Published : 31 May 2014 03:41 PM
Last Updated : 31 May 2014 03:41 PM

டெஸ்ட் கிரிக்கெட்டே சிறந்தது -மேக்ஸ்வெலுக்கு சேவாக் அறிவுரை

பிளே ஆஃப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் விஸ்வரூபம் எடுத்த சேவாக், சக வீரர் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

"நான் அவரிடம் (மேக்ஸ்வெலிடம்) டெஸ்ட் கிரிக்கெட்டே சிறந்தது என்று கூறினேன், பெயர் வர வேண்டுமென்றால் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது அவசியம். அவரும் இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளார், ஆகவே ஆஸ்ட்ரேலியா சென்று உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி சர்வதேச கிரிக்கெட் வாய்ப்பு கிடைக்கும்போது மேக்ஸ்வெல் நன்றாக ஆடுவார் என்று நம்புகிறேன்" என்றார் சேவாக்.

நேற்று 58 பந்துகளில் 122 ரன்களை விளாசினார் சேவாக். இந்த முக்கியமான இன்னிங்ஸ் குறித்து அவர் கூறியதாவது:

"நிச்சயம் ஒரு இன்னிங்ஸ் உண்டு என்பது எனக்குத் தெரியும் ஆனால் அது எப்போது நிகழும் என்பதில்தான் சந்தேகம் இருந்தது. ஆனால் பிளே ஆஃப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்த இன்னிங்ஸ் நிகழ்ந்தது உண்மையில் சிறப்பானது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த இன்னிங்ஸ் கைகூடியுள்ளது. நான் இந்திய அணியில் இல்லாதபோது உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் நான் சதம், இரட்டைச் சதம் என்று விளாசி மீண்டும் வருவேன் என்று எதிர்பார்த்தனர் ஆனால் அது நடைபெறவில்லை. நேரம் சரியாக இல்லையெனில் எது செய்தாலும் ஒன்றும் நடக்காது. நான் சரியாகவே விளையாடினேன், ஆனாலும் ரன்கள் எடுக்க முடியவில்லை.

இந்த இன்னிங்ஸை ஆடிய தினம் எனது தினம் என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன்.

பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் என்னை பெரிய அளவில் ஊக்குவித்தார். கேரி கர்ஸ்டன் அளவுக்கு சஞ்சய் பாங்கரும் நல்ல பயிற்சியாளர். கேரி கர்ஸ்டன் போலவே பாங்கரும் அமைதியானவர்"

இவ்வாறு கூறினார் சேவாக்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x