Last Updated : 05 Jan, 2021 05:13 PM

 

Published : 05 Jan 2021 05:13 PM
Last Updated : 05 Jan 2021 05:13 PM

சராசரி வீரர்களை அனுப்பியுள்ளனர்; ஸ்கூல் பசங்க மாதிரி கிரிக்கெட் விளையாடுறாங்க: பாகிஸ்தான் அணியை வறுத்தெடுத்த ஷோயப் அக்தர்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர்: படம் | ஏஎன்ஐ

புதுடெல்லி

நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடி வருவதைச் சாடியுள்ள முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர், ஸ்கூல் பசங்க மாதிரி பாகிஸ்தான் வீரர்கள் விளையாடுகிறார்கள் என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

நியூஸிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸி. கேப்டன் வில்லியம்ஸனின் அபாரமான இரட்டைச் சதத்தால் 101 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூஸிலாந்து அணி.

தற்போது கிறிஸ்ட் சர்ச் நகரில் 2-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 297 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்ஸன் இரட்டைச் சதம் அடித்து 238 ரன்களும், ஹென்றி நிக்கோலஸ் 157 ரன்களும், டேரில் மிட்ஷெல் 102 ரன்களும் சேர்த்தனர்.

இதனால் நியூஸிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 659 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்துள்ளது. நியூஸிலாந்து அணியைவிட 354 ரன்கள் பின்தங்கி இருக்கும் பாகிஸ்தான் அணி இன்றைய 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 8 ரன்கள் சேர்த்துள்ளது. மிகப்பெரிய இலக்கை முன்வைத்திருக்கும் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவது கடினம்தான்.

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும், வேகப்பந்துவீச்சாளருமான ஷோயப் அக்தர், தனது யூடியூப்பில் பாகிஸ்தான் அணியைக் கடுமையாக விளாசியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:

''பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த மாதிரியான கொள்கையை வெளிப்படுத்துகிறதோ அதுபோன்ற கிரிக்கெட்டைத்தான் பார்க்க முடியும். பாகிஸ்தான் அணியில் சராசரியான வீரர்கள்தான் இருக்கிறார்கள். சராசரியான வீரர்களை வைத்துக்கொண்டு பள்ளிக்கூடங்களில் விளையாடும் கிரிக்கெட்டைத்தான் விளையாட முடியும்.

சராசரியான வீரர்களைக் கொண்ட ஓர் அணி, சராசரியான விளையாட்டைத்தான் விளையாட முடியும். கிடைக்கும் முடிவுகளும் அப்படித்தான் இருக்கும். பாகிஸ்தான் அணி எப்போதெல்லாம் டெஸ்ட் போட்டி விளையாடுகிறதோ அப்போதெல்லாம் அதன் சாயம் வெளுத்துவிடுகிறது.

பள்ளியில் விளையாடப்படும் கிரிக்கெட்டைப் போல் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடுகிறார்கள். கிரிக்கெட் வாரியமும், பள்ளியில் விளையாடும் வீரர்கள் போன்றவர்களைத்தான் அணியில் வைத்துள்ளது. மீண்டும் கிரிக்கெட் மேலாண்மையை மாற்றுவது குறித்து சிந்திப்பார்கள். ஆனால், எப்போது மாற்றப்போகிறார்கள்''.

இவ்வாறு ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x