Published : 07 May 2014 11:55 AM
Last Updated : 07 May 2014 11:55 AM

லலித் மோடி தலைவராக தேர்வு: ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் சஸ்பெண்ட்: தற்காலிக கமிட்டி அமைக்கப்படும் என பிசிசிஐ அறிவிப்பு

ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தின் (ஆர்சிஏ) தலைவராக லலித் மோடி தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அச்சங்கத்தை காலவரையறையின்றி சஸ்பெண்ட் செய்துள்ளது பிசிசிஐ.

ஐபிஎல் முன்னாள் ஆணைய ரான லலித் மோடி, நிதி முறைகேடு மற்றும் பிசிசிஐ நலனுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி அவருக்கு கடந்த செப்டம்பரில் வாழ்நாள் தடை விதித்தது பிசிசிஐ. லண்டனில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வரும் அவர், ராஜஸ்தான் விளையாட்டு சட்டத்தின் அடிப்படையில் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.

அதை எதிர்த்து பிசிசிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் பிசிசிஐயின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், லலித் மோடி தேர்தலில் போட்டியிட அனுமதித்ததோடு, தேர்தலை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி காளிஸ்வாலை தேர்தல் பார்வையாளராக நியமித்தது.

இதையடுத்து கடந்த டிசம்பரில் தேர்தல் நடைபெற்ற நிலையில், இது தொடர்பான வழக்கை கடந்த 30-ம் தேதி விசாரித்த நீதிமன்றம், மே 6-ம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என அறிவித்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது தேர்தல் முடிவு அறிவிக் கப்பட்டது. 4 மாதங்களுக்குப் பிறகு வெளியிடப்பட்ட இந்த தேர்தல் முடிவில் லலித் மோடி 24 வாக்குகள் பெற்று வெற்றி கண்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டி யிட்ட ராம்பால் வர்மா 5 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார். இந்த முடிவுகள் அறிவிக்கப் பட்ட அடுத்த சில மணி நேரங் களிலேயே இதை ஏற்றுக் கொள்ள முடியாது என அறிவித்த பிசிசிஐ, ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தை காலவரை யறையின்றி சஸ்பெண்ட் செய்தது.

இது தொடர்பாக பிசிசிஐ செயலர் சஞ்சய் பட்டேல் கூறுகையில், “பிசிசிஐயின் எவ்வித செயல்பாடுகளிலும் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் பங்கேற்க முடியாத வகையில் அச்சங்கத்தை கால வரையறையின்றி பிசிசிஐ தலைவர் சஸ்பெண்ட் செய்துள் ளார். பிசிசிஐயின் கட்டுப்பாட்டில் உள்ள சங்கங்களை சஸ்பெண்ட் செய்யும் அதிகாரம் அதன் தலைவருக்கு உள்ளது. இந்த சஸ்பெண்ட் முடிவு பிசிசிஐ இடைக்கால தலைவர் ஷிவ்லால் யாதவால் எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

சஸ்பெண்ட் நடவடிக்கை யால் ராஜஸ்தான் வீரர்கள் இந்திய அணிகளில் (சீனியர், ஜூனியர் உள்ளிட்ட பல்வேறு அணிகள்) இடம்பெறுவது பாதிக்கப்படுமா என்று சஞ்சய் பட்டேலிடம் கேட்டபோது, “பிசிசிஐ ஒரு தொழில்முறை அமைப்பு.

ராஜஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாத வகையில் பார்த்துக் கொள்வோம். ராஜஸ்தானில் கிரிக்கெட் விவகாரங்களை நல்ல முறையில் நடத்துவதற்கும், வீரர்களின் நலனைப் பாதுகாப் பதற்கும் தற்காலிக கமிட்டி அமைக்கப்படும்” என்றார்.

சஸ்பெண்டை எதிர்த்து வழக்கு

ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மெஹ்மூத் அப்தி கூறுகையில், “இந்தத் சஸ்பெண்ட் நியாயமற்றது. இதுதொடர்பாக தீவிரமாக சிந்தித்துக் கொண் டிருக்கிறோம். சஸ்பெண்டை எதிர்த்து வழக்கு தொடருவோம்” என்றார்.

பிசிசிஐக்குள் மீண்டும் வருவதற்கான முதல் படிக்கட்டு இந்த வெற்றி: மோடி

ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தேர்தலில் கிடைத்த வெற்றி பிசிசிஐக்குள் மீண்டும் வருவதற்கான முதல் படிக்கட்டு என்று லலித் மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “இது மிகப்பெரிய வெற்றி. ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தை காப் பாற்றுவதற்காக முந்தைய நிர்வாகிகளுடன் 4 ஆண்டுகள் போராடியிருக்கிறேன்” என்றார். இந்த வெற்றி பிசிசிஐக்குள் மீண்டும் வருவதற்கு வாய்ப்பாக அமையுமா என்று கேட்டபோது, “அதை நான் மறுக் கமாட்டேன். நாங்கள் கிரிக்கெட்டை மாசற்றதாக மாற்றுவோம்.

ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்துவதற்கு முகுல் முத்கல் கமிட்டியை நியமித்ததன் மூலம் முறைகேடுகளை ஒழிக்க உச்ச நீதிமன்றம் உதவியிருக்கிறது. ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவதே எனது லட்சியம். நான் இதற்கு முன்னர் தலைவராக இருந்த போது ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் மிகச்சிறந்த மாநில கிரிக்கெட் சங்கமாக இருந்தது. மிகச்சிறந்த அகாடமிகளை உருவாக்கினோம். புதிய மைதானங்களை கட்டுவதற்கு திட்டமிட்டோம்” என்றார்.

ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தின் துணைத் தலைவராக மெஹ்மூத் அப்தி தேர்வு செய்யப் பட்டுள்ளார். இவர்தான் மோடியின் அனைத்து வழக்குகளையும் நடத்தி வருகிறார். இதுதவிர செயலராக சோமேந்திர திவாரியும், பொருளாளராக பவன் கோயலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x