Published : 14 Dec 2020 12:26 PM
Last Updated : 14 Dec 2020 12:26 PM
மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூஸிலாந்து வென்று, ஆஸ்திரேலிய அணிக்கு இணையாகப் புள்ளிகளைப் பெற்றாலும் டெஸ்ட் தர வரிசையில் ஆஸ்திரேலியாதான் முதலிடத்தில் நீடிக்கிறது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.
தசமஸ்தானப் புள்ளிகள் அடிப்படையில் ஆஸ்திரேலியாதான் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. நியூஸிலாந்து 2-வது இடம்தான் என ஐசிசி தெரிவித்துள்ளது.
மே.இ.தீவுகளுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி வென்றது. இதையடுத்து, 116 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணியுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ஐசிசி தரவரிசையில் ஆஸி. முதலிடத்திலும், நியூஸிலாந்து 2-வது இடத்திலும் இருந்ததால் குழப்பம் நீடித்தது.
அதுமட்டுமல்லாமல் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதன்முதலாக முதலிடத்தை நியூஸிலாந்து இந்த முறைதான் பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தக் குழப்பத்துக்கு முடிவு கட்டும்வகையில் ஐசிசி விளக்கம் அளித்துள்ளது.
அதில், “ஆஸ்திரேலிய அணியும், நியூஸிலாந்து அணியும் டெஸ்ட் தரவரிசையில் 116 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தாலும், தசமஸ்தானப் புள்ளியில் வேறுபட்டுள்ளன.
ஆஸ்திரேலிய அணி 116.461 புள்ளிகளும், நியூஸிலாந்து அணி 116.375 புள்ளிகளும் பெற்றுள்ளன. தசமஸ்தானப் புள்ளிகள் அடிப்படையில் ஆஸ்திரேலிய அணிதான் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளது.
114 புள்ளிகளுடன் இந்திய அணி 3-வது இடத்திலும், இங்கிலாந்து 4-வது இடத்திலும், இலங்கை அணி 5-வது இடத்திலும் உள்ளன.
தென் ஆப்பிரிக்கா 6-வது இடத்திலும், பாகிஸ்தான் 7-வது இடத்திலும், 8-வது இடத்தில் மே.இ.தீவுகளும், 9-வது இடத்தில் வங்கதேசமும் இருக்கின்றன.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மே.இ.தீவுகள் அணியை வீழ்த்தியதன் மூலம் 120 புள்ளிகள் பெற்ற நியூஸிலாந்து அணி 300 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
அடுத்ததாக வரும் 26-ம் தேதி பாகிஸ்தான் அணியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணி விளையாட உள்ளது. வரும் 17-ம் தேதி முதல் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT