Published : 10 Jan 2021 11:33 AM
Last Updated : 10 Jan 2021 11:33 AM
சிட்னியில் நடந்து வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3-வது டெஸ்ட் போட்டியில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு எதிராக ரசிகர்கள் சிலர் இனவெறியைத் தூண்டும் வகையில் திட்டியதாகவும், பேசியதாகவும் இந்திய அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, சில நிமிடங்களுக்கு ஆட்டம் நிறுத்தப்பட்டு, மைதானத்தில் அமர்ந்திருந்த அந்த ரசிகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. போட்டியின் 4-வது நாளான இன்று இந்திய அணி பந்துவீச்சில் ஈடுபட்டிருந்தது. அப்போது 2-வது செஷன் முடியும் தறுவாயில், இந்திய வீரர் முகமது சிராஜ் எல்லைக் கோடு அருகே ஃபீல்டிங்கில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த உள்நாட்டு ரசிகர்கள் சிலர், சிராஜைப் பார்த்து இனவெறியைத் தூண்டும் விதத்திலும், அவமதிப்புக்குரிய வார்த்தைகளைக் கூறியும் விமர்சித்துள்ளனர். ஏற்கெனவே நேற்று இதுபோன்ற சம்பவம் நடந்ததையடுத்து அது தொடர்பாக பிசிசிஐ சார்பில் போட்டி நடுவரிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் முகமது சிராஜ் உடனடியாக கேப்டன் ரஹானேவிடம் சென்று ரசிகர்கள் இனவெறியுடன் தன்னை அவமதித்துப் பேசுவதாகப் புகார் அளித்தார். இதையடுத்து, நடுவர் பால் ரீஃபிலிடம் ரஹானே புகார் செய்து, போட்டியை சில நிமிடங்கள் நிறுத்துமாறு கூறியதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இந்தத் தகவல் உடனடியாக மைதான பாதுகாப்பு போலீஸாருக்குத் தெரிவிக்கப்பட்டு, அந்தப் பார்வையாளர்கள் மாடத்திலிருந்த ரசிகர்கள் அனைவரும் அங்கிருந்து அகற்றப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.
போட்டியின் 3-வது நாளான நேற்றும், முகமது சிராஜ், பும்ரா ஆகியோரை நோக்கி தகாத வார்த்தைகளாலும், இனவெறியைத் தூண்டும் வார்த்தைகளாலும் ரசிகர்கள் பேசியது குறித்து பிசிசிஐ சார்பில் போட்டி நடுவரிடம் புகார் அளிக்கப்பட்டது.
பிசிசிஐ அளித்த புகார் குறித்து முக்கிய அதிகாரி கூறுகையில், “ஆஸி.ரசிகர்கள் நடந்து கொண்டவிதம், பேசிய விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த ஆஸி. பயணம் கசப்பானதாக அமைந்திருக்கிறது. நாகரிகமான சமூகத்தில் இனவெறிப் பேச்சு தொடர்கிறது. ஐசிசியும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் பொறுப்புடன் நடந்து, மாற்று வழியைத் தேடாவிட்டால், கிரிக்கெட் விளையாட்டு நன்றாக அமையாது. அதிலும் தற்போதுள்ள சூழலை ஆய்வு செய்ய வேண்டும். எங்கள் அணி வீரர்கள் மீதான இனவெறி வார்த்தைகளை ஏற்க முடியாது” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT