Last Updated : 20 Dec, 2020 01:58 PM

 

Published : 20 Dec 2020 01:58 PM
Last Updated : 20 Dec 2020 01:58 PM

இந்தியாவின் அடிலெய்ட் டெஸ்ட் சோகம்; மறைந்து கிடக்கும் சில சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள்; அகர்வாலின் மைல்கல்: தோனியை முறியடித்த பெய்ன்

இந்திய அணியை 2-வது இன்னிங்ஸில் ஆட்டமிழக்கச் செய்தபின் வெளியேறும் ஆஸி. அணி வீரர்கள்: படம் உதவி | ட்விட்டர்.

அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஆஸ்திரேலிய மண்ணில் மோசமான தோல்வியைப் பதிவு செய்துள்ளது.

இந்தியாவின் இந்த அதிர்ச்சிகரமான தோல்விக்கு ஆஸ்திரேலிய அணியின் ஹேசல்வுட், கம்மின்ஸ் ஆகிய இரு பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சுதான் முக்கியக் காரணமாக இருந்தது. இந்தியாவின் இந்தத் தோல்வி, ஆஸி.யின் வெற்றியில் ஏராளமான சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள் மறைந்து கிடக்கின்றன.

அதுகுறித்த விரிவான பார்வை.

36- டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்குமுன் கடந்த 1974-ல் இங்கிலாந்துக்கு எதிராக 42 ரன்களில் சுருண்டதே இந்திய அணியின் மோசமான ஸ்கோராக இருந்தது. இந்தப் போட்டி கூட 3-வது இன்னிங்ஸ்தான். ஆனால், அதில் இந்திய அணி ஃபாலோ ஆன் பெற்று விளையாடியது.

1- டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஓர் அணியில் உள்ள 11 பேட்ஸ்மேன்களுமே ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தது அடிலெய்ட் டெஸ்ட்டில்தான் முதல் முறை. இதற்கு முன் கடந்த 1924-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி 30 ரன்கள் சேர்த்தது அதில் உதிரிகள் மட்டும் 11 ரன்கள் சென்றன.

19- டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 விக்கெட்டுக்கும் அதிகமான வித்தியாசத்தில், குறைந்த ஸ்கோரில் இந்திய அணி தோற்பது இது 19-வது முறையாகும். 6 விக்கெட்டுக்கும் அதிகமான வித்தியாசத்தில் மிகக்குறைந்த ஸ்கோரில் இதுவரை 7 தோல்விகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் நடந்துள்ளன.

25- ஆஸி.வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட்டுக்கு இந்தியாவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை எடுக்க மொத்தம் அவருக்கு 25 பந்துகள் மட்டுமே தேவைப்பட்டது. அதிவேகமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை இதுவரை இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட், ஆஸி.யின் எரின் டோஹேக் வைத்துள்ளனர்.

இருவரும் 19 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதில் ஆஸி. வீரர் டோஹேக் கடந்த 1947-48இல் இந்திய அணிக்கு எதிராக பிரிஸ்பேன் டெஸ்ட்டில் இந்தச் சாதனையைச் செய்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2015-ல் ட்ரென்ட்பிரிட்ஜில் பிராட் 19 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

8- ஹேசல்வுட் இந்த ஆட்டத்தில் 8 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 5 விக்கெட்டுகளுக்கு 8 ரன்கள் விட்டுக்கொடுத்த வகையில் 2-வது ஆஸ்திரேலியர் ஹேசல்வுட்.

1.6- கடந்த 1947-ல் இருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தும்போது, குறைந்த எக்கானமி வைத்துள்ள ஆஸி. வீரர் டோஹேக் மட்டுமே. இவர் 1.6 எக்கானமி வைத்துள்ளார், 2 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

31- இந்தப் போட்டியில் கம்மின்ஸ் 4 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் கம்மின்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் 150-வது விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்திய 2-வது வீரர் ஆவார். டென்னிஸ் லில்லி, வார்ன், ஸ்டூவர்ட்மெக்கில், கிளாரே கிரிமெர்ட் ஆகியோர் விரைவாக 150 விக்கெட்டுகளை எட்டினர் அவர்களுடன் கம்மின்ஸ் சேர்ந்தார். கம்மின்ஸ் 31 இன்னிங்ஸில் 150 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

19- இந்திய அணியின் மயங்க் அகர்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக 1000 ரன்களை எட்டிய 3-வது வீரர் எனும் பெருமையைப் பெற்றார். இதற்கு முன் வினோத் காம்ளி, புஜாரா ஆகியோருக்குப்பின் அகர்வால் வந்துள்ளார். அகர்வால் 19-வது இன்னிங்ஸில் 1000 ரன்களை எட்டினார். காம்ப்ளி 14 இன்னிங்ஸிலும், புஜாரா 18 இன்னிங்ஸிலும் எட்டினர்.

8- பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 8-வது வெற்றியாகும்.

1-விராட் கோலி கேப்டன்ஷிப்பில் டாஸ் வென்று இந்திய அணி தோற்றது இதுதான் முதல் முறையாகும். இதற்கு முன் 25 டெஸ்ட் போட்டிகளில் 21 டெஸ்ட் போட்டிகளில் கோலி டாஸ் வென்றுள்ளார்.

2014- கடந்த 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கடைசியாக டாஸ் வாய்ப்பில் தோல்வி அடைந்தது. அதன்பின் 6 ஆண்டுகளுக்குப் பின் டாஸில் நேற்று தோற்றது. 2014-ம் ஆண்டில் காபாவில் நடந்த டெஸ்ட்டில் டாஸில் தோற்று இந்திய அணியும் தோல்வி அடைந்தது.

564- அடிலெய்ட் ஓவலில் இந்திய, ஆஸி இரு அணிகளும் சேர்ந்து 564 ரன்கள் சேர்த்ததுதான் இந்த மைதானத்தில் சேர்க்கப்பட்ட குறைவான ஸ்கோராகும். இதற்கு முன் ஆஸி. மே.இ.தீவுகள் அணிகள் சேர்ந்து 675 ரன்கள் சேர்த்ததுதான் குறைந்தபட்சமாக இருந்தது.

1,246- அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இந்தியா, ஆஸி அணிகள் சேர்ந்து மொத்தம் 1,246 பந்துகள் வீசியுள்ளன. அடிலெய்ட் மைதானத்தில் ஒரு டெஸ்ட்டில் வீசப்பட்ட குறைந்த பந்துகள் இதுவாகும்.

201- ஹேசல்வுட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை நிறைவு செய்த 18-வது வீரர் என்ற பெருமைையைப் பெற்றார்.

2- ஆஸி.கேப்டன் டிம் பெய்ன் அரை சதம் மற்றும் 5 டிஸ்மிசல்களை இந்த டெஸ்ட்டில் செய்துள்ளார். 2-வது முறையாக இதேபோன்று பெய்ன் செய்துள்ளார். இதற்கு முன் 2019-ல் நியூஸிக்கு எதிராக 79 ரன்களும், 5 டிஸ்மிசல்களை பெய்ன் செய்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அரை சதம், 5 டிஸ்மிசல்களை 2 முறை செய்த 2-வது விக்கெட் கீப்பர் எனும் பெயருடன் தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். தோனி இதற்கு முன் நியூஸி.க்கு எதிராக டெஸ்ட் போட்டியில் (52, 56 ) 2 அரை சதங்கள், 6 டிஸ்மிசல்களைச் செய்தார். 2-வதாக 2010-ல் வங்கதேசத்துக்கு எதிராக டாக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியில் 89 ரன்களும் 5 டிஸ்மிசல்களும் செய்தார்.

3- இந்திய அணிக்கு எதிராக 2-வது இன்னிங்ஸில் 5 கேட்ச்சுகளை பெய்ன் பிடித்தார். இதன் மூலம் ஒரு டெஸ்டில் கேப்டனாக இருப்பவர் 5 கேட்ச்சுகளை பிடித்தது 5-வது முறையாகும். இதற்கு முன் தோனி (3), சர்பிராஸ் அகமது (3) இருவரும் ஒரு டெஸ்ட் போட்டியில் 5 கேட்ச்சுகளைப் பிடித்து 3 முறை சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x