Published : 29 Dec 2020 02:56 PM
Last Updated : 29 Dec 2020 02:56 PM
மெல்போர்னில் நடந்த இந்திய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் பந்து வீசுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேர அளவைவிட அதிகமான நேரம் எடுத்துக் கொண்டதற்காக டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கு அபராதமும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் புள்ளிகளையும் குறைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.
கேப்டன் கோலி, வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி இல்லாத நிலையில், மெல்போர்னில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோதியது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸி.அணியை 195 ரன்களில் சுருட்டிய இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் கேப்டன் ரஹானே சதத்தால், 326 ரன்கள் குவித்து 131 ரன்கள் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 200 ரன்களில் இன்று ஆட்டமிழந்தது. இதையடுத்து, இந்திய அணி வெற்றி பெற 70 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
15.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆஸி.க்கு பதிலடி கொடுத்தது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருக்கின்றன.
இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராகப் பந்துவீச அதிகமான நேரத்தை ஆஸ்திரேலிய அணி எடுத்துக்கொண்டது. இதையடுத்து, போட்டி ஊதியத்திலிருந்து 40 சதவீதத்தையும், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் இருந்து 4 புள்ளிகளையும் கழித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஐசிசி எலைட் மேட்ச் ரெப்ரீ டேவிட் பூன் பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக ஐசிசி வெளியிட்ட அறிவிப்பில், “வீரர்கள் மற்றும் உதவிப் பணியாளர்களுக்கான ஐசிசி விதிமுறைகள் பிரிவு 2.22ன்படி, நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் இரு இன்னிங்ஸிலும் பந்துவீசத் தவறியதால், இரு இன்னிங்ஸுக்கும் சேர்த்து 40 சதவீதம் போட்டி ஊதியத்திலிருந்து அபராதமாக வீரர்களுக்கு விதிக்கப்படுகிறது.
அதேபோல உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விதிமுறையின்படி நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் ஓவர்களை வீசாமல் அதிகமான நேரம் எடுத்துக் கொண்டதற்காக இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 4 புள்ளிகள் அபராதமாக விதிக்கப்பட்டு, ஆஸ்திரேலிய அணியின் புள்ளியிலிருந்து கழிக்கப்படும். இந்தக் குற்றத்தை ஆஸி. கேப்டன் டிம் பெய்ன் ஒப்புக்கொண்டதால், எந்தவிதமான விசாரணையும் தேவையில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 12 போட்டிகளில் 8 வெற்றி, 3 தோல்வி, ஒரு போட்டி டிரா என மொத்தம் 322 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.
இந்திய அணி 11 போட்டிகளில் 8 வெற்றிகள், 3 தோல்விகள் என மொத்தம் 390 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. நியூஸிலாந்து அணி 300 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், இங்கிலாந்து 292 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT