Published : 07 Jan 2021 05:53 PM
Last Updated : 07 Jan 2021 05:53 PM
ரிஷப் பந்த இரு அருமையான கேட்ச் வாய்ப்புகளைத் தவறவிட்டதைப் பயன்படுத்திக் கொண்ட ஆஸி. அறிமுக வீரர் வில் புகோவ்ஸ்கி அரை சதமும், லாபுஷேன் வழக்கமான அரை சதமும் அடித்து சிட்னியில் நடந்துவரும் இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்டில் வலுவான அடித்தளம் அமைத்துள்ளனர்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்துள்ளது. ஸ்மித் 31 ரன்களிலும், லாபுஷேன் 67 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். மழையால் 4 மணி நேர ஆட்டம் தடைப்பட்டது. இல்லாவிட்டால், ஆஸி. அணியின் ஸ்கோர் 250 ரன்களை நெருங்கியிருக்கும்.
கடந்த இரு டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் பந்துவீச்சுக்குத் திணறிய ஸ்மித் இந்தப் போட்டியில் தடுமாறவில்லை. மாறாக எதிர்த்து ஆடி, தான் ஃபார்முக்கு வந்துவிட்டதை உணர்த்தினார். இதனால், ஸ்மித்துக்குப் பந்துவீசும்போதெல்லாம் அஸ்வின் சற்று பதற்றத்துடனே காணப்பட்டார்.
மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகப் போட்டியிலே களமிறங்கிய வில் புகோவ்ஸ்கி நிதானமாக ஆடி அரை சதம் அடித்து 62 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய வாரியம் தன் மீது வைத்த நம்பிக்கையை புகோவ்ஸ்கி வீணடிக்கவில்லை.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இன்றைய ஆட்டத்தில் 2 அருமையான கேட்ச் வாய்ப்புகளை நழுவவிட்டார். புகோவ்ஸ்கி 26 ரன்கள் சேர்த்திருந்தபோதும், 32 ரன்கள் சேர்த்திருந்தபோதும் இரு கேட்ச் வாய்ப்புகளை ரிஷப் பந்த் நழுவவிட்டார். இதைப் பிடித்திருந்தால், ஆட்டம் திசை மாறியிருக்கும்.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. வார்னர், புகோவ்ஸ்கி ஆகிய இருவரும் களமிறங்கினர். முழுமையான உடல் தகுதியில்லை என்று வார்னரே தெரிவித்த நிலையில், அணிக்கு தார்மீக பலத்தை அளிக்கும் வகையில் அவரை ஆஸி. அணி நிர்வாகம் களமிறக்கியது.
ஆனால், சிராஜ் வீசிய 4-வது ஓவரில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வார்னர் 5 ரன்களில் வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு லாபுஷேன் வந்து புகோவ்ஸ்கியுடன் இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். மதிய உணவு இடைவேளையின்போது ஆஸி. அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. அதன்பின் ஆட்டத்தில் மழை குறுக்கிடவே நிறுத்தப்பட்டது.
அதன்பின் மழை நின்றபின் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. புகோவ்ஸ்கியின் பேட்டிங்கில் வேகம் எடுக்கத் தொடங்கியது. சில அருமையான ஷாட்களில் பவுண்டரிகளை விளாசினார். 97 பந்துகளில் புகோவ்ஸ்கி தனது முதல் அரை சதத்தை நிறைவு செய்தார்.
புகோவ்ஸ்கி 62 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், ஷைனியின் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு புகோவ்ஸ்கி, லாபுஷேன் இருவரும், 100 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து ஸ்மித் களமிறங்கி லாபுஷேனுடன் சேர்ந்தார். ஸ்மித் வந்தவுடன் அஸ்வின் பந்து வீச அழைக்கப்பட்டார். ஆனால், இந்த முறை அஸ்வின் பந்துவீச்சை ஸ்மித் லாவகமாக எதிர்கொண்டு சமாளித்தார்.
கடந்த இரு போட்டிகளிலும் ஓரளவுக்குச் சிறப்பாக ஆடிய லாபுஷேன், 104 பந்துகளில் அரை சதத்தை நிறைவு செய்தார். தனது 28 இன்னிங்ஸில் 13-வது முறையாக 50 ரன்களுக்கு மேல் லாபுஷேன் சேர்த்துள்ளார்.
55 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்துள்ளது. ஸ்மித் 31 ரன்களுடனும், லாபுஷேன் 67 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT