Published : 10 Jan 2021 02:22 PM
Last Updated : 10 Jan 2021 02:22 PM
ஆஸ்திரேலியாவில் இதற்குமுன் விளையாடியபோது நானும்கூட ரசிகர்களிடம் இனவெறிப் பேச்சை எதிர்கொண்டேன். இதுபோன்ற பேச்சுகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. போட்டியின் 4-வது நாளான இன்று இந்திய அணி பந்துவீச்சில் ஈடுபட்டிருந்தது. அப்போது 2-வது செஷன் முடியும் தறுவாயில், இந்திய வீரர் முகமது சிராஜ் எல்லைக் கோடு அருகே ஃபீல்டிங்கில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த உள்நாட்டு ரசிகர்கள் சிலர், சிராஜைப் பார்த்து இனவெறியைத் தூண்டும் விதத்திலும், அவமதிப்புக்குரிய வார்த்தைகளைக் கூறியும் விமர்சித்துள்ளனர். ஏற்கெனவே நேற்று இதுபோன்ற சம்பவம் நடந்ததையடுத்து அது தொடர்பாக பிசிசிஐ சார்பில் போட்டி நடுவரிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது
இந்நிலையில் முகமது சிராஜ் உடனடியாக கேப்டன் ரஹானேவிடம் சென்று ரசிகர்கள் இனவெறியுடன் தன்னை அவமதித்துப் பேசுவதாகப் புகார் அளித்தார். இதையடுத்து, நடுவர் பால் ரீஃபிலிடம் ரஹானே புகார் செய்து, போட்டியைச் சில நிமிடங்கள் நிறுத்துமாறு கூறியதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இந்தத் தகவல் உடனடியாக மைதான பாதுகாப்பு போலீஸாருக்குத் தெரிவிக்கப்பட்டு, அந்தப் பார்வையாளர்கள் மாடத்திலிருந்த ரசிகர்கள் அனைவரும் அங்கிருந்து அகற்றப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.
இதையடுத்து, இந்திய அணி வீரர் அஸ்வின் போட்டிக்குப் பின் அளித்த பேட்டியில் கூறியதாவது:
நான் ஒரு விஷயத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். நான் ஆஸ்திரேலியாவுக்கு 4-வது முறையாக வருகிறேன். அதிலும் சிட்னி நகரில் இதற்கு முன் பலமுறை இனரீதியான வார்த்தைகளை எதிர்கொண்டிருக்கிறேன். அதில் சில அசிங்கமான சைகைகளையும் கடந்த 2011ம் ஆண்டு பயணத்தில் என்னை நோக்கி ரசிகர்கள் செய்துள்ளார்கள்.
ஒரு முறை அல்லது இருமுறை வீரர்கள் ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்க முடியும். ஆனால், வீரர்களால் இந்த தொந்தரவு வருவதில்லை. கீழ்தளத்தில் அமர்ந்திருக்கும் ரசிகர்கள் சிலரால்தான் இதுபோன்ற அவமதிப்பு நேர்கிறது. அசிங்கமான வார்த்தைகளைக் கூறுவதும், திட்டுவதும் என மோசமாக நடந்து கொள்வார்கள். இந்த முறை எல்லை மீறி இனவெறியுடன் பேசுகிறார்கள்.
நடுவர்கள் இருவரும் இனவெறி தொடர்பாக எந்த பேச்சு ரசிகர்கள் பேசினாலும் உடனடியாக தகவல் கொடுங்கள் என கூறியிருக்கிறார்கள். ஏற்கெனவே பிசிசிஐ சார்பில் ஐசிசியிடம் இது தொடர்பாக புகார் வழங்கப்பட்டுள்ளது. நடுவர்களும் இது தொடர்பாக புகார்களை அளித்துள்ளனர்.
ஆனால், இன்று நடந்ததை என்னால் ஏற்க முடியாது.இதற்கு முன் ஏராளமாக பார்த்துவிட்டோம். இதுபோன்ற சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். மறுபடியும் நடக்காதவகையில், வேரோடு பிடுங்க வேண்டும்.
தனிப்பட்ட முறையில் அடிலெய்ட், மெல்போர்ன் மைதானத்தில் இதுபோன்ற அவச் சொற்களை கேட்டதில்லை. ஆனால், சிட்னியில்தான்இதுபோன்று தொடர்ந்து நடக்கிறது. மிகவும் மோசமாக இருக்கிறது. ஏன் நடக்கிறது, என்ன காரணம் எனத் தெரியவில்லை.
அதிலும் நான் 2011-12ம் ஆண்டு ஆஸி. பயணத்தின்போது, எல்லைக் கோட்டில் நின்றபோது, என்னைக் கடுமையாக விமர்சிப்பார்கள். அதைப் பார்த்து சிலர் ரசிப்பார்கள், சிரிப்பார்கள்.
இவ்வாறு அஸ்வின் தெரிவித்தார்
இந்திய அணியின் மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ஆஸ்திரேலியாவில் நான் விளையாடியபோது, ஃபீல்டிங்கில் ஈடுபட்டிருந்தபோது, என்னைப் பற்றியும், என் நிறம், நான் சார்ந்திருக்கும் மதம் பற்றியும் அதிகமான மோசமான வார்த்தைகளைத் தனிப்பட்ட முறையில் ரசிகர்கள் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். ஆதலால், ஆஸ்திரேலியாவின் நாகரிகமற்ற ரசிகர்கள் செய்வது இது முதல் முறையல்ல. எப்படி இவர்களை நிறுத்துவது?” எனக் கேட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT