Published : 17 Dec 2020 01:31 PM
Last Updated : 17 Dec 2020 01:31 PM
மிட்ஷெல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் 2-வது பந்திலேயே பிரித்வி ஷா ஆட்டமிழக்க, கம்மின்ஸ் பந்துவீச்சில் அகர்வால் ஆட்டமிழந்த நிலையில், இந்திய அணி தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது.
இரவு உணவு நேர இடைவேளையின்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் சேர்த்துள்ளது. சராசரியாக முதல் செஷனில் 30 ரன்கள் மட்டுமே இந்திய அணி சேர்த்துள்ளது.
அடிலெய்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பகலிரவு டெஸ்ட் போட்டி, பிங்க் பந்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார்.
ஐபிஎல் தொடரிலிருந்து பேட்டிங் ஃபார்ம் இல்லாமலும், பயிற்சி ஆட்டங்களிலும் சொதப்பிய பிரித்வி ஷாவும், மயங்க் அகர்வாலும் ஆட்டத்தைத் தொடங்கினர். பிங்க் பந்தில் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்துவிடக்கூடாது என்பதைப் பலமுறை முன்னாள் ஜாம்பவான்கள் பலர் வலியுறுத்தியும் அது இந்தியத் தொடக்க ஆட்டக்காரர்களிடம் சென்று சேரவில்லை.
மிட்ஷெல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் 2-வது பந்தில் பிரித்வி ஷா கிளீன் போல்டாகி டக் அவுட்டில் வெளியேறினார். ஃபார்மில் இல்லாத வீரரை அதிவேகமான அடிலெய்ட் ஆடுகளத்தில் ஆடவைப்பது சரியல்ல எனத் தெரிந்தும் அவரைக் களமிறக்கி, கையைச் சுட்டுக்கொண்டனர்.
பிரித்வி ஷாவுக்கு ஃபுட் ஒர்க் எனச் சொல்லப்படும் காலை நகர்த்தி ஆடுவது மிகவும் குறைவாக இருக்கிறது. இதனால்தான் அவரால் பந்துகளை டிபென்ஸ் செய்ய முடியவில்லை, பேக்ஃபுட்டில் ஷாட்களையும் ஆடமுடியவில்லை. ஐபிஎல் தொடரிலிருந்து இந்தத் தவறுகளை பிரித்வி ஷா செய்து வருவது குறித்து பல முன்னணி வீரர்கள் அறிவுறுத்தியும் அதே தவறை இந்த முறையும் செய்து விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
அடுத்துவந்த புஜாரா, அகர்வாலுடன் சேர்ந்தார். இருவரும் மிகவும் நிதானமாக பேட் செய்தனர். ஒருபுறம் ஸ்டார்க், மறுபுறம் கம்மின்ஸ், ஹேசல்வுட் இருவரும் தங்களின் துல்லியமான பந்துவீச்சாலும், பவுன்ஸலாரும் இந்திய பேட்ஸ்மேன்களைத் திணறடித்தனர்.
ஹேசல்வுட் பந்துவீச்சில் கவர்டிரைவில் அகர்வால் பவுண்டரி அடித்து அணிக்கு முதல் பவுண்டரியை அடித்துக் கொடுத்தார். அதன்பின் ஸ்டார்க் பந்துவீச்சில் அப்பர் டிரைவில் ஒரு பவுண்டரியை அகர்வால் விளாசினார்.
கம்மின்ஸ் வீசிய 19-வது ஓவரில் 2-வது பந்தை கட் செய்து விளையாட அகர்வால் முயன்றார். ஆனால், கம்மின்ஸ் மிகவும் அற்பதுமான இன்கட்டரை வீசினார். மயங்க் அகர்வாலை ஏமாற்றி, அவரின் கால் இடுக்கில் நுழைந்து ஸ்டெம்ப்பைப் பந்து பதம் பார்த்தது. அகர்வால் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.
32 ரன்களுக்கு இந்திய அணி 2-வது விக்கெட்டை இழந்தது. அடுத்து கேப்டன் கோலி களமிறங்கி, புஜாராவுடன் சேர்ந்தார். இருவரும் ஆஸி. பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை நிதானமாகச் சந்தித்து விளையாடி வருகின்றனர். உணவு இடைவேளையின்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன்களும், 30-வது ஓவரில் 50 ரன்களையும் எட்டியது.
37 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன்களை இந்திய அணி சேர்த்துள்ளது. கோலி 21 ரன்களிலும், புஜாரா 121 பந்துகளைச் சந்தித்து 28 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளனர். விராட் கோலி இதுவரை 2 பவுண்டரிகளை அடித்துள்ள நிலையில், புஜாரா இதுவரை ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் நங்கூரமிட்டு விளையாடி வருகிறார்.
ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் கம்மின்ஸ் 11 ஓவர்கள் வீசி, 6 மெய்டன் 12 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். ஸ்டார்ஸ், கம்மின்ஸ் இருவரும் லைன்லென்த்தை விட்டுப் பந்துகளை நகர்த்தாமல் வீசி வருவதால், இந்திய பேட்ஸ்மேன்களால் பந்தைத் தொடக்கூட முடியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT