் 15-ம்தேதி தொடங்கும் ஆஸி.க்கு எதிரான கடைசி டெஸ்ட்டில், சிராஜ், ஷைனி, ஷர்துல் தாக்கூர், நடராஜன் ஆகியோர் களமிறங்குவார்கள் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT