Published : 16 Dec 2020 06:35 PM
Last Updated : 16 Dec 2020 06:35 PM
1970-களில் கெரி பேக்கர் தனது டிவி 9 சேனலில் வேர்ல்டு சீரிஸ் கிரிக்கெட்டை விளம்பரம் செய்யும்போது இருந்த பரபரப்பு, எதிர்பார்ப்பு நாளை நடக்க இருக்கும் இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டிக்கு இருக்கிறது.
பகலிரவு ஆட்டம், மின்னொளி, பிங்க் நிறப் பந்து, வெள்ளை ஆடை என எதிர்பார்ப்புகளை எகிற வைத்திருக்கிறது அடிலெய்டில் நாளை நடக்கும் இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி.
பிங்க் நிறப் பந்தில் விளையாடும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இதுவரை ஆஸ்திரேலிய அணியை எந்த நாட்டு அணியும் வென்றதில்லை. இப்படி வலுவான வரலாற்றைத் தன்னகத்தே வைத்துள்ள ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடுகிறது இந்திய அணி.
கடந்த 2018-ல் விராட் கோலி தலைமையில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனையுடன் திரும்பிச் சென்றது. அந்தத் தோல்விக்கு இந்த முறை பழிதீர்க்கும் வகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் இருக்கிறார்கள்.
கடந்த 2018-ல் ஸ்டீவ் ஸ்மித், வார்னர் இரு தளபதிகள் அணியில் இல்லை. ஆனால், இந்த முறை இருவரும் அணியில் இடம் பெற்றுள்ளார்கள். இதில் வார்னர் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாவிட்டாலும், அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடலாம் என்பது இந்திய அணிக்குச் சவாலானதாக இருக்கும்.
கோலியின் துணிச்சலான பேட்டிங், ஸ்மித்தின் நிலைத்தன்மை, புஜாராவின் நங்கூர பேட்டிங், பதிலடி கொடுக்கும் லாபுஷேன் ஆட்டம். ஹேசல்வுட்டின் பந்துவீச்சு பெரிதா, ஷமியின் துல்லியம் சிறந்ததா, பும்ராவின் யார்க்கர் பேசுமா, கம்மின்ஸ் பவுன்ஸர் மிரளவைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் நாளைய போட்டி தொடங்குகிறது.
அடிலெய்ட் மைதானம்
அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி விளையாடுவது அந்த அணிக்குச் சொந்த மைதானம் என்பது சாதகமான அம்சமாகும். கடந்த 10 ஆண்டுகளைப் பொறுத்தவரை கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து அடிலெய்ட் ஓவலில் நடந்த டெஸ்டில் தோல்வி அடையாமல் வந்த ஆஸ்திரேலிய அணியைக் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி நடந்த டெஸ்ட்டில் இந்திய அணி 31 ரன்களில் வென்றது. ஏறக்குறைய 6 ஆண்டுகளாக இந்த மைதானத்தில் தோல்வி அடையாத ஆஸி. அணியை இந்த மைதானத்தில் இந்திய அணி தோற்கடித்தது.
பகலிரவு மன்னர்கள்
ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை பகலிரவு டெஸ்ட் போட்டியில் மன்னர்கள் எனச் சொல்லலாம். கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியினர் விளையாடி வருகின்றனர்.
இதுவரை 14 பகலிரவு டெஸ்ட் போட்டியில் 7 ஆட்டங்களில் ஆஸி. அணி விளையாடியுள்ளது.
அதிலும் ஆஸ்திரேலிய மண்ணில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இதுவரை எந்த அணியும் வென்றது இல்லை.
கடைசியாக நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. கடந்த 2016-ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் மட்டும்தான் சாபிக் ஆஸ்திரேலிய அணிக்குப் பெரும் சவாலாக இருந்தார். இருப்பினும் அதில் ஆஸி. அணி வென்றது.
கத்துக்குட்டி இந்திய அணி
ஆனால், இந்திய அணி பகலிரவு டெஸ்ட் போட்டியில் கடந்த 2018-ம் ஆண்டுதான் விளையாடியது. இந்தியாவில் நடந்த வங்க தேசத்துடனான போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வென்றது. ஆனால், வெளிநாடுகளில் சென்று பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவம் இல்லை. ஆதலால், நாளைய போட்டி இந்திய அணிக்கு ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட், பட்டின்ஸன் ஆகியோரின் பந்துவீச்சு பெரும் சவாலாகவே அமையும்.
எப்போது ரன் சேர்க்க முடியும்?
பகலிரவு டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரை ஆஸி. மண்ணில் ஒரு விக்கெட்டுக்கு அதிகபட்சமாக எந்த அணியும் சராசரியாக 30 ரன்களுக்கு மேல் சேர்த்தது இல்லை. அதிலும் பெரும்பாலும் முதல் ஷெசனில் சராசரியாக 36 ரன்களும், மூன்றாவது செஷனில் 37 ரன்களும் சேர்த்துள்ளன. 2-வது செஷனில் மட்டும்தான் 53 ரன்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆதலால், 2-வது செஷன்தான் பேட்டிங் செய்யும் அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். முதல் செஷனிலும், 2-வது செஷனிலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டால் 2-வது செஷனில் ரன்கள் சேர்க்க முடியும்.
ஆபத்தானவர்கள்
ஆஸ்திரேலிய அணியில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் அதிகமான ரன்கள் சேர்த்தவர்கள் வரிசையில் வார்னர் (11 இன்னிங்ஸ், 596 ரன்கள்), ஸ்மித் (11 இன்னிங்ஸ், 550 ரன்கள்), லாபுஷேன் (436 ரன்கள்) சேர்த்துள்ளனர். ஆதலால், இந்த மூவருமே இந்திய அணிக்குப் பெரும் சவாலாக இருக்கக்கூடும்.
மிரட்டும் ஸ்டார்க்
பந்துவீச்சில் மிட்ஷெல் ஸ்டார்க் இதுவரை 7 பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 42 விக்கெட்டுகளையும், லாதன் லேயான் 28 விக்கெட்டுகளையும், ஹேசல்வுட் 26 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 19 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இவர்களின் பந்துவீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் சமாளித்து விளையாடுவது கடும் சவாலாக இருக்கும்.
வேகப்பந்துவீச்சாளர்கள்
பகலிரவு டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரை இதுவரை வேகப்பந்துவீச்சாளர்களே அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். வேகப்பந்துவீச்சாளர்கள் அடிலெய்ட் மைதானத்தில் 101 விக்கெட்டுகளும், சுழற்பந்துவீச்சாளர்கள் 24 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர். ஆதலால், இரு அணிகளின் வேகப்பந்துவீச்சார்களும் அதிகமாக கவனிக்கப்படுவார்கள்.
இந்திய அணியைப் பொறுத்தவரை பயிற்சிப் போட்டியில் சிறப்பாக ஆடிய சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. நீண்ட காலத்துக்குப் பின் டெஸ்ட் அணிக்குள் வந்த ராகுலுக்கும் வாய்ப்பு கொடுக்கவில்லை. பயிற்சிப் போட்டியில் சிறப்பாக ஆடிய ரிஷப் பந்த்துக்குப் பதிலாக அரை சதம் மட்டுமே அடித்த சாஹாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாறாக பிரித்வி ஷா, சாஹாவுக்கு வழங்கப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தினாலும், நாளை எவ்வாறு இருவரும் செயல்படுவார்கள், நம்பிக்கையைக் காப்பாற்றுவார்களா என்பது எதிர்பார்ப்புக்குரிய விஷயமாக இருக்கிறது.
பும்ரா, ஷமிக்குத் துணையாக உமேஷ் யாதவ் பந்துவீச்சில் களமிறங்குகிறார். பயிற்சி ஆட்டங்களில் உமேஷின் பந்துவீச்சு சிறப்பாக இருந்ததால், அவரை அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.
வலைப்பயிற்சியில் தமிழக வீரர் நடராஜன் பிங்க் பந்தில் 130 கி.மீ. வேகத்தில் வீசியதையே இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ளத் தடுமாறினர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் நாளை ஸ்டார்க், பட்டின்ஸன், கம்மின்ஸ் ஆகியோரின் பந்துவீச்சை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
இளம் வீரர்கள் விஹாரி, பிரித்வி ஷா, அகர்வாலைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் ஓரளவுக்கு டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவம் நிறைந்த பேட்ஸ்மேன்கள். ஆனால், பிங்க் பந்தை எவ்வாறு எதிர்கொள்வார்கள், பகலிரவு பரிசோதனையில் இந்திய அணியினர் தேறுவார்களா என்பதுதான் அனைவரையும் எதிர்பார்ப்புக்குரிய விஷயமாக மாற்றியுள்ளது.
இந்திய அணி விவரம்:
விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, சத்தேஸ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, விருதிமான் சாஹா, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ரவிச்சந்திர அஸ்வின்.
ஆஸி. அணி விவரம்:
டிம் பெய்ன் (கேப்டன்), ஜோ பர்ன்ஸ், பாட் கம்மின்ஸ், கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், மோய்செஸ் ஹென்ரிக்ஸ், மார்னஸ் லாபுஷேன், நாதன் லேயான், மைக்கேல் நீஷர், பட்டின்ஸன், ஸ்டீவன் ஸ்மித், மிட்ஷெல் ஸ்டார்க், மிட்ஷெல் ஸ்வீப்ஸன், மாத்யூவேட்.
இந்திய நேரப்படி போட்டி காலை 9.30 மணிக்கு டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT