Last Updated : 05 Jan, 2021 02:56 PM

1  

Published : 05 Jan 2021 02:56 PM
Last Updated : 05 Jan 2021 02:56 PM

அடுத்த சவால்களுக்குத் தயார்: இந்திய டெஸ்ட் அணியில் நடராஜன் ஏன் தேவை?

தமிழக வீரர் நடராஜன் ட்விட்டரில் பதிவிட்ட புகைப்படம்

சிட்னி

சிட்னியில் வரும் 7-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதுதான் பெரும்பாலான இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியில் இடம்பெற்ற தமிழக வீரர் நடராஜனின் பந்துவீச்சும், யார்க்கர் வீசும் துல்லியமும் பிசிசிஐ தேர்வுக்குழுவினரை ஈர்த்தது. இதனால், ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணிக்கு வலைப்பயிற்சியில் பந்துவீசும் வீரராகப் பறந்த நடராஜன், அங்கு மாறிய சூழலாலும், வீரர்களின் காயத்தாலும், ஒரு நாள், டி20 தொடரில் இடம்பெற்று தனது முத்திரையைப் பதித்தார்.

டி20 தொடரில் நடராஜன் பந்துவீச்சைப் பார்த்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தொடர் நாயகனுக்கு உரிய விருதைப் பகிர்ந்து கொண்டார். அடுத்ததாக டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு ஏற்றாற்போல் டெஸ்ட் தொடரில் முகமது ஷமி, உமேஷ் யாதவ் என இரு பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து காயத்தால் தொடரிலிருந்து விலக, நடராஜன், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆனால், ரஞ்சிக்கோப்பைப் போட்டியிலும், முதல்தரப் போட்டியிலும் அதிகமான அனுபவம் நடராஜனுக்கு இல்லாத காரணத்தால், அதிகமான அனுபவம் கொண்ட ஷர்துல் தாக்கூர் தேர்வு செய்யப்படவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. ஏனென்றால், உள்நாட்டில் அதிகமான முதல்தரப் போட்டிகளிலும், ரஞ்சிக் கோப்பைப் போட்டியிலும் தாக்கூர் விளையாடியுள்ளார். சிவப்பு பந்தில் ஸ்விங் செய்வதிலும் நன்று தேறியவர் என்பதால், தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

ஆனால், இதுவரை இந்திய அணி சார்பில் விளையாடும் 11 பேர் கொண்ட அணி அறிவிக்கப்படாததால் நடராஜனுக்கு இடம் கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருக்கலாம்.

அதற்கு ஏற்றாற்போல், நடராஜனும் தனது ட்வி்ட்டர் பக்கத்தில், வெள்ளை நிற இந்திய அணியின் ஜெர்ஸியை அணிந்து புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், “இந்திய அணியின் வெள்ளை நிற ஜெர்ஸியை அணிவது பெருமைக்குரிய தருணம். அடுத்தகட்ட சவால்களுக்குத் தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

நடராஜன் ஏன் டெஸ்ட்டுக்குத் தேவை?

இந்திய அணியில் ஜாகீர்கான், ஆஷிஸ் நெஹ்ரா, இர்பான் பதான் ஆகியோருக்குப் பின் தேர்ந்த இடது கை வேகப்பந்துவீச்சாளர்கள் யாரும் சோபிக்கவில்லை. ராஜஸ்தானின் அங்கித் சவுத்ரி சிறப்பாகப் பந்துவீசினாலும் காயத்தால் ஜொலிக்க முடியவில்லை. ராஜஸ்தானின் கலீல் அகமது அணிக்குள் வந்தாலும் துல்லியத்தன்மை இல்லை, வேகம் இல்லை என்பதால், அவரும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

ஆனால், தமிழக வீரர் நடராஜன் சராசரியாக 130 கி.மீ. வேகத்துக்கு அதிகமாகப் பந்துவீசும் திறன் உடையவராகவும், ஓரளவுக்குத் துல்லியமாகப் பந்துவீசும் திறமை உடையவராகவும் இருக்கிறார்.

இந்திய அணியில் வலதுகை வேகப்பந்துவீச்சாளர்களே நிரம்பி இருக்கும்போது, பந்துவீச்சில் வேறுபாடு காட்டுவதற்கு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் அவசியம். அதிலும் இடதுகை பந்துவீச்சாளர்கள் 'அரவுண்ட் ஸ்டிக்கில்' இருந்து பந்துவீசும்போது, அதை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்கள் பந்தைக் கணித்து ஆடி, செட்டில் ஆவதற்கு அதிகமான நேரம் ஆகும்.

அதுமட்டுமல்லாமல் 'அரவுண்ட் ஸ்டிக்கில்' இருந்து பந்து வலதுகை பேட்ஸ்மேனை நோக்கி வரும்போது நிச்சயம் அச்சுறுத்தலாகவே இருக்கும். எந்த நேரத்திலும் விக்கெட் வீழும் என்று நம்பலாம். மேலும், பந்துகளை 'அரவுண்ட் ஸ்டிக்கில்' இருந்து ஸ்விங் செய்யும்போது, வலதுகை பேட்ஸ்மேன்கள் எளிதாக கால்காப்பில் வாங்கி விக்கெட்டுகளைப் பறிகொடுக்கவும் முடியும்.

ஆதலால், இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் தங்களின் வேகத்தோடு லேசாக ஸ்விங் செய்தாலே வலது கை பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும்.

ஆனால், அரவுண்ட் திசையில் இருந்து வலதுகை பந்துவீச்சாளர்கள் பந்து வீசினால், இடது கை பந்துவீச்சாளர்கள் வீசும் அளவுக்கு துல்லியமும், பேட்ஸ்மேன்களை கால்காப்பில் வாங்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்வதும் கடினமாகிவிடும்.

இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராகவும் நடராஜன் போன்ற இடதுகை பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது, அவர் பந்தை நேராகவோ அல்லது விக்கெட்டுக்கு மேலே இருந்து நகர்த்தவோ அல்லது அரவுண்ட் விக்கெட்டில் சற்று சாய்வாகவோ பந்துவீச முடியும்.

அதிலும் குறிப்பாக வலதுகை பேட்ஸ்மேன்களுக்கு இடதுகை பேட்ஸ்மேன்கள் அரவுண்ட் தி விக்கெட்டிலிருந்து வீசும்போது பந்து அகலமாகவும், சில நேரங்களில் ஸ்விங் செய்யும்போது கால்காப்பில் வாங்கி ஆட்டமிழக்கவும் வாய்ப்புள்ளது. ஆதலால், நடராஜன் போன்ற இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் அணியில் இருப்பது ஆஸ்திரேலிய அணிக்குப் பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கும்.

20 முதல்தரப் போட்டிகளில் பங்கேற்று 54 விக்கெட்டுகளைத்தான் நடராஜன் வீழ்த்தியிருந்தாலும், ஐபிஎல் தொடரில் அவரின் பந்துவீச்சும், டி20, ஒருநாள் போட்டியில் பந்துவீச்சும் நிச்சயம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்குத் தெரிந்திருக்கும்.

ஐபிஎல் தொடரைவிட, ஆஸ்திரேலியாவுக்கு வந்தபின் நடராஜன் தனது பந்துவீச்சில் வேகத்தை அதிகப்படுத்தியுள்ளார். துல்லியத்தன்மையை மேம்படுத்தியுள்ளார். நிச்சயம் நடராஜனின் எதிர்பாராத யார்க்கர்கள், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் கால்களில் தோட்டா பாய்ச்சியதைப் போல் வலுவாக இறங்கி விக்கெட்டைப் பெற்றுத்தரும் என்பதில் சந்தேகமில்லை.

இந்திய அணி நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது என நினைக்கும் தருணத்தில் நடராஜன் அணிக்கு நிச்சயம் தேவை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x