Last Updated : 16 Dec, 2020 04:42 PM

1  

Published : 16 Dec 2020 04:42 PM
Last Updated : 16 Dec 2020 04:42 PM

புதிய இந்தியாவின் பிரதிநிதி நான்தான்: கேப்டன் விராட் கோலி பெருமிதம்

இந்திய அணியன் கேப்டன் விராட் கோலி : படம் | ஏஎன்ஐ.

அடிலெய்ட்

புதிய இந்தியாவின் பிரதிநிதி நான்தான். எந்தவிதமான சவால்களையும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்துடன் ஏற்கத் தயாராக இருக்கிறேன் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. அடிலெய்டில் நாளை பகலிரவாக, பிங்க் பந்தில் முதல் டெஸ்ட் நடக்கிறது.

இந்த முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே கேப்டன் கோலி விளையாடுவார். அதன்பின், இந்தியா திரும்புகிறார். அடுத்த 3 போட்டிகளுக்கு கோலி விளையாடமாட்டார். அதேசமயம், ரோஹித் சர்மாவும் 3-வது டெஸ்ட் போட்டியிலிருந்துதான் இந்திய அணியில் விளையாடுகிறார்.

இந்தப் போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, காணொலி வாயிலாக இன்று பேட்டி அளித்தார். அப்போது சமீபத்தில் கிரேக் சேப்பல் சமீபத்தில் ஆஸ்திரேலிய வீரர்களில் ஆஸி. அல்லாத வீரர்களில் சிறந்த வீரராக கோலியைப் பார்க்கிறேன் எனத் தெரிவித்திருந்தார்.

அதுகுறித்து விராட் கோலியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

''நான் எப்போதும் நானாகவே இருக்க விரும்புகிறேன் எனத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது ஆளுமை, குணம் ஆகியவற்றின் மூலம் புதிய இந்தியாவின் பிரதிநிதியாக வெளிப்படுகிறேன். என்னைப் பொறுத்தவரை அதை அப்படித்தான் பார்க்கிறேன்.

என் மனதைப் பொறுத்தவரை, ஆஸ்திரேலியர்களின் மனநிலையோடு நான் என் மனதை ஒப்பிடுவதில்லை. என் ஆளுமை என்பது இந்திய கிரிக்கெட் அணிக்காக நாங்கள் தோள் கொடுக்கத் தொடங்கிய முதல் நாளில் இருந்தே வெளிப்பட்டு வருகிறது.

புதிய இந்தியா என்பது சாதகமான எண்ணத்துடன், சாதிக்கும் மனதுடன் சவால்களை ஏற்றுக்கொள்ளும். எங்கள் வழியில் வரும் சவால்களையும் நாங்கள் ஏற்கத் தயாராக இருக்கிறோம்.

கிரிக்கெட் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியா சிறந்த நாடு. இந்த மண்ணில் நீங்கள் சிறப்பாக விளையாடினால், இந்த நாட்டு மக்கள் உங்களைக் கொண்டாடுவார்கள். மதிப்பாக நினைப்பார்கள்.

உதாரணத்துக்குக் கடந்த தொடரில் பும்ரா சிறப்பாகச் செயல்பட்டுத் திறமையை வெளிப்படுத்தியதால், இந்த முறை பும்ராவின் பந்துவீச்சைக் காண இந்த நாட்டு மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

அனைத்துவிதமான வெளிப்புறச் சக்திகளையும் நாம் கட்டுப்பாட்டில் வைக்க முடியாது. சில நேரங்களில் வெளிப்புறச் சக்திதான் இந்தத் தொடருக்குச் சிறந்த விளம்பரமாக இருக்கக்கூடும். ஆனால், எங்கள் நோக்கம் அனைத்தும் சிறப்பாக விளையாடுவதில் மட்டுமே இருக்கும்''.

இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x