Published : 14 Dec 2020 09:39 AM
Last Updated : 14 Dec 2020 09:39 AM
அடிலெய்டில் வரும் 17-ம் தேதி தொடங்கும் இந்திய அணிக்கு எதிரான பகலிரவு முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் ஆல்ரவுண்டர் மோய்சஸ் ஹென்ரிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் ஷான் அபாட் நீக்கப்பட்டுள்ளார்.
இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வரும் 17-ம் தேதி பகலிரவு ஆட்டமாக நடக்கிறது.
பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மிகப்பெரிய சாதனை வைத்துள்ளது. இதுவரை எந்தவிதமான பகலிரவு டெஸ்ட் போட்டியிலும் ஆஸி. அணி தோல்வி அடைந்ததில்லை .
இதில் நியூசவுத்வேல்ஸ் அணியைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ஹென்ரிக்ஸ் டி20 தொடரின்போது லேசான தசைப்பிடிப்பு ஏற்பட்டு ஓய்வில் சென்றார். இதனால் இந்திய ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டங்களிலும் ஹென்ரிக்ஸ் விளையாடவில்லை.
தற்போது ஹென்ரிக்ஸ் தசைப்பிடிப்பிலிருந்து குணமடைந்துவிட்டதால், அடிலெய்டில் நடக்கும் முதலாவது டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே வேகப்பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க் ஆஸி. ஏ அணியில் இணைந்துள்ள நிலையில், ஹென்ரிக்ஸும் இணைகிறார். இன்று பிற்பகலில் ஆஸ்திரேலிய அணியினர் அடிலெய்ட் வந்து சேர்கின்றனர்.
இதில் வேகப்பந்துவீச்சாளர் ஷான் அபாட்டுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் தொடர்ந்து சிட்னி நகரிலேயே தங்கி சிகிச்சை எடுப்பார் என்று ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் சீன் அபாட் விளையாடமாட்டார், மெல்போர்னில் நடக்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் சீன் அபாட் விளையாடுவார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர், வில் புகோவ்ஸ்கி காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT