Last Updated : 07 Dec, 2020 06:01 PM

 

Published : 07 Dec 2020 06:01 PM
Last Updated : 07 Dec 2020 06:01 PM

கேப்டன் கோலி புதிய சாதனை; தோனி, ரெய்னாவின் சாதனையை முறியடித்த தவண்: பும்ராவின் விக்கெட்டை சமன் செய்த சாஹல்

விராட் கோலி: படம் | ஏஎன்ஐ.

சிட்னி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வென்ற நிலையில் கேப்டன் கோலி, தவண், சாஹல் ஆகிய மூவரும் குறப்பிடத்தகுந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

சிட்ன் நகரில் நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் சேர்த்தது. 195 ரன்கள் இலக்கைத் துரத்திய இந்திய அணி 2 பந்துகள் மீதமிருக்கையில் இலக்கை அடைந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

டி20 தொடரை வெல்வதற்கு ஹர்திக் பாண்டியாவின் காட்டடி ஆட்டமும், தமிழக வீரர் டி.நடராஜனின் கட்டுக்கோப்பான பந்துவீச்சும் முக்கியக் காரணமாக அமைந்தது.

இந்த ஆட்டத்தில் சுழற்பந்துவீச்சாளர் யஜூவேந்திர சாஹல் ஒரு விக்கெட்டை மட்டுமே அதாவது ஸ்மித் விக்கெட்டை மட்டும் வீழ்த்தினார். இந்த விக்கெட்டை வீழ்த்தியபோது சாஹல் குறிப்பிடத்தகுந்த மைல்கல்லை டி20 போட்டியில் எட்டினார்.

அதாவது வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தற்போது டி20 போட்டிகளில் 50 போட்டிகளில் 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், அவருடன் சாஹலும் இணைந்தார். ஆனால், சாஹல் 44 போட்டிகளிலேயே 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண் நேற்று அரை சதம் அடித்த நிலையில் டி20 போட்டிகளில் அதிகமான ரன் சேர்த்த 3-வது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் தோனி, ரெய்னாவின் சாதனையையும் தவண் முறியடித்துள்ளார்.

முதலிடத்தில் விராட் கோலியும், 2-வது இடத்தில் ரோஹித் சர்மா இருக்கும் நிலையில், தவண் 1,641 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளார். 6-வது இடத்தில் இருக்கும் கே.எல்.ராகுல் 3-வது டி20 போட்டியில் 76 ரன்கள் குவித்தால் 4-வது இடத்துக்கு முன்னேற முடியும்.

கேப்டன் விராட் கோலியைப் பொறுத்தவரை ஆஸி.க்கு எதிரான டி20 தொடரை வென்றதையடுத்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு எதிராக அந்நாட்டிலேயே டி20 தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.

இதற்கு முன் கேப்டனாக இருந்த தோனி, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகத்தான் டி20 தொடரை வென்றிருந்தார். ஆனால், நியூஸிலாந்து, இங்கிலாந்தில் அவர் தலைமையில் இந்திய அணி தொடரை வென்றதில்லை.

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் தொடரை வென்ற ஒரே இந்திய கேப்டன் விராட் கோலி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் தென் ஆப்பிரிக்க கேப்டன் டூப்பிளசிஸ் ஆஸ்திரேலிய மண்ணில் டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x