Published : 10 Jan 2021 07:18 AM
Last Updated : 10 Jan 2021 07:18 AM
ஆஸ்திேரலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்கியதிலிருந்து இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து காயத்தால் விலகுவது தொடர்ந்து வருகிறது.
இதில் தற்போது ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜாவுக்கு கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் 6 வாரங்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
சிட்னியில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வீரர் ரவிந்திர ஜடேஜா பேட் செய்தபோது, ஆஸி. வீரர் மிட்ஷெல் ஸ்டார்க் வீசிய பந்தில் ஜடேஜாவின் இடது கையில் பந்துபட்டு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, ஜடேஜாவுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவரின் இடதுகை பெருவிரலில் எழும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
இதனால் சிட்னியில் நடந்துவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது இன்னிங்ஸிலும் ஜடேஜா பேட்டிங் செய்யமாட்டார், 4-வது டெஸ்ட் போட்டியிலும் விளையாடமாட்டார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே காயத்தால் இசாந்த் சர்மா விலகினார், அதைத் தொடர்ந்து முகமது ஷமி, உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல் ஆகியோர் அணியிலிருந்து விலகிவிட்டனர். கேப்டன் கோலி, தனது மனைவிக்கு முதல் குழந்தை பிறப்புக்காக விடுப்பில் சென்றுவிட்டார். இப்போது ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் அணியில் இல்லை. இது இந்திய அணிக்கு பெருத்த பின்னடைவாக அமைந்துள்ளது
இதில் ஆறுதல் செய்தி என்னவென்றால், பாட் கம்மின்ஸ் வீசிய பந்தில் முழங்கையில் காயம் ஏற்பட்டு விக்கெட் கீப்பர் ரிஷப்பந்தும் ஆட்டமிழந்து வெளியேறினார். அவருக்கு நடத்தப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் கவலைப்படும் அளவில் காயம் இல்லை எனத் தெரியவந்துள்ளது. இருப்பினும் சமீபத்தில்ஐசிசி கொண்டு வந்த விதிகளின்படி 2-வது இன்னிங்ஸில் விருதிமான் சாஹா கீப்பிங் செய்து வருகிறார்.
இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில் “ ரவிந்திர ஜடேஜாவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரின் இடதுகை பெருவிரலில் எலும்பு நகர்ந்து, லேசாக முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் தொடர்ந்து பேட் செய்வதுகடினம். அவருக்கு 6 வாரங்கள் ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
ஆதலால், 4-வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா விளையாடமாட்டார். ஆனால், ரிஷப்பந்த்துக்கு ஏற்பட்ட காயம் கவலைப்பட வேண்டிய அளவுக்கு இல்லை. ரவிந்திர ஜடேஜாவுக்கு ஏற்பட்ட காயத்தைப் பார்க்கும் போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதும் சந்தேகம்தான்” எனத் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT