Published : 13 Dec 2020 05:19 PM
Last Updated : 13 Dec 2020 05:19 PM
ஆஸ்திரேலிய ஏ அணியின் பேட்ஸ்மேன்கள் வில்டர்முத், மெக்டர்மட் ஆகியோரின் அபராமான சதத்தால் இந்திய ஏ அணிக்கு எதிரான 3 நாள் பகலிரவு பயிற்சி ஆட்டம் எந்த முடிவும் எட்டப்படாமல் சமனில் முடிந்தது.
முதல் இன்னிங்ஸில் இந்திய ஏ அணி 194 ரன்களுக்கும், ஆஸ்திரேலிய ஏ அணி 108 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. 86 ரன்கள் முன்னிலை பெற்று 2-வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய இந்திய ஏ அணி ரிஷப் பந்த் (103) சதத்தாலும், ஹனுமா விஹாரி (104) சதத்தாலும் 4 விக்கெட்டுக்கு 386 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து, ஆஸ்திரேலிய ஏ அணிக்கு 473 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இன்றைய 3-ம் நாள் மற்றும் இறுதி நாளில் ஆஸ்திரேலிய ஏ அணி தொடக்கத்தில் விரைவாக 3 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், 4-வது விக்கெட், 5-வது விக்கெட்டுகள் இந்திய வீரர்களைப் பாடாய்ப்படுத்தின.
3-ம் நாள் ஆட்டத்தின் நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு ஆஸி ஏ அணி 304 ரன்கள் சேர்த்ததையடுத்து ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
5-வது விக்கெட்டுக்குக் கூட்டணி சேர்ந்த மெக்டர்மட், வில்டர்முத் கூட்டணியைப் பிரிக்க முடியாமல் இந்தியப் பந்துவீச்சாளர்கள் தவித்தனர். முதல் 3 விக்கெட்டுகளை விரைவாக எடுத்த நிலையில் இருவரும் சேர்ந்து இந்தியப் பந்துவீச்சாளர்களுக்குத் தண்ணி காட்டிவிட்டனர்.
5-வது விக்கெட்டுக்கு இருவரும் 165 ரன்கள் சேர்த்தனர். வில்டர்முத் 111 ரன்களிலும், மெக்டர்மட் 107 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
புதிய பந்து நன்றாக பவுன்ஸர் ஆகி, ஸ்விங் ஆனதால் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹாரிஸ் (5) பர்ன்ஸ் (1), மேடிஸன் (14) ஆகியோர் விக்கெட்டுகளை இந்திய வீரர்கள் விரைவாக வெளியேற்றினர். 4-வது விக்கெட்டுக்கு மெக்டர்மட், காரே கூட்டணி ஓரளவுக்கு நிலைத்து ஆடியது. 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 117 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். காரே 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.
5-வது விக்கெட்டுக்கு மெக்டர்மட், வில்டர்முத் ஜோடி இந்தியப் பந்துவீச்சாளர்களைப் பதம் பார்த்தது. இருவரின் முதல்தர சராசரி ரன்கள் என்பது முறையே 43, 26 என்று இருக்கும் நிலையில், இந்திய அணிக்கு எதிராகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
வரும் 17-ம் தேதி தொடங்கும் டெஸ்ட் தொடருக்காக தொடக்க ஆட்டக்காரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பர்ன்ஸ், ஹாரிஸ் இருவருமே சொதப்பிவிட்டனர். ஆஸ்திரேலிய அணிக்கு இருவரின் பேட்டிங் மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது.
அதில் ஜோ பர்ன்ஸ் கடந்த 9 இன்னிங்ஸ்களில் மொத்தம் 62 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார் என்பது மோசமான பேட்டிங்கிற்கு உதாரணம்.
அதேசமயம் வெளிநாடுகளில் பிங்க் பந்தில் ஒருநாள் முழுவதும் களத்தில் இருந்து பந்துவீசி பல்வேறு அனுபவங்களை இந்தியப் பந்துவீச்சாளர்கள் பெற்றனர். வழக்கமான கூக்கபுரா சிவப்புப் பந்தைப்போல் பிங்க் பந்து இல்லை என்பதைப் புரிந்து கொண்டனர்.
கூக்கபுரா சிவப்புப் பந்து தேய்வதற்கும், ரிவர்ஸ் ஸ்விங் செய்வதற்கும் நீண்ட நேரம் ஆகும். ஆனால், பிங்க் நிறப்பந்து சிறிது நேரத்தில் தேய்ந்து, மெலிதாகிவிடும் என்பதால், பேட்ஸ்மேன்கள் அடித்து ஆடுவதற்கு எளிதாக அமையும்.
கூக்கபுரா பிங்க் நிறப் பந்து முதல் 30 ஓவர்களுக்கு வேண்டுமானால் பந்துவீசப் பந்துவீச்சாளர்களுக்கு நன்றாக இருக்கும். ஆனால், அதன்பின் பேட்ஸ்மேன்களுக்கு அடித்து விளையாடவே சாதகமாக இருக்கும்.
இதனால்தான் ஆஸி. ஏ அணிக்கு எதிராக முதல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியபின் இந்தியாவின் பும்ரா, ஷமி ஆகியோருக்கு பிங்க் நிறப் பந்து அதிக அளவில் பந்துவீச்சில் ஒத்துழைக்கவில்லை.
இதன் மூலம் இந்திய அணியின் பிங்க் நிறப் புதிய பந்தில் பேட்டிங் செய்யும் போது குறைந்தபட்சம் 30 ஓவர்களுக்கு விக்கெட்டுகள் எதையும் இழக்காமல் பேட்டிங் செய்துவிட்டால் அதன்பின் அடித்து ஆட வசதியாக இருக்கும்.
ஆஸ்திரேலியாவில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் இதுவரை எதிரணிகளின் முதல் விக்கெட்டுக்கான 30 ஓவர்கள் சராசரி என்பது 27.25 ரன்களும், அதைத் தொடர்ந்து அடுத்த 50 ஓவர்களுக்கு சராசரி 30.4 ரன்களாகும். ரன் ரேட் 2.79 லிருந்து 3.24க்கு உயர்ந்துள்ளது.
அதாவது வெறும் 16 சதவீதம் மட்டுமே ஓவருக்கு ரன் வேகம் அதிகரித்துள்ளது. ஆனால், இதுவே பகல் நேரத்தில் விளையாடப்படும் டெஸ்ட் போட்டிகளில் முதல் 30 ஓவர்களில் சராசரி 3.11 ரன்களாக இருக்கிறது.
ஆதலால், தேய்ந்துபோன பிங்க் பந்துகளை மின்ஒளியில் பந்துவீசும்போது மட்டுமே பந்துவீச்சாளர்களுக்கு ஓரளவு ஒத்துழைக்கும். இல்லாவிட்டால் பேட்ஸ்மேன்களுக்கே சாதகமாக இருக்கும்.
அதனால்தான் பயிற்சி ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 30 ஓவர்களில் 123 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. பும்ரா 31 ஓவரில் பேட் செய்ய வரும்போது பந்து நன்றாகத் தேய்ந்திருந்தது, இதனால் பும்ரா அடித்து ஆடுவதற்கு வசதியாக இருந்ததால், அவரும் அரை சதம் அடித்தார்.
2-வது இன்னிங்ஸிலும் ஆஸி ஏ அணியின் 4-வது விக்கெட், 5-வது விக்கெட்டையும் எடுக்க 30 ஓவர்களுக்கு மேல் இந்தியப் பந்துவீச்சாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர். காரணம் பந்து நன்றாகத் தேய்ந்திருந்தது. மின்னொளியில்கூட எதிர்பார்த்த அளவு ஒத்துழைக்கவில்லை.
ஆதலால், வழக்கமான சிவப்புப் பந்தைப் போல் அல்லாமல் பிங்க் நிறப் பந்துகளைக் கையாள்வதில் பல பாடங்களை ஆஸி. மண்ணில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் கற்றுக் கொண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT