Published : 11 Jan 2021 04:52 PM
Last Updated : 11 Jan 2021 04:52 PM
விஹாரியின் பேட்டிங் சதத்துக்கு ஒப்பானது என்று இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் புகழாரம் சூட்டியுள்ளார்.
சிட்னியில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியை இந்திய அணி சமன் செய்தது. 407 ரன்கள் எனும் இலக்கைத் துரத்திய இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் சேர்த்திருந்தபோது ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.
ரிஷப் பந்த் (97), புஜாரா (77) இருவரும் ஆட்டமிழந்தபின் போட்டியில் இந்திய அணி தோற்றுவிடுமோ என அஞ்சப்பட்ட நிலையில், அஸ்வின், விஹாரி கூட்டணி பிரமாதமாகக் களத்தில் நங்கூரமிட்டனர். இருவரையும் ஆட்டமிழக்கச் செய்ய ஆஸி. பந்துவீச்சாளர்கள் செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.
அஸ்வின் 128 பந்துகளைச் சந்தித்து 39 ரன்களுடனும், விஹாரி 161 பந்துகளைச் சந்தித்து 23 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்த ஆட்டம் குறித்து அஸ்வின் சேனல் 7 எனும் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
''புஜாரா, ரிஷப் பந்த் இருவரும் ஆட்டமிழந்தபின் விஹாரியும் காயமடைந்தார். இதனால் போட்டியில் வெல்வது சிரமம் என உணர்ந்துவிட்டேன். இந்த முறை ஆஸ்திரேலியப் பயணம் நிச்சயம் எளிதாக இருக்கப்போவதில்லை என்பதை அறிந்துகொண்டோம்.
உண்மையில் விஹாரியின் பேட்டிங் அருமையாக இருந்தது. அவரின் பேட்டிங்கை நினைத்து அவர் பெருமைப்பட வேண்டும். அவரின் ஒவ்வொரு ஷாட்டும் சதம் அடித்ததற்கு ஒப்பானது.
வலைப்பயிற்சியில் நான் தொடர்ந்து பேட்டிங் செய்தது இந்த முறை எனக்கு நம்பிக்கை அளித்தது. அதனால்தான் விஹாரியுடன் நீண்டநேரம் என்னால் பேட்டிங் செய்ய முடிந்தது. அதிலும் சிட்னி மைதானத்தில் 400 ரன்களை சேஸிங் செய்வது என்பது எளிதானது அல்ல. ஆஸி. வீரர்கள் வீசும் பந்துகள் பவுன்ஸர்களாக மேலே எழும்பியும், ஸ்விங் ஆகியும் விதவிதமாக வந்தன. இந்தப் பந்துவீச்சை சமாளித்து ஆடிய ரிஷப் பந்த் பேட்டிங் அருமையானது.
சிட்னி மைதானத்தில் அரை சதம் அடிக்காமல் வந்துவிடக்கூடாது என பேட்டிங் பயிற்சியாளரிடம் தெரிவித்தேன். இந்த மைதானத்தில் நான் சிறப்பாகவே பேட்டிங் செய்துள்ளதாகவே நினைக்கிறேன். கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசல்வுட் ஆகியோரின் பந்துவீச்சை சமாளித்து ஆடுவது கடினமானது.
கம்மின்ஸ் பந்துவீச்சு மிகவும் வித்தியாசமாக இருந்தது. இரு முறை பந்து பவுன்ஸ் ஆனதுபோல் இருந்தது. இதனால் கம்மின்ஸ் பந்துவீச்சை ஆடுவது மிகவும் சிரமமாக இருந்தது. வலைப்பயிற்சியில் பும்ரா பந்துவீச்சை எதிர்கொள்வது எளிதாக இல்லை. 150 கி.மீ. வேகத்துக்கு மேல் பந்துவீசும் பந்துவீச்சாளர்களை வைத்துதான் பயிற்சியும் எடுத்தோம்''.
இவ்வாறு அஸ்வின் தெரிவித்தார்.
இதனிடையே அஸ்வின் மனைவி ப்ரீத்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “அஸ்வினுக்கு இரவில் கடுமையான முதுகுவலி இருந்தது. அவரால் காலையில் எழுந்தபோது நேராக நிற்கக்கூட முடியவில்லை. குனிந்து ஷூ லேஸ் கட்ட முடியவில்லை. ஆனால், அவர் இந்தப் போட்டியில் நிலைத்து ஆடியது அற்புதமானது” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT