Published : 08 Dec 2020 06:03 PM
Last Updated : 08 Dec 2020 06:03 PM
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வரும் 17-ம் தேதி தொடங்கும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் ரவிந்திர ஜடேஜா விளையாடுவதற்கு வாய்ப்பில்லை என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியின்போது, ஜடேஜாவுக்குத் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் மிட்ஷெல் ஸ்டார்க் வீசிய பந்து ஜடேஜாவின் ஹெல்மெட்டில் பட்டுக் காயம் ஏற்பட்டது. இதனால், கன்கஸன் முறையில் ஜடேஜா களமிறங்காமல் அவருக்குப் பதிலாக யஜுவேந்திர சாஹல் களமிறங்கினார். அந்தப் போட்டியில் இந்திய அணி வென்றது.
இந்நிலையில் வரும் 17-ம் தேதி அடிலெய்டில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது. இந்தப் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்க உள்ளது. இதில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா பங்கேற்பது சந்தேகமாக உள்ளது.
இந்த டெஸ்ட் போட்டி ஜடேஜாவுக்கு 50-வது டெஸ்ட் போட்டியாக இருந்தாலும், தலையில் ஏற்பட்ட காயம், தொடைப் பகுதியில் தசைப்பிடிப்பு ஆகியவற்றால் 3 வாரங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என்பதால், அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரவிந்திர ஜடேஜா குறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், “ஐசிசி விதிமுறையின்படி, தலையில் எந்தவிதமான காயம் ஏற்பட்டாலும் அந்த வீரர் குறைந்தபட்சம் 7 முதல் 10 நாட்கள் வரை ஓய்வில் இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் பகலிரவு டெஸ்ட் தொடங்கப்படும் முன் வீரர்கள் கண்டிப்பாக பயிற்சிப் போட்டியில் விளையாட வேண்டும்.
ஆனால், ஜடேஜா இருக்கும் நிலையில் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க வாய்ப்பில்லை. தலையில் ஏற்பட்ட காயத்திலிருந்து வேகமாக ஜடேஜா குணமடைந்து வருகிறார் என்றாலும் தொடைப்பகுதி காயம் முழுமையாகச் சீரடையவில்லை.
ஆதலால், பயிற்சி ஆட்டத்தில் ஆடாத ஒரு வீரரை நிச்சயம் களத்தில் விளையாட வைக்க பிசிசிஐ விதிமுறையில் இடமில்லை. ஆதலால், முதல் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா பங்கேற்க வாய்ப்பு மிகக் குறைவு. தொடைப்பகுதி காயத்தால் ஜடேஜா முதல் அல்லது 2 டெஸ்ட் போட்டிகள் வரை பங்கேற்க வாய்ப்பில்லை” எனத் தெரிவிக்கின்றன.
இதுவரை ஜடேஜா 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 213 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், 1,869 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 14 அரை சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரவிந்திர ஜடேஜா இல்லாத சூழலில் குல்தீப் யாதவ் களமிறங்க வாய்ப்புண்டு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT