Published : 10 Dec 2020 01:17 PM
Last Updated : 10 Dec 2020 01:17 PM
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்ட டி20 போட்டிக்கான வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் கோலியை விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் முந்தினார்.
பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 3-ம் இடத்துக்கு கே.எல்.ராகுல் முன்னேறிய நிலையில், கோலி 8-வது இடத்தில்தான் உள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் முதல் போட்டியில் அரை சதமும், 2-வது ஆட்டத்தில் 30 ரன்களும் சேர்த்தார். இதனால், 816 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
முதலிடத்தில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் 915 புள்ளிகளுடனும், 2-வது இடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸமும் உள்ளார். பாபர் ஆஸத்தைப் பிடிக்க ராகுலுக்கு இன்னும் 55 புள்ளிகள் மட்டுமே தேவை. ஆஸி. கேப்டன் ஆரோன் பின்ச், 4-வது இடத்துக்குச் சரிந்துள்ளார்.
ஆஸிக்கு எதிரான டி20 தொடரில் 3-வது ஆட்டத்தில் 85 ரன்கள் குவித்ததையடுத்து, கேப்டன் கோலி 9-வது இடத்திலிருந்து 8-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்.
5,6,7-வது இடங்களில் முறையே தென் ஆப்பிரிக்க வீரர் வான்டர் டூசென், நியூஸி. வீரர் கோலின் முன்ரோ, ஆஸி.வீரர் மேக்ஸ்வெல் உள்ளனர். 9-வது இடத்தில் ஆப்கன் வீரர் ஹஸ்ரத்துல்லாவும், 10-வது இடத்தில் இங்கிலாந்து கேப்டன் மோர்கனும் உள்ளனர்.
பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஆஸி.லெக் ஸ்பின்னர் ஆடம் ஸம்ப்பா இரு இடங்கள் முன்னேறி 5-வது இடத்தகுக்கு உயர்ந்துள்ளார். இங்கிலாந்து பந்துவீச்சாளர் கிறிஸ் ஜோர்டன் டாப் 10 வரிசையில் நுழைந்து 10-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
முதலிடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கானும், 2-வது இடத்தில் முஜிப் உர் ரஹ்மானும், 3-வது இடத்தில் இங்கிலாந்து வீரர் அதில் ரஷித்தும் உள்ளனர்.
ஆல்ரவுண்டர்கள் வரிசையில் முதலிடத்தில் ஆப்கன் வீரர் முகமது நபியும், 2-வது இடத்தில் வங்கதேச வீரர் சஹிப் அல் ஹசனும், 3-வது இடத்தில் மேக்ஸ்வெலும் உள்ளனர். ஆல்ரவுண்டர்கள், பந்துவீச்சாளர்கள் பட்டியலில் எந்த இந்திய வீரர்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT