Published : 01 Jan 2021 02:45 PM
Last Updated : 01 Jan 2021 02:45 PM
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணியில் தமிழக வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. .
சிட்னியில் வரும் 7-ம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் தமிழக வேகப்பந்துவீச்சாளர் டி.நடராஜன் இந்திய அணியில் அறிமுகமாக அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம், இந்திய அணி மோசமான தோல்வி அடைந்தது. ஆனால், மனம் துவண்டுவிடாமல், மெல்போர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி பதிலடி கொடுத்துள்ளது.
ஏற்கெனவே காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா தொடரிலிருந்து விலகினார். மனைவியின் பிரசவம் காரணமாக விடுப்பு எடுத்து கோலியும் சென்றுவிட்டார். கைமணிக்கட்டு எலும்பு முறிவால் முகமது ஷமியும் டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார்.
இந்தச் சூழலில் உமேஷ் யாதவுக்கும் இடது முழங்காலில் காயம் ஏற்பட்டு டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். உமேஷ் யாதவ் 3-வது டெஸ்ட் போட்டியில் இல்லாத நிலையில், தமிழக வீரர் டி.நடராஜன், நவ்தீப் ஷைனி, ஷர்துல் தாக்கூர் ஆகிய மூவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்பட்டுவந்தது.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசிய தமிழக வீரர் நடராஜன் அணித் தேர்வுக் குழுவினரையும், பயிற்சியாளர் ரவிசாஸ்திரியையும் கவர்ந்துள்ளார். ஆதலால், 3-வது டெஸ்ட் போட்டியில் நடராஜனை அறிமுகம் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது எனத் தகவல்கள் தெரிவித்தன.
பந்துவீச்சைப் பொறுத்தவரை நவ்தீப் ஷைனியை விடவும், நடராஜன் மிகத் துல்லியமாகவும், ஆஸி. பேட்ஸ்மேன்கள் திணறும்வகையிலும் பந்துவீசி வருகிறார். கபில்தேவ், ஷேன் வார்ன், பிரட்லீ போன்ற முன்னாள் ஜாம்பவான்கள் நடராஜன் பந்துவீச்சைப் புகழ்ந்து, யார்க்கர் மன்னன் என்று புகழாரம் சூட்டியுள்ளார்கள்.
பந்துவீச்சு வேகம் மட்டுமே ஷைனியிடம் இருக்கும். துல்லியம், ஸ்விங் செய்தல், பந்துவீச்சில் மாற்றம் செய்தல் போன்றவை குறைவுதான். ஆனால், நடராஜன் பந்துவீச்சில் ஓரளவு வேகம், எதிர்பாராத நேரத்தில் யார்க்கர், அவுட் ஸ்விங் என அருமையாகப் பந்து வீசுவதால், சிட்னி டெஸ்ட் போட்டியில் நடராஜன் அறிமுகம் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார். உமேஷ் யாதவுக்கு பதிலாக டி நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். தலைமைத் தேர்வுக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ரோஹித் சர்மா தனது தனிமைப்படுத்தும் காலத்தை முடித்துவிட்டதால், இந்திய அணியுடன் இணைந்துவிட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 7-ம் தேதி சிட்னியில் நடக்கும் விளையாடும் 11-வீரர்கள் கொண்ட அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.அதில் நடராஜன் இடம் பெற அதிகமான வாய்ப்புள்ளது.
இந்திய அணி விவரம்:
ரஹானே(கேப்டன்),ரோஹித் சர்மா (துணைக் கேப்டன்),மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, கே.எல்.ராகுல், சத்தேஸ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, ஷூப்மான் கில், விருதிமான் சாஹா, ரிஷப்பந்த், ஜஸ்பிரி்த பும்ரா, நவ்தீப் ஷைனி, குல்தீப் யாதவ், ரவிந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், டி.நடராஜன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT