Published : 25 Dec 2020 10:18 AM
Last Updated : 25 Dec 2020 10:18 AM
இந்திய அணியின் தேர்வுக் குழுவுக்கு தலைவரும், இரு உறுப்பினர்களும் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். தலைவராக முன்னாள் வீரர் சேத்தன் சர்மாவும், உறுப்பினர்களாக அபே குருவில்லாவும், டேபாஷிஸ் மொகந்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
5 பேர் கொண்ட தேர்வுக்குழுவில் 3 இடங்கள் காலியாக இருந்தன. சுனில் ஜோஷி, ஹர்விந்தர் சிங் இருவரும் தேர்வுக்குழுவில் மற்ற இரு உறுப்பினர்கள் இவர்கள் இருவரும் தற்போது ஆஸ்திரேலியப் பயணத்தில் உள்ளனர்.
மதன்லால், ஆர்பி சிங், சுலக்சனன் நாயக் ஆகியோர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழு காலியாக இருக்கும் 3 இடங்களுக்கு 11 பேரை நேர்காணல் செய்து 3 பேரையும் தேர்வு செய்தது.
வடக்கு மண்டலத்திலிருந்து விஜய் தய்யா, அஜய் ரத்ரா, நிகில் சோப்ரா, மணிந்தர் சிங் ஆகியோர் போட்டியி்ட்ட நிலையில் சேத்தன் சர்மா தேர்வு செய்யப்பட்டார். மேற்கு மண்டலத்திலிருந்து அகர்கர், நயன் மோங்கியா போட்டியிட்ட நிலையில் குருவில்லாவும், கிழக்கு மண்டலத்திலிருந்துஒடிசாவைச் சேர்ந்த மொகந்தியும் தேர்வு செய்யப்பட்டார்கள்.
சேத்தன் சர்மா என்றாலே கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் நினைவுக்கு வருவது அவர் 1987-ம் ஆண்டு உலகக் கோப்பையில் எடுத்த ஹாட்ரிக் விக்கெட்டும், அதைவிட நினைவில் இருப்பது, 1986-ம் ஆண்டு ஷார்ஜா கோப்பையில் கடைசிப்பந்தில் பாகிஸ்தான் வீரர் மியான்தத்தை சிக்ஸர் அடிக்கவிட்டு பாகிஸ்தான் வென்றதுதான் நினைவில் நிற்கும்.
கடந்த 1984 முதல் 1994-ம் ஆண்டுவரை 23 டெஸ்ட், 65 ஒருநாள் போட்டிகளி்ல விளையாடிய சேத்தன் சர்மா விளையாடியுள்ளார். கடந்த 1993-94-ம் ஆண்டில் ரஞ்சிக் கோப்பைப் போட்டியில் சவுரவ்கங்குலியின் மேற்கு வங்க அணியில் சேத்தன் சர்மா விளையாடியவர். ஹரியாணாவைச் சேர்ந்தவராக சேத்தன் சர்மா இருந்தாலும், மேற்கு வங்கத்துக்காக கடைசியில் விளையாடினார்.
அதேபோல டெண்டுல்கர் கேப்டன் பொறுப்பில் கடந்த 1997-ல் பாகிஸ்தானுக்கு எதிராக சஹாரா ஃப்ரண்ட்ஷிப் கோப்பைப் போட்டியில் குருவில்லா, மொகந்தி இருவரின் பந்துவீச்சும் தொடரை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்ததை யாரும் மறக்க முடியாது. இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்து, விக்கெட்டுகளை வீழ்த்தி கங்குலி தொடர் நாயகன் விருதை பெற்றார். இருப்பினும், மொகந்தி, குருவில்லா பங்களிப்பு பெருமளவு பேசப்பட்டது.
தேர்வுக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்ட சேத்தன் சர்மா கூறுகையில் “ இந்திய கிரிக்கெட்டுக்கு மீண்டும் சேவை செய்ய எனக்கு வாய்ப்புஅளிக்கப்பட்டது மிகப்பெரிய கவுரவம். நான் குறைவாகப் பேசுபவன், அதிகமாகச் செயலில் காட்டும் தன்மை கொண்டவன். எனக்கு வாய்ப்பளித்த பிசிசிஐக்கு நன்றி தெரிவிக்கிறேன்”எனத் தெரிவித்தார்.
அஜித் அகர்கர்தான் தேர்வுக்குழுத் தலைவராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு மும்பை கிரிக்கெட் அமைப்பு ஆதரவு அளிக்கவில்லை. ஏனென்றால், மும்பை கிரிக்கெட் அமைப்பின் தேர்வுக் குழுத் தலைவராக இருந்த போது, அகர்வால் கிரிக்கெட் ஆட்டங்களைக் காண வந்ததில்லை. அதனால்தான் குருவில்லாவுக்கு மும்பை கிரிக்கெட் அமைப்பு ஆதரவு அளித்துள்ளது. கிரிக்கெட் சாதனைகளைப் பொருத்தவரை குருவில்லாவைவிட அகர்கர் சிறப்பாக வைத்திருந்தாலும் குருவில்லாவுக்குதான் ஆதரவு பெருகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT