Published : 11 Jan 2021 05:52 PM
Last Updated : 11 Jan 2021 05:52 PM
சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியின்போது தொடைப் பகுதியில் காயம் அடைந்த இந்திய பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி, பிரிஸ்பேனில் வரும் 15-ம் தேதி தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பேட்டிங்கில் காயம் அடைந்த ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் இடம்பெற வாய்ப்பு உள்ளது.
சிட்னியில் நடந்த ஆஸி.க்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின்போது, இந்திய வீரர் விஹாரிக்கு தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அணியின் மருத்துவர் வந்து முதலுதவி அளித்தபின் தாக்குப்பிடித்து விளையாடி, போட்டியை டிரா செய்ய உதவினார்.
ஹனுமா விஹாரிக்குப் போட்டி முடிந்தபின் தொடைப்பகுதியில் ஸ்கேன் எடுக்கப்பட்டது. அந்த முடிவுகள் நாளைதான் வரும் எனத் தெரிகிறது. மருத்துவர்கள் ஆலோசனைப்படி விஹாரி குணமடைய சில வாரங்கள் ஆகலாம் என்பதால், பிரிஸ்பேனில் நடக்கும 4-வது டெஸ்ட் போட்டியிலும், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இடம் பெறமாட்டார் என பிசிசிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டிக்கு விஹாரி இல்லாத சூழலில் அணியில் விக்கெட் கீப்பிங் செய்ய சாஹாவையும், கூடுதல் பேட்ஸ்மேனாக ரிஷப் பந்த்தையும் பயன்படுத்த வேண்டிய நிலை இருக்கிறது. அல்லது மயங்க் அகர்வாலை அணியில் எடுக்க வேண்டும்.
ஆனால், ரிஷப் பந்த் நல்ல ஃபார்மில் இருப்பதால், அவருக்கே அதிகமான வாய்ப்பு இருக்கும். கூடுதல் விக்கெட் கீப்பராக சாஹா அணியில் இடம் பெறலாம். மற்றவகையில் பிரித்வி ஷா, அகர்வால் அணியில் இடம்பெற வாய்ப்பு குறைவுதான்.
பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக அணியிலிருந்து விலகிவிட்டதால், அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் இடம் பெற வாய்ப்புள்ளது. ஏனென்றால், நடராஜனைவிட தாக்கூர் ஓரளவுக்கு பேட்டிங் செய்யக்கூடியவர், முதல்தரப் போட்டிகளில் அதிகமான விளையாடி அனுபவம் உள்ளவர் என்பதால், ஷர்துல் தாக்கூருக்குதான் விளையாடும் 11 வீரர்கள் கொண்ட அணியில் இடம் கிடைக்கும்.
மேலும் நடராஜனைவிட, தாக்கூர் பந்தை நன்றாக ஸ்விங் செய்யக்கூடியவர், கூக்கபுரா பந்தில் பந்துவீசிய அனுபவமுள்ளவர். ஆதலால், ஆஸி. டெஸ்ட் தொடரில் நடராஜன் விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT