Published : 09 Oct 2015 05:11 PM
Last Updated : 09 Oct 2015 05:11 PM
பஞ்சாப் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-ம் நாளான இன்று மும்பை வளரும் நட்சத்திரம் ஸ்ரேயஸ் ஐயர் அதிரடி இரட்டைச் சதம் விளாசினார்.
மும்பையில் நடைபெறும் இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி தன் முதல் இன்னிங்ஸில் 154 ரன்களுக்குச் சுருண்டது. கடந்த ரஞ்சி சீசனில் அசத்திய யுவராஜ் சிங் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மும்பை அணியில் எஸ்.என்.தாக்கூர் 4 விக்கெட்டுகளையும், சாந்து 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து நேற்றே களமிறங்கிய மும்பை அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்திருந்தது. இதில் ஸ்ரேயஸ் ஐயர் 61 எடுத்து களத்தில் இருந்தார். சூரியகுமார் யாதவ் 16 ரன்களுடன் இவருக்கு உறுதுணையாக ஆடிவந்தார்.
இந்நிலையில், இன்று 2-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் ஸ்ரேயஸ் ஐயர் பஞ்சாப் பந்து வீச்சை விளாசித் தள்ளி ஆதிக்கம் செலுத்தினார். அவர் 176 பந்துகளைச் சந்தித்து 25 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் சரியாக 200 ரன்கள் எடுத்து யுவராஜ் சிங் பந்தில் கவுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 175-வது பந்தில் இரட்டைச் சதம் எடுத்து முடித்தவுடன் ஆட்டமிழந்தார்.
இன்னிங்ஸ் முழுதும் 115 என்ற ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தது அபாரம். ஐயரின் முந்தைய அதிகபட்ச ஸ்கோர் 153 என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பாக 2010-ம் ஆண்டு துலீப் டிராபி இறுதிப்போட்டியில் தெற்கு மண்டல அணிக்கு எதிராக ஐதராபாத்தில் யூசுப் பத்தான் 186 பந்துகளில் 19 பவுண்டரி 9 சிக்சர்களுடன் இரட்டைச் சதம் கண்டிருக்கிறார். இப்போது அதைவிட வேகமாக ஐயர் இரட்டைச் சதம் கண்டுள்ளார். ஆனால் அந்த துலீப் கோப்பைப் போட்டியில் 536 ரன்கள் வெற்றி இலக்கை யூசுப் பத்தான் (210) தனது அதிரடி இரட்டைச் சதம் மூலம் வெற்றிகரமாக துரத்த மேற்கு மண்டலம் வெற்றி பெற்றது.
சூரியகுமார் யாதவ்வும், ஐயரும் இணைந்து 233 ரன்களை 3-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். யாதவ் 10 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 78 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தாரே 81 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.
மும்பை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 434 ரன்கள் எடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT