Published : 11 Dec 2020 03:29 PM
Last Updated : 11 Dec 2020 03:29 PM
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக சிட்னியில் நடந்து வரும் பகலிரவு 3 நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய ஏ அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதல் முறையாக அரை சதம் அடித்து மிரட்டியுள்ளார்.
முதலில் பேட் செய்த இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 48.3 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் பும்ரா (55 நாட் அவுட்) அடித்த அரை சதம்தான் அணியிலேயே அதிகபட்சமாகும். 57 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்து நாட் அவுட்டாக இருந்த பும்ராவின் கணக்கில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும்.
பிரித்விஷா (40), கில் (43) ரன்கள் சேர்த்தனர். மற்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பினர்.
வேகப்பந்துவீச்சாளராக மட்டுமே அறியப்பட்ட பும்ரா, முதல்தரப் போட்டியில் முதல் முறையாக அரை சதம் அடித்துள்ளார். இதற்கு முன் முதல் தரப் போட்டிகளிலும், ஏ பிரிவு போட்டிகளிலும் பும்ரா ஒரு அரை சதம் கூட அடித்தது இல்லை. முதல் தரப் போட்டியில் பும்ராவின் அதிகபட்சமே 16 ரன்கள்தான்.
இந்தச் சூழலில் பும்ராவின் அரை சதம், அதிலும் ஆஸ்திரேலிய மண்ணில், பகலிரவு ஆட்டத்தில், பிங்க் நிற கூக்கபுரா பந்தில், அந்நாட்டு அணி வீரர்களின் வேகப்பந்துவீச்சை சமாளித்து பும்ரா அடித்த அரை சதம் மிகவும் பாராட்டுக்குரியது.
கடைசி விக்கெட்டுக்கு பும்ரா, சிராஜ் (22) ஜோடி களத்தில் நின்று 71 ரன்கள் குவித்து இந்திய அணியின் மானத்தைக் காப்பாற்றினர். இருவரும் களத்தில் நிலைத்து ஆடவில்லை என்றால் இந்திய அணி 130 ரன்களுக்குள் சுருண்டிருக்கும்.
வரும் 17-ம் தேதி இந்தியா, ஆஸி. அணிகளுக்கு இடையே அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக 3 நாட்கள் பயிற்சிப் போட்டியில் இரு அணிகளும் விளையாடுகின்றன.
இந்தப் போட்டியில் விராட் கோலி களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டாஸ் போடும் கடைசி நேரத்தில் தான் போட்டியில் விளையாடப் போவதில்லை என கேப்டன் கோலி தெரிவித்தார். இதனால் கேப்டன் பொறுப்பை ரஹானே ஏற்றார்.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே முதலில் பேட் செய்தார். மயங்க் அகர்வால், பிரித்வி ஷா ஆட்டத்தைத் தொடங்கினர் . அபாட் வீசிய 3-வது ஓவரில் அகர்வால் (2) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கில், பிரித்வி ஷா ஓரளவுக்கு நிலைத்து ஆடி ரன்களைச் சேர்த்தனர். 2வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். பிரித்விஷா (43) ரன்களில் சதர்லேண்ட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
அடுத்து வந்த விஹாரி (15) ரன்களில் ஏமாற்றி ஆட்டமிழந்தார். கடந்த பயிற்சிப் போட்டியிலும் சொதப்பிய விஹாரி இந்த ஆட்டத்திலும் சோபிக்கவில்லை. அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். ரஹானே (4), ரிஷப் பந்த் (5), சாஹா (0), ஷைனி (4), ஷமி (0), கில் (40) என வெளியேறினர்.
ஒரு கட்டத்தில் 102 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்த இந்திய அணி, அடுத்த 21 ரன்கள் சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. 10-வது விக்கெட்டுக்கு பும்ரா, சிராஜ் ஜோடி சேர்ந்தனர்.
இருவரும் நிதானமாக ஆடத் தொடங்கினர். ஆனால், பும்ரா தொடக்கத்திலிருந்தே வேகமாக ரன்களைச் சேர்த்து, பவுண்டரி, சிக்ஸர்களை விளாசினார். 53 பந்துகளில் பும்ரா அரை சதம் அடித்தார்.
ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சை சமாளித்து பும்ராவாலேயே அரை சதம் அடிக்க முடிந்த நிலையில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் முன்னணியில் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது அவர்களின் பேட்டிங் திறமையை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.
முகமது சிராஜ் 22 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்வீப்ஸன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். கடைசி விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 71 ரன்கள் சேர்த்தனர். பும்ரா 55 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 48.3 ஓவர்களில் இந்திய அணி 194 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலியத் தரப்பில் சீன் அபாட், வில்டர்முத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT