Published : 07 Jan 2021 06:34 PM
Last Updated : 07 Jan 2021 06:34 PM
இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வினுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறேன் என்று ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்துள்ளது. ஸ்மித் 31 ரன்களிலும், லாபுஷேன் 67 ரன்களிலும் களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
கடந்த இரு டெஸ்ட் போட்டிகளில் ஸ்டீவ் ஸ்மித்தின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். கடந்த இரு போட்டிகளிலும் ஃபார்ம் இல்லாமல் தவித்த ஸ்மித் இந்தப் போட்டியில்தான் ஓரளவுக்கு களத்தில் நின்று பேட் செய்கிறார்.
கடந்த இரு டெஸ்ட்களிலும் சொல்லி வைத்தாற்போல், ஸ்மித்துக்கு ஃபீல்டர்களை நிறுத்தி விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். ஆதலால், இன்றைய ஆட்டத்திலும் ஸ்மித் களமிறங்கியவுடன் அஸ்வின் பந்துவீச அழைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோன்று, ஸ்மித் வந்துவுடன் அஸ்வின் பந்துவீச அழைக்கப்பட்டார்.
ஆனால், கடந்த இரு டெஸ்ட் போட்டிகளைப் போன்று அல்லாமல் ஸ்மித் இந்த முறை அஸ்வின் பந்துவீச்சை நிதானமாகக் கையாண்டார். அஸ்வின் பந்துவீச்சைக் கணித்து ஆடிய ஸ்மித் தன்னை நிலைப்படுத்திக்கொண்டார். 3-வது விக்கெட்டுக்கு ஸ்மித், லாபுஷேன் இருவரும் 60 ரன்களுக்கு மேல் சேர்த்தனர்.
கடந்த இரு போட்டிகளிலும் ஸ்மித்தை விரைவாக வெளியேற்றிய அஸ்வின், இந்தப் போட்டியில் ஸ்மித்துக்கு வீசப்பட்ட ஒரு ஓவரில் 6 வகையான பந்துகளையும் சமாளித்து ஆடியதைப் பார்த்து அஸ்வின் சற்றே அழுத்தத்துக்கு ஆளானார் என்பது உண்மை.
முதல் நாள் ஆட்டம் குறித்து ஸ்டீவ் ஸ்மித் அளித்த பேட்டியில் கூறுகையில், “நான் இந்த முறை ஆடுகளத்தில் நீண்ட நேரம் நிலைத்து நின்று பேட் செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிலும் லாபுஷேனுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறேன்.
நான் களத்தில் நீண்டநேரம் நிலைத்து நின்று அஸ்வினுக்குச் சிறிது அழுத்தம் கொடுத்திருக்கிறேன். இந்தத் தொடரில் இதுவரை இதுபோன்று அவருக்கு அழுத்தம் கொடுத்தது இல்லை. இந்த முறை அஸ்வின் சற்று பதற்றத்துடன் இருக்கிறார்.
கடந்த 2 போட்டிகளைவிட, இந்த டெஸ்ட் போட்டியில் நான் எனது இடத்தை இறுகப் பிடித்துவிட்டேன். கடந்த 4 இன்னிங்ஸிலும் தடுமாறியது உண்மைதான். ஆனால், இந்த டெஸ்ட்டில் நான் நிதானமாகிவிட்டேன். இரு பவுண்டரிகள் அடித்தபின் எனக்குள் உற்சாகம் வந்துவிட்டது” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT