Published : 28 Dec 2020 05:14 PM
Last Updated : 28 Dec 2020 05:14 PM
மெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ரஹானே தலைமையிலான இந்திய அணி வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது.
3-வது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் சேர்த்து, 2 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கேமரூன் க்ரீன் 17 ரன்களுடனும், கம்மின் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இன்னும் இரு நாட்கள் முழுமையாக இருக்கும் நிலையில் ஆட்டம் முழுமையாக இந்திய அணியின் கைகளுக்குள் வந்துவிட்டது. தற்போது விளையாடிவரும் கேமரூன், கம்மின்ஸ் இருவரில் ஒருவரின் விக்கெட்டை நாளை காலை வீழ்த்திவிட்டாலே ஆஸ்திரேலிய அணி 50 ரன்களுக்குள் சுருண்டுவிடுவது உறுதியாகிவிடும்.
4-வது நாளைப் பொறுத்தவரை ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கும், சுழற்பந்துவீச்சுக்கும், ஒத்துழைக்கும் வகையில் இருக்கும். பந்துகள் வேகமாக பேட்ஸ்மேனை நோக்கி வரும் என்பதால், ஷாட்கள் விளையாட அருமையாக இருக்கும். டிஃபென்ஸ் விளையாடுவதைவிட ஷாட்களை அதிகமாக ஆடமுடியும்.
ஆதலால், நாளை ஆட்டம் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். நாளை காலை தேநீர் இடைவேளைக்குள், காலை நேர பனியைப் பயன்படுத்தி ஆஸ்திரேலிய அணியைச் சுருட்டிவிட்டால் இந்திய அணிக்கு வெற்றி நிச்சயம். அடிலெய்டில் அடைந்த தோல்விக்கு ரஹானே படை பதிலடி கொடுக்கலாம்.
இந்திய அணியைப் பொறுத்தவரை 2-வது இன்னிங்ஸில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். உமேஷ் யாதவ் காயத்தால் பெலிவியன் திரும்பிய நிலையில், சிராஜும், பும்ராவும் சேர்ந்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களைக் கட்டிப்போட்டனர்.
அதிலும் அறிமுக வீரர் சிராஜ் சில இன்னிங்ஸ்களை நேர்த்தியாக வீசி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களைத் திணறவிட்டார். பும்ரா தனக்கே உரிய துல்லியமான பந்துவீச்சை வெளிப்படுத்தி திணறடித்தார்.
உமேஷ் யாதவுக்கு ஏற்பட்டுள்ளது லேசான காயம்தான் எனத் தெரியவந்துள்ளதால், நாளை அவர் களமிறங்கி பந்துவீசக்கூடும் எனத் தெரிகிறது. அவ்வாறு உமேஷ் களமிறங்கினால், ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் விரைவாக ஆட்டமிழக்க நேரிடும்.
மறுபுறம், அஸ்வினும், ஜடேஜாவும் சேர்ந்து சுழற்பந்துவீச்சால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்தனர்.
உணவு இடைவேளைக்குப் பின் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் சேர்த்திருந்தது. ஆனால், தேநீர் இடைவேளைக்குப் பின், 68 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துக்குச் சென்றது.
முதல் இன்னிங்ஸில் ஆஸி. அணி 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. போட்டியின் நேற்றைய 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் சேர்த்திருந்தது.
ரஹானே 104 ரன்களுடனும் (12 பவுண்டரி), துணையாக ஆடிய ரவீந்திர ஜடேஜா 40 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இருவரும் இன்றைய 3-ம் நாள் ஆட்டத்தைத் தொடங்கினர்.
ரஹானே கூடுதலாக 8 ரன்கள் சேர்த்து 112 ரன்களுடன் இருந்தபோது, லாபுஷேனால் ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேறினார். ஜடேஜாவின் தேவையில்லா அழைப்பால் ரஹானே ஓடிச் சென்று ரன் அவுட் ஆனார். இதுதான் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. இருவரும் 6-வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
ஜடேஜா 132 பந்துகளில் தனது 15-வது அரை சதத்தை நிறைவு செய்தார். பொறுமையிழந்த ஜடேஜா 57 ரன்கள் சேர்த்திருந்தபோது ஸ்டார்க் வீசிய பவுன்ஸரைத் தூக்கி அடிக்க முற்பட்டு கம்மின்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அதன்பின் வந்த உமேஷ் யாதவ் (9) ரன்களில் நாதன் லேயான் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். அஸ்வின் 14 ரன்களில் ஹேசல்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பும்ரா ரன் ஏதும் சேர்க்காமல் லேயானிடம் விக்கெட்டை இழந்தார். இந்திய அணி உணவு இடைவேளைக்குள்ளாக 326 ரன்களுக்கு ஆட்டமிழந்து 131 ரன்கள் முன்னிலை பெற்றது.
2-வது இன்னிங்ஸை ஆஸி.யின் மாத்யூ வேட், ஜோ பர்ன்ஸ் ஆட்டத்தைத் தொடங்கினர். ஆட்டம் தொடங்கி உமேஷ் வீசிய 4-வது ஓவரில் ரிஷப் பந்த்திடம் கேட்ச் கொடுத்து பர்ன்ஸ் 4 ரன்களில் வெளியேறினார்.
ஜோ பர்ஸ் சொதப்பலான ஆட்டம் கடந்த 15 இன்னிங்ஸ்களுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. இதுவரை 125 ரன்களுக்குள்ளாகவே பர்ன்ஸ் அடித்துள்ளார். அனேகமாக அடுத்த போட்டியில் தொடக்க வீரர்களில் மாற்றம் கொண்டுவரப்படலாம்.
அடுத்துவந்த லாபுஷேன், மேத்யூவேட் உடன் சேர்ந்தார். இருவரும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. அஸ்வின் வீசிய 18-வது ஓவரில் பந்தை தடுத்து ஆட லாபுஷேன் முயன்றபோது, பேட்டின் நுனியில் பட்ட ஸ்லிப்பில் இருந்த ரஹானேவிடம் பந்து தஞ்சமடைந்தது. லாபுஷேன் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஸ்மித் களமிறங்கி மேத்யூவுடன் இணைந்தார். தொடக்கத்திலிருந்தே ஸ்மித் அதிகமாக லெக் ஸ்டெம்ப்பை வெளிக்காட்டி ஆடிவந்தார். இதைக் கவனித்த பும்ரா அதைக் குறிவைத்தே ஸ்மித்துக்குப் பந்துவீசினார்.
பும்ரா வீசிய 33-வது ஓவரில் ஸ்மித் லெக் ஸ்டெம்ப்பை விட்டு அதிகமாக நகர்ந்து ஆடத் தொடங்கியுவுடன் அதை நோக்கி வீசிய பந்து ஸ்மித்தின் பேடில் பட்டு போல்டானது. ஸ்மித் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்து வந்த டிராவிஸ் ஹெட், மேத்யுவுடன் சேர்ந்தார். ஜடேஜா வீசிய 44-வது ஓவரில் கால்காப்பில் வாங்கி மேத்யூ 40 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் கேமரூன் க்ரீன் வந்தார். சிராஜ் பந்துவீச்சில் 2-வது ஸ்லிப்பில் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து, ஹெட் 17 ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
6-வது விக்கெட்டுக்கு வந்த கேப்டன் பெய்னும் ஒரு ரன் சேர்த்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் ரிஷப் பந்த்திடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 42 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த ஆஸ்திரேலிய அணி அடுத்த 47 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
கம்மின்ஸ், 15 ரன்களிலும், கேமரூன் 17 ரன்களிலும் பேட் செய்து வருகின்றனர். இந்தியத் தரப்பில் ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், பும்ரா, சிராஜ், அஸ்வின், உமேஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT