Published : 09 Dec 2020 12:21 PM
Last Updated : 09 Dec 2020 12:21 PM

ஒரே சிறுநீரகத்துடன் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் உச்சம்: மனம் திறந்த அஞ்சு பாபி ஜார்ஜ்; மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் பெருமிதம்

அஞ்சு பாபி ஜார்ஜ்.

கொச்சி

ஒரே சிறுநீரகத்துடன் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு 2003ஆம் ஆண்டில் உச்சம் தொட்டதாக தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

அஞ்சு, கேரளாவின் கோட்டயம் அருகே சீரன்சித்திரா கிராமத்தில் பிறந்தவர். இவர் 2002-ல் பூசானில் (தென்கொரியா) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகளப் போட்டியில் கலந்துகொண்டு இந்தியாவுக்காகத் தங்கம் வென்றவர். அதன் பிறகு சிறுநீரகப் பிரச்சினையில் அவதியுற்றாலும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அடுத்த ஆண்டே ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார்.

பாரிஸில் 2003-ல் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் (6.70 மீட்டர்) நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்று இந்திய வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் வரலாறு படைத்தார். தடகளத்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்தியத் தடகள வீராங்கனை என்ற பெருமையும் இவரையே சாரும். இதன்மூலம் உலகத் தரவரிசையாளர் பட்டியிலிலும் இடம்பிடித்தார்.

இதனை அடுத்து 2005-ல் உலகத் தடகள இறுதிச்சுற்றில் தங்கம் வென்றார். இதில் கலந்துகொண்டபோது தான் ஒரு சிறுநீரகத்தோடுதான் போட்டியில் கலந்துகொண்ட ரகசியத்தை கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கடந்தநிலையில் தற்போது அஞ்சு வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அஞ்சு கூறியுள்ளதாவது:

"நம்புவது சிரமம்தான், ஆனால் உண்மை அதுதான். ஒரு கிட்னியுடன் உலக உச்சத்தை அடைந்த மிகச் சிலரில் நான் அதிர்ஷ்டம் மிக்கவள். வலி ​​நிவாரணியினால் ஏற்படும் ஒவ்வாமை, கால்களை எடுத்துவைப்பதில் சிரமம், இவற்றையெல்லாம் மீறி சாதித்தேன். இதனைப் பயிற்சியாளரின் மேஜிக் என்றுதான் சொல்ல வேண்டும்''.

இவ்வாறு அஞ்சு பாபி ஜார்ஜ் தெரிவித்தார்.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் வாழ்த்து

அஞ்சுவின் ட்வீட்டுக்குப் பதிலளித்து, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கிரண் ரிஜிஜு தனது பதிவில் கூறுகையில் ''அஞ்சு, தங்கள் கடின உழைப்பு, மனதிடம் மற்றும் உறுதிப்பாடு மூலம் இந்தியாவுக்குப் பரிசுகளைப் பெற்றுத் தந்துள்ளீர்கள்.

அர்ப்பணிப்புள்ள பயிற்சியாளர்களும் தொழில்நுட்பக் குழுவினரால் தங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருந்தனர். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் நீங்கள் என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்!” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x