Published : 09 Dec 2020 10:15 AM
Last Updated : 09 Dec 2020 10:15 AM

கனவு போல் இருக்கிறது; இந்திய அணியினரின் ஆதரவுக்கு நன்றி: நடராஜன் உற்சாகம்

ஆஸ்திரேலியா

இந்திய அணியினரின் தொடர் ஊக்கத்திற்கும், ஆதரவுக்கும் நன்றி என்று தமிழக வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. சிட்னியில் நேற்று (டிசம்பர் 8) நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இருப்பினும் தொடரை வென்றது.

இந்த வெற்றியில் இந்திய அணியின் அறிமுக வேகப்பந்துவீச்சாளர் தமிழக வீரர் டி.நடராஜனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவின் ஆடுகளங்களில் அந்த நாட்டின் பேட்ஸ்மேன்களை அதிகமாக ரன்குவிக்க விடாமல் கட்டுப்படுத்தி, மிகத் துல்லியமாகப் பந்துவீசி அசத்தினார் நடராஜன்.

இதனால், பல்வேறு முன்னணி கிரிக்கெட் வீரர்கள் நடராஜனுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் தொடர் நாயகன் விருது வென்ற ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோரும் நடராஜனுக்குப் புகழாரம் சூட்டியுள்ளனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் டி20 தொடரை இந்திய அணி வென்றது குறித்து, தனது பந்துவீச்சு குறித்தும் நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

"இந்திய அணியுடனான எனது முதல் பயணம் மற்றும் டி20 தொடரில் நாங்கள் வென்றது எனக் கடந்த சில மாதங்களாக நடப்பவை எல்லாம் கனவு போல இருக்கிறது. வெற்றியாளர்களின் குழுவால் கனவு நனவான தருணம் விஷேசமானதாகி இருக்கிறது. தொடர் ஆதரவையும், ஊக்கமும் அளித்த என்னுடைய அணியினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி"

இவ்வாறு நடராஜன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x