Published : 16 Oct 2015 09:55 PM
Last Updated : 16 Oct 2015 09:55 PM
அபுதாபி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக் 263 ரன்கள் என்ற மாரத்தான் இன்னிங்ஸை ஆட, இங்கிலாந்து 8 விக். இழப்புக்கு 569 ரன்கள் எடுத்துள்ளது.
அபுதாபியில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து தன் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 569 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தானைக் காட்டிலும் 46 ரன்கள் முன்னிலை பெற்றது.
முழுதும் பேட்டிங்குக்குச் சாதகமான மண் ஆட்டக்களத்தில் அலிஸ்டர் குக் பாகிஸ்தானை படுத்தி எடுத்து விட்டார். முடிந்தால் என்னை வீழ்த்துங்கள் என்ற சவாலை ஏற்படுத்திய அலிஸ்டர் குக், 836 நிமிடங்கள் என்ற டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் 3-வது அதிக நேர பேட்டிங் சாதனையை நிகழ்த்தி 528 பந்துகளைச் சந்தித்து 18 பவுண்டரிகளுடன் 263 ரன்கள் எடுத்து 7-வது விக்கெட்டாக ஷான் மசூதிடம் ஆட்டமிழந்தார்.
3-ம் நாளான நேற்று இங்கிலாந்து 290/3 என்று முடித்த போது குக் 168 ரன்களை எடுத்து களத்திலிருந்தார். இன்று 263 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மொத்தம் 836 நிமிடங்கள் பேட் செய்து இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை நிகழ்த்தினார். மொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஹனீப் மொகமட் 1958-ம் ஆண்டு பிரிட்ஜ்டவுனில் மே.இ.தீவுகளுக்கு எதிராக பேட் செய்த போது 337 ரன்கள் எடுத்தார். அதற்கு அவர் எடுத்துக் கொண்ட நேரம் 970 நிமிடங்கள் இதுதான் இன்று வரை அதிக நேரம் பேட் செய்ததற்கான சாதனையாக இருந்து வருகிறது.
இதற்கு அடுத்த இடத்தில் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் கேரி கர்ஸ்டன் உள்ளார். இவர் இங்கிலாந்துக்கு எதிராக 1999ஆம் ஆண்ட் டர்பனில் 275 ரன்கள் எடுத்த போது 878 நிமிடங்கள் பேட் செய்தார்.
தற்போது அலிஸ்டர் குக் 836 நிமிடங்கள் களத்தில் நின்று 263 ரன்கள் எடுத்து 3-வது இடத்தில் உள்ளார்.
குக்கின் ஆசிய சாதனை:
ஆசியாவில் அலிஸ்டர் குக் 2065 ரன்களை எடுத்து ஆசியர் அல்லாத பேட்ஸ்மென் ஒருவர் அதிக ரன்களை ஆசியாவில் குவித்த சாதனையில் முதலிடம் பிடித்துள்ளார், இவருக்கு முன்னதாக ஜாக் காலிஸ் 205 ரன்களை 44 இன்னிங்ஸ்களில் 55.62 என்ற சராசரியில் குவித்திருந்ததே சாதனையாக இருந்தது. அலிஸ்டர் குக் 37 இன்னிங்ஸ்களில் 2065 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 62.57.
குக்கிற்கு இது 3-வது டெஸ்ட் இரட்டைச் சதமாகும். லென் ஹட்டன் 4 இரட்டைச் சதங்களையும், வாலி ஹாமண்ட் 7 இரட்டைச் சதங்களையும் இங்கிலாந்துக்காக எடுத்துள்ளனர். கெவின் பீட்டர்சன் 3 இரட்டைச் சதங்களை எடுத்துள்ளார்.
மேலும் அலிஸ்டர் குக், இந்த மாரத்தான் இன்னிங்ஸில் மொயின் அலியுடன் 116 ரன்களையும், இயன் பெல்லுடன் 165 ரன்களையும், ஜோ ரூட்டுடன் 141 ரன்களையும் ஜோடியாக சேர்த்துள்ளார். பென் ஸ்டோக்ஸ் இன்னும் சிறிது நேரம் நின்றிருந்தால் அவருடனும் ஒரு சதக்கூட்டணி அமைத்திருப்பார் இதுவும் ஒரு சாதனையாக அமைந்திருக்கும். ஆனால் 91 ரன்களை இருவரும் சேர்த்தபோது ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்தார்.
டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோரிலும் இங்கிலாந்து வீரராக 2-ம் இடத்தில் உள்ளார் குக். டெனிஸ் காம்ப்டன் 278 ரன்களை எடுத்ததுதான் பாகிஸ்தானுக்கு எதிரான இங்கிலாந்து வீரர் ஒருவரின் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோராக இருந்தது. இப்போது குக் 263 என்று 2-ம் இடம் பிடித்துள்ளார். மேலும் யு.ஏ.இ.-யில் ஏ.பி.டிவில்லியர்ஸ் அடித்த 278 ரன்களுக்குப் பிறகு அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் குக் தற்போது எடுத்துள்ள 263 ரன்கள்தான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT