Published : 05 Jan 2021 10:48 AM
Last Updated : 05 Jan 2021 10:48 AM
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார் என்று பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
ஏற்கெனவே காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர்கள் இசாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் விலகி பெரும் பின்னடைவுகளை இந்திய அணி சந்தித்து வருகிறது. இந்த சூழலில் கோலி இல்லாத நிலையில், 3-வது டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கை பலப்படுத்தும் பொருட்டு கே.எல். ராகுல் களமிறக்கப்படலாம் என பேச்சு எழுந்தநிலையில் காயத்தால் ராகுல் விலகியுள்ளார்.
இதனால் அடுத்தப் போட்டியில் ரிஷப்பந்த், விருதிமான் சாஹா இருவரில் ஒருவரைத்தான் தேர்வு செய்ய வேண்டிய நிலையில் அணி நிர்வாகம் இருக்கிறது. இருவருமே பேட்டிங்கில் ஃபார்ம் இல்லாமல் இருக்கும் நிலையில் இவர்கள் தேர்வு செய்தாலும் அணியின்பேட்டிங் பலப்படுவது கடினம். அதிலும் ரிஷப்பந்த் கீப்பிங்கில் பல கேட்சுகளை கடந்த போட்டியில் கோட்டை விட்டுள்ளார், பேட்டிங்கிலும் எதிர்பார்த்த அளவு சிறப்பாகச் செயல்படவில்லை.
விருதிமான் சாஹா கீப்பிங் சிறப்பாகச் செயல்பட்டாலும், பேட்டிங்கில் மோசமாக இருக்கிறார். கே.எல்.ராகுலுக்கு பதிலாக மாற்று வீரர் களமிறக்குப்படுவாரா என்பது குறித்து பிசிசிஐ ஏதும் தெரிவிக்கவில்லை.
மெல்போர்னில் கடந்த சனிக்கிழமை நடந்த பயிற்சியின் போது கே.எல்.ராகுலின் இடது மணிக்கட்டில் பந்துபட்டு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சையளிக்கும் அவரால் பேட் செய்ய இயலவில்லை. இதையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்துவரும் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ராகுல் விலகியுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
கே.எல்.ராகுல் உடனடியாக நாடு திரும்பி, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் சேர்ந்து பயிற்சி மற்றும் உடற்தகுதியில் ஈடுபடஉள்ளார்.
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில், “ கே.எல்.ராகுலின் இடதுகை மணி்க்கட்டில் பயிற்சியின்போது, பந்து பட்டதில் காயம் ஏற்பட்டது. அவருக்கு லேசான தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதால், அவரால் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், அடுத்துவரும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் ராகுல் விளையாடமாட்டார். உடனடியாக நாடு திரும்பும் ராகுல், பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடெமியில் சேர்ந்து பயிற்சி எடுக்க உள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வரும் 7-ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. ஆஸ்திரேலியத் தொடரை முடித்துவிட்டு தாயகம் திரும்பும் இந்திய அணி, பிப்ரவரி 5-ம் தேதி முதல் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT