Last Updated : 22 Oct, 2015 07:47 AM

 

Published : 22 Oct 2015 07:47 AM
Last Updated : 22 Oct 2015 07:47 AM

இந்திய அணியின் பிரச்சினை என்ன?

ஒரு காலத்தில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்கூலி ஜோடி நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தித் தருவார்கள். அப்படியும் போட்டியில் இந்தியா தோற்றுப்போகும். காரணம், அந்தத் தொடக்கத்தை வெற்றியாக மாற்றத்தக்க வலிமை கீழ்நிலை மட்டை வரிசையில் இருக்காது. மைக்கேல் பெவன் போன்ற மட்டையாளர்களோ ஷான் பொல்லாக், லான்ஸ் குளூஸ்னர் போன்ற ஆல்ரவுண்டர்களோ இல்லாததால் நல்ல தொடக்கங்கள் பல விழலுக்கு இறைத்த நீராக ஆகியிருக்கின்றன.

யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி போன்றோர் வருகையால் இந்த நிலை மாறியது. பல தொடக்கங்கள் வெற்றியாக மாறத் தொடங்கின. தொடக்க நிலையில் இருப்பவர்களின் மீதான பளு குறைந்தது. 2002 முதல் அண்மைக் காலம்வரை இந்த நிலை நீடித்திருந்தது. இந்த நிலை இப்போது மாறியிருப்பதுதான் இந்தியா அண்மைக் காலத்தில் ஒரு நாள் போட்டிகளில் திணறுவதற்குக் காரணம். யுவராஜ் சிங் இப்போது அணியில் இல்லை, தோனியால் பழையபடி ஆட்டத்தை முடித்துவைக்க முடியவில்லை. அந்தப் பணியைச் செய்ய வேண்டிய ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா போன்றவர்கள் இன்னமும் அதற்கேற்ற திறனை வெளிப்படுத்தவில்லை.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்துவரும் ஒருநாள் போட்டித் தொடரில் இந்தப் பலவீனம் நன்றாகத் தெரிகிறது. முதல் போட்டியிலும் மூன்றாவது போட்டியிலும் வெற்றிபெறும் நிலையிலிருந்து இந்தியா சறுக்கியதன் காரணம் ஆட்டத்தை முடித்துவைக்கக்கூடிய 5,6,7-ம் நிலை ஆட்டக்காரர்கள் இல்லாததுதான். முதல் போட்டியில் தோனி களத்தில் நின்றிருந்தும் அவரால் பழையபடி நினைத்த நேரத்தில் வேகத்தைக் கூட்ட முடியவில்லை. ரெய்னாவும் அதைச் செய்யவில்லை. மூன்றாவது ஆட்டத்தில் விராட் கோலியும் தோனியும் 40-வது ஓவருக்கு முன்பே வேகத்தைக் கூட்டியிருக்க வேண்டும். விக்கெட்கள் கையில் இருப்பதால் அவசரப்பட்டு எதுவும் செய்ய வேண்டாம் என அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் இவர்கள் இருவரும் ஆட்டமிழந்தார்கள். ரெய்னா, அஜிங்க்ய ரஹானே போன்றவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. சச்சின், கங்கூலி போன்றோர் எவ்வளவு நன்றாக ஆடினாலும் போதாது; முன் வரிசை ஆட்டக்காரர்களில் யாரேனும் ஒருவர் கடைசிவரை இருந்தால்தான் வெற்றி என்ற நிலை இருந்தது. அதே நிலை இப்போது திரும்பியிருக்கிறது. அன்று அதை யுவராஜும் தோனியும் மாற்றினார்கள். இன்று யார் மாற்றப்போகிறார்கள்?

யார் எந்த வரிசையில் ஆடுகிறார் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். சச்சின், சேவாக் ஆகியோர் ஆடிக்கொண்டிருந்தபோது தோனி சில சமயம் 4 அல்லது 5-ம் இடத்தில் களம் இறங்குவார். சில சமயம் 6 அல்லது 7-ம் இடத்தில் இறங்குவார். ஆட்ட நிலவரத்துக்கு ஏற்ப இதையெல்லாம் மாற்றிக்கொண்டுதான் இருக்க வேண்டும். எனவே முதல் இரு போட்டிகளில் ரஹானேயை 3-ம் இடத்தில் அனுப்பியது, மூன்றாம் போட்டியில் 5-ம் இடத்தில் அனுப்பியது ஆகியவை எல்லாம் நடக்கத்தான் செய்யும். பல மாற்றங்களைக் கண்டுவரும் இந்திய அணியில் நிலை பெற்ற மட்டை வரிசையை எதிர்பார்க்க முடியாது. ஓரிருவர் எந்த இடத்திலும் ஆடக்கூடியவர்களாக இருக்கத்தான் வேண்டும்.

ரெய்னா முதல் நான்கு இடங்களில் ஆடப்போவதில்லை. 5 அல்லது 6-ம் இடத்தில் அவர் ஆடுவது உறுதி. இந்நிலையில் அவர் கூடுதல் முனைப்புடன் தன் ஆட்டத் திறனை வெளிப்படுத்தியாக வேண்டும். கடைசிப் பத்து ஓவர்களில் ஆடும் வாய்ப்பு பிறரைக் காட்டிலும் அவருக்குத்தான் அதிகம் கிடைக்கும். எனவே ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவைப்பதில் அவரது திறன் அதிகரித்தே ஆக வேண்டும். தேவைப்பட்டால் இந்தப் பங்கினைச் செய்வதற்கு கோலி, ரஹானே ஆகியோரும் தயாராக இருக்க வேண்டும். தோனி ஆட்டத்தை முடித்துவைப்பதில் திறமைசாலிதான். ஆனால் எத்தனை நாளுக்கு அவர் மட்டுமே இதைச் செய்துகொண்டிருக்க முடியும்? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஆட்டத் திறன் அவரிடம் இப்போது இல்லை என்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. குறிப்பாக பெரிய ஷாட்டுகளை அவரால் முன்புபோல அடிக்க முடியவில்லை. ஆனால் மட்டை வரிசையின் நங்கூரம் போல அவரால் செயல்பட முடிகிறது. ஒற்றை ரன்களை எடுக்கும் திறன், வேகமாக ஓடி ரன் எடுக்கும் திறன் ஆகியவை அவரிடம் பத்திரமாக உள்ளன. இந்நிலையில் வேகத்தை முடுக்கி விட்டு ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் பொறுப்பினை கோலி, ரெய்னா, ரஹானே போன்றவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். தோனி சொல்வதைப் போல, மட்டை வரிசையில் இந்த இடத்தில் தான் ஆடுவேன் என்னும் இறுக்கமான உணர்வினை அணியினர் கைவிட வேண்டும். அப்போதுதான் வெற்றி கைவசமாகும். இல்லையேல் இப்படித்தான் வாய்க்கு எட்டாமல் போகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x