Last Updated : 11 Dec, 2020 05:41 PM

 

Published : 11 Dec 2020 05:41 PM
Last Updated : 11 Dec 2020 05:41 PM

பும்ரா அடித்த ஷாட்டில் ஆஸி. பந்துவீச்சாளர் கேமரூன் கிரீன் தலையில் பந்து தாக்கியது: கன்கஸனில் வெளியேறினார்

பும்ரா அடித்த ஷாட்டில் பந்து தலையில் பட்டு அமர்ந்திருந்த ஆஸி. வேகப்பந்துவீச்சாளர் கேமரூன் கிரீன்: படம் உதவி |ட்விட்டர்.

சிட்னி

சிட்னியில் நடந்து வரும் ஆஸி ஏ அணி மற்றும் இந்திய ஏ அணிகளுக்கு இடையிலான பகலிரவு பயிற்சி ஆட்டத்தில் இந்திய வீரர் பும்ரா ஸ்ட்ரெயிட் டிரைவ் அடித்த ஷாட்டில் ஆஸி. பந்துவீச்சாளர் கேமரூன் கிரீன் தலையில் பந்து பட்டதில் சுருண்டு விழுந்தார்.

இதையடுத்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கன்கஸனில் கிரீன் வெளியேறினார்.

வரும் 17-ம் தேதி இந்தியா - ஆஸி. அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. முதல் ஆட்டம் அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக, பிங்க் பந்தில் நடக்கிறது.

இந்தப் போட்டிக்கு முன்பாக 3 நாட்கள் பயிற்சி ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் சிறப்பாக பேட் செய்த வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் அரை சதத்தைப் பதிவு செய்து 55 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கடைசி விக்கெட்டுக்கு முகமது சிராஜ் (22), பும்ரா (55) இருவரும் சேர்ந்து 71 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

இதில் 45 ஓவரை ஆஸி.வேகப்பந்துவீச்சாளர் கேமரூன் கிரீன் வீசினார். களத்தில் பும்ரா எதிர்கொண்டார். கேமரூன் ஆப்சைடு விலக்கி வீசிய பந்தை பும்ரா ஸ்ட்ரெயிட் ட்ரைவாக தூக்கி அடித்தார். பந்து கேமரூன் தலைக்கு நேரே சென்றதால், அதைப் பிடிக்க அவர் முயன்றார். பந்து வந்த வேகத்தில் அதைப் பிடிக்கத் தவறியதால், கேமரூன் தலையின் வலது பக்கத்தில் பந்து பட்டது.

வலியில் துடித்த கேமரூன் தலையைப் பிடித்தவாறே தரையில் விழுந்தார். இதைப் பார்த்த நான்-ஸ்ட்ரைக்கர் பகுதியில் இருந்த முகமது சிராஜ் உடனடியாக ஓடிவந்து உதவி செய்தார்.

அதன்பின் மருத்துவ வல்லுநர்கள், உடற்தகுதி நிபுணர்கள் வந்து கேமரூனுக்கு ஏற்பட்ட காயத்தை ஆய்வு செய்தனர். கேமரூன் தொடர்ந்து வலியால் துடித்தது மட்டுமல்லாமல் தலையில் காயம் வீங்கத் தொடங்கியது. இதையடுத்து, கன்கஸனில் கேமரூன் வெளியேறினார். அவருக்குப் பதிலாக பேட்ரிக் ரோவ் களமிறங்கினார்.

கேமரூன் கிரீனுக்கு ஏற்பட்ட காயம் குறித்து ஆஸி. அணியின் மருத்துவர் பிப் இங் கூறுகையில், “ஆஸி. ஏ அணிக்காக பந்துவீசியபோது கேமரூன் கிரீனுக்கு லேசாகத் தலையில் காயம் ஏற்பட்டு கன்கஸனில் வெளியேறினார். கேமரூனுக்கு இது முதல் கன்கஸன்.

கேமரூன் உடனடியாக ஹோட்டலுக்கு அழைத்து வரப்பட்டார். அடுத்துவரும் 2 நாட்களுக்கு விளையாடமாட்டார். தொடர்ந்து அவரின் உடல்நிலையைக் கண்காணித்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் கார்த்திக் தியாகி வீசிய பந்தில், ஆஸி. பேட்ஸ்மேன் புகோவ்ஸ்கி ஹெல்மெட்டில் பந்து பட்டு கன்கஸனில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் புகோவ்ஸ்கி விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

ஏற்கெனவே காயம் காரணமாக டேவிட் வார்னரும் முதல் டெஸ்ட்டில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x