Last Updated : 17 Dec, 2020 09:08 PM

 

Published : 17 Dec 2020 09:08 PM
Last Updated : 17 Dec 2020 09:08 PM

கோலியின் ‘அரிதான ரன் அவுட்’: இந்திய அணியை அடக்கிய ஆஸி. பந்துவீச்சாளர்கள்: பட்டோடி, தோனி சாதனையை முறியடித்த விராட்

ஆஸி.க்கு எதிரான அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் அரை சதம் அடித்த விராட் கோலி : படம் உதவி | ட்விட்டர்.

அடிலெய்ட்

விராட் கோலியின் அரிதான ரன் அவுட், ரஹானேவின் துர்பாக்கிய அவுட் ஆகியவற்றுக்குப் பின், அடிலெய்டில் நடந்து வரும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்கள் அடக்கினர்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் சேர்த்துள்ளது. அஸ்வின் 15 ரன்களிலும், சாஹா 9 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.

விராட் கோலி எனும் சிங்கம் களத்தில் இருந்தவரை ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்கள் பெரும் தலைவலியுடனும், மனப்பதற்றத்துடனும்தான் இருந்தனர். ஆனால், கோலி அரிதான ரன் அவுட்டால் விக்கெட்டை இழந்தபின், ஆஸ்திரேலிய வீரர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் சுமந்திருந்த மலையை இறக்கிவைத்தது போன்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர்.

அப்படியென்றால், கோலி களத்தில் இருக்கும்வரை ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்களை எவ்வாறு பதற்றப்படுத்தி இருப்பார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். கோலி 16 ரன்கள் சேர்த்திருந்தபோது லேயான் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி மூன்றாவது நடுவர் அப்பீல் சென்று அது தோல்வி அடைந்தது.

ஆனால், அதன்பின் ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்கள் தன்னை ஆட்டமிழக்கச் செய்ய எந்த ஒரு சிறிய வாய்ப்பையும் கோலி வழங்கவி்ல்லை. உலகத் தரம்வாய்ந்த சிறந்த பேட்ஸ்மேன் என்பதை கோலி மீண்டும் ஆஸி. மண்ணில் நிரூபித்தார்.

இதில் வருத்தம் என்னவென்றால், ரஹானேவின் தவறான அழைப்பால் ரன் ஓடி ஆட்டமிழந்த கோலி சதம் அடிக்க முடியாமல், 74 ரன்களில் வெளியேறியதுதான். மற்றவகையில் களத்தில் கோலி இருந்தவரை ஆஸி. பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனம்தான்.

இந்த ஆட்டத்தில் கோலி 74 ரன்கள் சேர்த்ததன் மூலம் ஆஸி. அணிக்கு எதிராக 10 டெஸ்ட் போட்டிகளில் 851 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகமான ரன்களைச் சேர்த்த இந்திய கேப்டன்களில் எம்.ஏ.கே.பட்டோடி (829), தோனி (813) ஆகியோரின் சாதனையை கோலி முறியடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையிலேயே விராட் கோலி 2-வது முறையாக ரன் அவுட் ஆனார். அதிலும் கேப்டனாக இருந்து முதல் முறையாக இந்தப் போட்டியில் ரன் அவுட் ஆனார். இதற்கு முன் கடந்த 2011-12ஆம் ஆண்டு ஆஸி. பயணத்தில் அடிலெய்டில் கோலி ரன் அவுட் ஆகியிருந்தார். இப்போது மீண்டும் 8 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அடிலெய்டில் ரன் அவுட் ஆனார்.

கடந்த 2014-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நாட்டிங்ஹாமில் நடந்த டெஸ்ட் போட்டியில் தோனி கேப்டனாக இருந்து ரன் அவுட் ஆனார். அதன்பின் 6 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் போட்டியில் ரன் அவுட் ஆனார். தோனிக்கு முன்பாக, 2003-ல் அடிலெய்ட் டெஸ்ட்டில் கங்குலி ரன் அவுட் ஆனார்.

அதுமட்டுமல்லாமல் கோலி 69 ரன்களைச் சேர்த்தபோது, அடிலெய்ட் மைதானத்தில் 500 ரன்களுக்கு மேல் சேர்த்த மூன்றாவது இந்திய பேட்ஸ்மேன் எனும் சாதனையைப் படைத்தார். இதற்கு முன் சச்சின் (785), விவிஎஸ் லட்சுமண் (549) ஆகியோர் 500 ரன்களுக்கு மேல் சேர்த்திருந்தார்கள். டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார்.

ஐபிஎல் தொடரிலிருந்து பேட்டிங் ஃபார்ம் இல்லாமலும், பயிற்சி ஆட்டங்களிலும் சொதப்பிய பிரித்வி ஷாவுடன் மயங்க் அகர்வால் ஆட்டத்தைத் தொடங்கினார். மிட்ஷெல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் 2-வது பந்தில் பிரித்வி ஷா கிளீன் போல்டாகி டக் அவுட்டில் வெளியேறினார்.

வெளிநாடுகளில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த 3வது வீரர் பிரித்வி ஷா எனும் பெயரைப் பெற்றார்.

இதற்கு முன், கடந்த 1981-ல் சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியில் டென்னிஸ் லில்லி பந்துவீச்சில் கவாஸ்கர் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்திருந்தார். அதன்பின், சிட்டோகிராம் நகரில் வங்கதேசத்துக்கு எதிராக மோர்தசா பந்துவீச்சில் முதல் ஓவரில் வாசிம் ஜாபர் விக்கெட்டை இழந்திருந்தார். அதன்பின் 3-வது வீரராக பிரித்வி ஷா முதல் ஓவரில் ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த புஜாரா, அகர்வாலுடன் சேர்ந்தார். இருவரும் மிகவும் நிதானமாக பேட் செய்தனர். ஒருபுறம் ஸ்டார்க், மறுபுறம் கம்மின்ஸ், ஹேசல்வுட் இருவரும் தங்களின் துல்லியமான பந்துவீச்சாலும், பவுன்ஸலாரும் இந்திய பேட்ஸ்மேன்களைத் திணறடித்தனர்.

கம்மின்ஸ் வீசிய 19-வது ஓவரில் 2-வது பந்தை கட் செய்து விளையாட அகர்வால் முயன்றார். ஆனால், கம்மின்ஸ் மிகவும் அற்புதமான இன்கட்டரை வீசினார். மயங்க் அகர்வாலை ஏமாற்றி, அவரின் கால் இடுக்கில் நுழைந்து ஸ்டெம்ப்பைப் பந்து பதம் பார்த்தது. அகர்வால் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த கோலி, புஜாராவுடன் இணைந்தார். கோலி ஓரளவுக்கு மோசமான பந்துகளை பவுண்டரிகளை விரட்டினார். ஆனால், புஜாரா பவுண்டரியே அடிக்கக் கூடாது என்று முடிவெடுத்து ஆடியதுபோல் இருந்தது.

'டிபென்ஸ் ப்ளே' செய்யலாம். அதற்காக புஜாரா போன்று அதிமந்தமான 'டிபென்ஸ் பேட்டிங்' ஆடுவது அணியின் ஸ்கோர் உயர்வுக்கு ஆபத்தாகும். 160 பந்துகளைச் சந்தித்த புஜாரா 43 ரன்களில் லேயான் பந்துவீச்சில் லாபுஷேனால் கேட்ச் பிடிக்கப்பட்டு வெளியேறினார். இதில் 2 பவுண்டரிகள் மட்டுமே அடங்கும். 3-வது விக்கெட்டுக்கு கோலி, புஜாரா 68 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்துவந்த ரஹானே, கோலி கூட்டணி ஓரளவுக்கு ரன்களை வேகமாகச் சேர்க்கத் தொடங்கினர். கோலியும் தனது இயல்பான ஃபார்முக்குத் திரும்பியது, ஆஸி. பந்துவீச்சாளர்களுக்கு கிலியாக அமைந்தது. ஆனால், ரஹானேவின் தவறான அழைப்பால் தேவையின்றி கோலி 74 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்தனர்.

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை ரஹானே, புஜாராவுடன் 6 முறை 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளார். இதற்கு முன் ராகுல் திராவிட், சச்சின், லட்சுமணனுடன் 6 முறை ஆஸி மண்ணில் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார். அதை கோலி சமன் செய்துள்ளார்.
கோலி ஆட்டமிழந்தவுடன் ஆஸி. வீரர்களுக்கு தார்மீக ரீதியாக உற்சாகம் பிறந்தது. புதிய பந்து எடுத்தபின் பந்துவீச்சில் மீண்டும் ஆஸி. வீரர்கள் நெருக்கடி கொடுத்தனர்.

ஸ்டார்க் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி 42 ரன்களில் ரஹானே ஆட்டமிழந்தார். இதில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கும். அதைத் தொடர்ந்து விஹாரி 16 ரன்கள் சேர்த்திருந்தபோது ஹேசல்வுட் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.

188 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி அடுத்த 18 ரன்களுக்குள் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது.

அஸ்வின், சாஹா ஜோடி களத்தில் உள்ளனர். நாளை புதிய பந்தில் ஸ்டார்க், கம்மின்ஸ் வீசும் பவுன்ஸர்களையும், யார்க்கர்களையும், ஸ்விங் பந்துகளையும் அஸ்வின், சாஹா சமாளிக்க வேண்டும். இவர்களுக்குப் பின் டெய்லன்டர்கள் மட்டுமே இருப்பதால், இந்திய அணி 300 ரன்கள் சேர்த்தாலே பெரிய ஸ்கோராகத்தான் இருக்க முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x