Published : 20 Dec 2020 08:01 AM
Last Updated : 20 Dec 2020 08:01 AM
அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கம்மின்ஸ் பந்துவீச்சில் கை மணிக்கட்டில் காயமடைந்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிலெய்டில் நடந்த முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 36 ரன்களில் ஆல் அவுட் ஆகி மோசமான தோல்வியைச் சந்தித்தது. இந்தப் போட்டியில் ஆஸி. வேகப்பந்துவீச்சாளர் கம்மின்ஸ் வீசிய பந்தை எதிர்கொண்ட முகமது ஷமிக்கு கை மணிக்கட்டில் பந்துபட்டது. அப்போது வலியால் துடித்த ஷமி, பேட்டை இறுகப்பிடிக்க முடியாமல் துடித்தார். அணியின் மருத்துவர் வந்து ஷமியின் கையில் வலி நிவாரண ஸ்ப்ரே அடித்தும் ஷமியால் பேட் செய்ய இயவில்லை
இதையடுத்து, ரிட்டர்யட் ஹர்ட் முறையில் தொடர்ந்து பேட் செய்ய முடியாமல் ஷமி வெளியேறினார். மருத்துவர்கள் முகமது ஷமியின் கை மணிக்கட்டை ஸ்கேன் செய்தும், எக்ஸ்ரே செய்தும் பார்த்ததில் அவரின் கை மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
இந்தக் காயம் ஷமிக்கு குணமடைய நீண்டநாட்கள் தேவைப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், ஆஸிக்கு எதிராக அடுத்து விளையாடவுள்ள 3 டெஸ்ட் போட்டிகளிலும் ஷமி விளையாடமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், “முகமது ஷமிக்கு ஏற்பட்ட காயத்தின் தீவிரத்தன்மையால், அவரால் அடுத்துவரும் 3 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட முடியாது. இதனால், பயிற்சிப் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய முகமது சிராஜ், ஷமிக்குப் பதிலாகச் சேர்க்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளன.
அடுத்து நடக்கும் 3 டெஸ்ட் போட்டிகளிலும் கேப்டன் கோலியும் விளையாடமாட்டார், முகமது ஷமியும் அணியில் இல்லாத நிலையில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்திய அணியின் முக்கியப் பந்துவீச்சாளராக, ஸ்விங் பந்துவீச்சை சிறப்பாகக் கையாளக்கூடிய பந்துவீச்சாளராக முகமது ஷமி இருந்து வந்தார். அவர் இல்லாமல் போவது இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவாக அமையும்.
ஆஸி. அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் கூறுகையில், “முகமது ஷமி முதல் தரமான பந்துவீச்சாளர். அவர் இல்லாத நிலையில் அவருக்கு மாற்றாக இந்திய அணிக்கு ஒரு பந்துவீச்சாளர் கிடைப்பது கடினம். இந்திய அணிக்கு ஷமி இல்லாதது பலவீனம்தான்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT