Last Updated : 20 Dec, 2020 04:45 PM

1  

Published : 20 Dec 2020 04:45 PM
Last Updated : 20 Dec 2020 04:45 PM

'என்னை 28 வயதிலேயே ஓய்வு பெற வைத்துவிட்டார்கள்; மிஸ்பா, வக்கார் யூனுஸ் இருவருமே காரணம்' - முகமது அமிர் வேதனை

பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமிர் : கோப்புப்படம்

கராச்சி

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து நான் 28 வயதிலேயே ஓய்வு பெற்றதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்தான் காரணம். அதுமட்டுமல்லாமல், என் மீது அவப்பெயர் ஏற்படவும் பயிற்சியாளர் வக்கார் யூனுஸ், மிஸ்பா உல் ஹக் இருவரும்தான் காரணம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமிர் வேதனை தெரிவித்துள்ளார்.

28 வயதான பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமிர், கேல்-ஷெல் எனும் பாகிஸ்தான் இணையதளத்துக்குக் கடந்த வாரம் அளித்த பேட்டியில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.

அந்தப் பேட்டியில், “நான் கிரிக்கெட்டிலிருந்து விலக இதுதான் நேரம். ஏனென்றால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் என்னை மனரீதியாக டார்ச்சர் செய்கிறார்கள். அந்த டார்ச்சரை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தற்போதுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கீழ் என்னால் விளையாட முடியாது.

ஒருநாள், டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு என்னால் சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளேன். ஆனால், ஒவ்வொரு மாதமும், அல்லது 2 மாதங்களுக்கு ஒருமுறை என்னுடைய பந்துவீச்சு குறித்து ஏதாவது ஒரு குறையை வாரிய அதிகாரிகள் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்” எனக் குற்றம் சாட்டினார்.

இந்த வீடியோ வெளியிடும்போது, இலங்கையில் இருப்பதாகவும் பாகிஸ்தான் சென்றபின் மற்ற விவரங்களைத் தெரிவிப்பேன் என்றும் அமிர் தெரிவித்திருந்தார். அதன்படி, முகமது அமிர் இன்று மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், பாகிஸ்தான் வாரியம், பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக், பந்துவீச்சுப் பயிற்சியாளர் வக்கார் யூனுஸ் ஆகியோர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த வீடியோவில் முகமது அமிர் கூறியுள்ளதாவது:

''பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக், பந்துவீச்சுப் பயிற்சியாளர் வக்கார் யூனுஸ் இருவரும்தான் என் மீது அவப்பெயர் ஏற்படக் காரணம்.

பாகிஸ்தான் வாரிய அதிகாரிகள் மனதிலும், மக்களிடமும் நான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்பவில்லை. பணம் சம்பாதிப்பதற்காக டி20 லீக் மட்டுமே விளையாடவே விரும்புகிறேன் என்ற வார்த்தையை மெல்ல விஷத்தை ஏற்றுவதுபோல் ஏற்றினர்.

என் மீதான அவத்தோற்றத்தைக் கட்டமைத்தார்கள். இதனால் அணி நிர்வாகம் என் மீது வைத்திருந்த நம்பிக்கை படிப்படியாகக் குறைந்தது. சமூகத்தில் என்னுடைய நல்ல பெயரைக் கெடுக்க முயற்சி செய்தார்கள்.

நான் ஓய்வு அறிவித்தது என்பது மிகவும் கடினமான முடிவு. 28 வயதிலேயே நான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கு பாகிஸ்தான் வாரியம் எனக்கு அளித்த டார்ச்சர்தான் காரணம்.

மிஸ்பா உல் ஹக்

ஒருவர் அமைதியாக இருக்கக் கூடாத நேரம் வந்துவிட்டது என்பதால், நான் பேசுகிறேன். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்குள், அணிக்குள் என்ன நடக்கிறது என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால், இந்த விவகாரத்தை நான் எழுப்புகிறேன்.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து நான் ஓய்வு அறிவித்தபின் ஒருநாள், டி20 போட்டிகளில் மட்டும் நான் விளையாடுவேன் என்று அறிவித்தேன். நான் பல போட்டிகளில் சிறப்பாக விளையாடிய பின்பும், அணி நிர்வாகம் என்னை நியூஸிலாந்து தொடருக்குத் தேர்வு செய்யவில்லை என்பது எனக்கு வேதனையளித்தது.

நான் டி20 லீக் போட்டிகளில் மட்டுமே விளையாடும் வீரராக இருந்திருந்தால், நியூஸிலாந்து தொடருக்கு என்னைத் தேர்வு செய்யாதபோது நான் கவலைப்படத் தேவையில்லை, அதற்கு பதில் அளித்திருக்கத் தேவையில்லை.

மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால், அணி நிர்வாகம் ஒவ்வொரு முறையும் என்னைக் குறைகூறுவதுதான். எனக்கு எதிராக எந்த விரோதமும் இல்லை என்று கூறும் பாகிஸ்தான் வாரியம், என் மீதான குற்றச்சாட்டுகளை மூத்த வீரர் என்ற அடிப்படையில் மரியாதை நிமித்தமாக நேரடியாக என்னிடம் தெரிவிக்கலாம். நியூஸிலாந்து தொடருக்கு என்னைத் தேர்வு செய்யவில்லை என்பதைக்கூட தெரிவித்திருக்கலாம்.

பாகிஸ்தான் நிர்வாகத்தின் எதிர்மறையான நடத்தையை நான் கடந்த ஆண்டிலிருந்து பொறுத்துக் கொண்டுதான் அணியில் இருந்தேன். என்னுடைய பந்துவீச்சு பற்றி அவர்கள் பேசுவதென்றால், பாகிஸ்தான் டி20 லீக்கில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினேன். ஆசியக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாகப் பந்துவீசினேன். கடந்த ஆண்டு உலகக் கோப்பையில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக இருந்தேன்.

ஐசிசி பந்துவீச்சாளர் தரவரிசையில் இன்னும் நான் இருக்கிறேன். லீக் போட்டிகளில் என்னுடைய பந்துவீச்சுத் திறமையைக் காணலாம். இதற்கு மேல் ஒரு பந்துவீச்சாளராக நான் என்ன செய்ய முடியும்?

நான் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்ட குற்றத்துக்கு விலை கொடுத்துவிட்டேன். எனது செயலுக்கு மன்னிப்பும் கேட்டுவிட்டேன். அதற்குரிய பல விளைவுகளையும் சந்தித்தேன்.

வாக்கர் யூனுஸ்

நான் அதோடு வீழ்ந்துவிடவில்லை. எழுந்தேன், விளையாடினேன், ஒவ்வொருவரையும் சந்தித்தேன். என்னால் முடிந்தவற்றை பாகிஸ்தான் அணிக்காகச் செய்தேன்.

நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதும் என்னைப் பற்றித் தெரியாமல், என்னைப் பற்றி சிலர் கணித்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தேன். பாகிஸ்தானுக்கு விளையாட விருப்பம் இல்லாமல் டி20 லீக்கில் விளையாட விருப்பமாக இருக்கிறது என்று எப்போது நான் கூறினேன்?

ஆனால், என்னை தேசிய அணியில் தேர்வு செய்யாமல் ஒதுக்கி வைக்கும்போது எனக்கு வேறு என்ன வழி இருக்கிறது. டி20 லீக் போட்டிகளில் விளையாடித்தான் என்னை நான் நிரூபிக்க முடியும்.

எனக்கு சுயமரியாதை இருக்கிறது. அதில் சமரசம் செய்யமாட்டேன். மதிப்பு கொடுப்பதிலும், மதிப்பைப் பெறுவதிலும் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன்''.

இவ்வாறு அமிர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x