Published : 06 Dec 2020 07:17 PM
Last Updated : 06 Dec 2020 07:17 PM
ஆட்டநாயகன் விருதுக்கு தகுதியானவர் நடராஜன்தான். அவரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால்தான் இலக்கில் 10 ரன்கள் குறைந்தது என்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய வீரர் ஹர்திஸ் பாண்டியா பெருந்தன்மையுடன் தெரிவித்தார்.
ஆனால், கேப்டன் கோலி தனது பேச்சில் ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் குறித்து பெருமிதமாகக் குறிப்பிட்ட நிலையில், நடராஜனின் பந்துவீச்சை பாண்டியா அளவுக்கு பெரிதாகக் குறிப்பிடாமல் இருந்தது ஏனோ எனத் தெரியவி்ல்லை.
சிட்னியில் இன்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் சேர்த்தது. 195 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்கைத் துரத்திய இந்திய அணி 2 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது. ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தவறவிட்டாலும், டி20 தொடரை வென்று ஆஸிக்கு பதிலடி கொடுத்தது.
இந்திய அணியின் இன்றைய வெற்றிக்கு இருவரை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். ஒருவர் காட்டடி தர்பார் நடத்திய ஹர்திக் பாண்டியா, மற்றொருவர் யார்கர் மன்னன் நடராஜன்.
பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரி என்று அழைக்கப்படும் சிட்னி மைதானத்தில் தனது துல்லியமான யார்கர், லென்த் பந்துவீச்சால் ஆஸி. பேட்ஸமேன்களை திணறவிடுவது சாதாரண காரியமல்ல. 4 ஓவர்கள் வீசிய நடராஜன் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா போன்ற அசுரத்தனமான அணிக்கு எதிராக கட்டுக்கோப்பாக பந்துவீசுவது எளிதான காரியமல்ல. அதை நடராஜன் கச்சிதமாகச் செய்தார். உண்மையில் நடராஜனுக்குத்தான் ஆட்டநாயகன் விருது அளித்திருக்க வேண்டும். நடராஜன் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து ஹென்ரிக்ஸ், ஷார்ட் ஆகியோரின் விக்கெட்டைச் சாய்த்தார். இதில் நடராஜன் வீசிய 4 ஓவர்களில் 8 டாட் பந்துகள், ஒரு பவுண்டரி மட்டுமே அடிக்க அனுமதித்தார்.
22 பந்துகளைச் சந்தித்த ஹர்திக் பாண்டியா 2 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் உள்பட 42 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார். இந்தவிருதுக்குப்பின் அளித்த பேட்டியில் கூறியதாவது:
“ இந்த வெற்றி எளிதானது. இதுபோன்ற ஸ்கோர் கார்டை பார்த்துக்கொண்டு விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். எந்தமாதிரியான ஷாட்களை விளையாடலாம் என சிந்தித்து அடிக்கலாம். அனைத்துப் போட்டிகளில் டி20 போட்டிகளி்ல் அதிகமான நேரம் இருக்கிறது என்று நீங்கள் உணர்ந்ததைவிட நான் உணர்ந்துவிட்டேன்.
கடைசி 5 ஓவர்களில் இலக்கு 80, 90,100 ரன்கள் இருந்தாலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அணியாக எங்களுக்கு நல்ல நம்பிக்கை இருக்கிறது ஒவ்வொருக்கும் நல்ல வாய்ப்பு கிடைக்கும். என்னைப் பொருத்தவரை இன்றைய ஆட்டத்தில் நடராஜனுக்குத்தான் ஆட்டநாயகன் விருது வழங்கியிருக்க வேண்டும். அவரின் துல்லியமான பந்துவீச்சால்தான் இலக்கில் 10 ரன்கள் குறைந்தது” . இவ்வாறு பாண்டியா தெரிவித்தார்.
தொடரை வென்றது குறித்து கேப்டன் கோலி கூறியதாவது
“ ஒரு அணியாக ஒற்றுமையாக விளையாடி தொடரை வென்றது மகிழ்ச்சி. உண்மை என்னவென்றால் ரோஹித் சர்மா, பும்ரா போன்ற ஒருநாள் டி20 போட்டிகளில் வளர்ந்த திறமையான வீரர்கள் இல்லாமல் தொடரை வென்றுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் 14 போட்டிகளுக்குள் விளையாடிய அனுபவம் உள்ள இளைஞர்கள். ஒவ்வொருவரும் அவர்களின் திட்டத்தை நன்கு உணர்ந்து களத்தில் செயல்படுத்தினார்கள். இளம் வீரர்கள் தங்களுக்கான வாய்ப்பை பயன்படுத்தி பங்களிப்புச் செய்தார்கள்.
கடந்த 2016-ல் ஹர்திக் பாண்டியா அணிக்குள் வந்ததே அவரின் முழுத் திறமையால்தான். உண்மையான திறமைசாலி இது அவருக்கான நேரம் என்பதை ஹர்திக் உணர்கிறார். அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் அணிக்கு மிகப்பெரிய சொத்தாக ஹர்திக் பாண்டியா மாறி எந்தப் போட்டியையும் வெல்லும் திறமை படைத்தவராக மாறுவார்.
அவரி்ன் திட்டம் சரியாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏபிடி போன்ற ஷாட்டை நான் ஆடியபோது ஆன்ட்ரூ டை கூட எதிர்பார்க்கவில்லை. இன்று இரவு ஏபிடிக்கு என் ஷாட் குறித்து தெரிவிப்பேன்”
இவ்வாறு கோலி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT