Published : 08 Dec 2020 02:48 PM
Last Updated : 08 Dec 2020 02:48 PM
சிட்னியில் நடந்த இந்திய ஏ மற்றும் ஆஸ்திரேலிய ஏ அணிகளுக்கு இடையே நடந்த பயிற்சி ஆட்டம் எந்த முடிவும் எட்டப்படாமல் சமனில் முடிந்தது.
இதில் இந்திய வீரர் கார்த்திக் தியாகி வீசிய பந்து, ஆஸி. பேட்ஸ்மேன் வில் புகோவ்ஸ்கி தலையில் பட்டதில் அவர் சுருண்டு விழுந்து பின்னர் வெளியேறினார்.
இந்தியா -ஆஸி. அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 17-ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இதற்கு முன்னதாக சிட்னியில் உள்ள டிரம்மோய்னி ஓவல் மைதானத்தில் 3 நாட்கள் பயிற்சி ஆட்டம் இந்தியா, ஆஸி ஏ அணிகளுக்கு இடையே கடந்த 6-ம் தேதி தொடங்கியது.
இந்திய ஏ அணிக்கு ரஹானே கேப்டனாகப் பொறுப்பேற்று வழிநடத்தினார். இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 93 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் கேப்டன் ரஹானே சதம் அடித்து 117 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவருக்குத் துணையாக புஜாரா 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்களான பிரித்வி ஷா, விருதிமான் சாஹா கில் ஆகியோர் டக் அவுட்டில் வெளியேறினர். விஹாரி 15, அஸ்வின் 5 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஆஸி.ஏ அணி தரப்பில் பேட்டின்ஸன் 3 விக்கெட்டுகளையும், டிராவிஸ் ஹெட், நீஸர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து, ஆஸி. ஏ அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் ஆஸி. ஏ அணி 9 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இதில் கேமரூன் கிரீன் 125 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சுமாராகவும், சொற்ப ரன்களிலும் வெளியேறினர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புகோவ்ஸ்கி ஒரு ரன்னில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஜோ பர்ன்ஸ் 4 ரன்களில் உமேஷ் பந்துவீச்சில் வெளியேறினார்.
இந்தியத் தரப்பில் உமேஷ், சிராஜ் தலா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்திய ஏ அணி 2-வது இன்னிங்ஸில் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. ஆஸி.பந்துவீச்சாளர் மெக் ஸ்டீகிட் பந்துவீச்சில் இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
2-வது இன்னிங்கில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் சேர்த்த நிலையில், இந்திய அணி டிக்ளேர் செய்தது. இந்திய ஏ அணியில் அதிகபட்சமாக விருதிமான் சாஹா 54 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
விஹாரி, ரஹானே தலா 28 ரன்களும், கில் 29 ரன்கள், பிரித்வி ஷா 19 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். ஆஸி. தரப்பில் ஸ்டீகிட் 5 விக்கெட்டுகளையும் , கீரீன், நீஸர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
131 ரன்கள் இலக்குடன் ஆஸி.ஏ அணி களத்தில் இறங்கியது. புகோவ்ஸ்கி, பர்ன்ஸ் ஆட்டத்தைத் தொடங்கினர். புகோவ்ஸ்கி 23 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஆட்டத்தின் 13-வது ஓவரை வேகப்பந்துவீ்ச்சாளர் கார்த்திக் தியாகி வீசினார். கார்த்திக் பவுன்ஸராக வீசிய பந்தைப் பார்த்து புகோவ்ஸ்கி குனிவதற்குள் ஹெல்மெட்டில் பந்து தாக்கியது.
இதில் ஹெல்மெட்டில் பந்து பட்ட வேகத்தில் தேர்ட் மேன் திசையில் பவுண்டரிக்குச் சென்றது. ஹெல்மெட்டில் பந்து பட்டவுடன் தரையில் முழங்காலிட்டு மண்டியிட்டு புகோவ்ஸ்கி விழுந்தார். உடனடியாக மற்ற வீரர்கள் வந்து உதவி செய்தனர்.
இதையடுத்து, ஆஸி. உடற்தகுதி வல்லுநர் வரழைக்கப்பட்டு ஆய்வு செய்தார். புகோவ்ஸ்கி தொடர்ந்து விளையாட முடியாத சூழலில் இருப்பதையடுத்து, அவர் ரிட்டயர்ட் ஹர்ட்டில் வெளியேறினார்.
புகோவ்ஸ்கி கன்கஸனில் வெளியேறுவது இது 9-வது முறையாகும். இதுபோல் பலமுறை உள்ளூர் போட்டிகளில் விளையாடி காயத்தால் வெளியேறியுள்ளார். தற்போது ஆஸி. அணியில் தொடக்க வீரர் வார்னர் காயத்தில் அவதிப்படுவதால் அவருக்கு பதிலாக ஜோ பர்னிஸுடன் புகோவ்ஸ்கியை களமிறக்கப் பயிற்சியாளர் லாங்கர் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் ஜோபர்ஸ்ன் இரு இன்னிங்ஸிலும் 0,4 என்று ரன்கள் சேர்த்து கவலையளிக்கும் விதத்தில் பேட் செய்துள்ளார். இதனால், ஆஸி. தொடக்க வரிசை கவலைக்குரியதாக மாறியுள்ளது.
ஆஸி.ஏ அணி 2-வது இன்னிங்ஸில் ஒருவிக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்தது. ஹாரிஸ் 25 ரன்களிலும், ஹெட் 2 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
Fingers crossed for Will Pucovksi, who's retired hurt after this nasty blow to the helmet.
Live scores from #AUSAvIND: https://t.co/MfBZAvzAkr pic.twitter.com/pzEBTfipF2— cricket.com.au (@cricketcomau) December 8, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT