Published : 06 Dec 2020 06:41 PM
Last Updated : 06 Dec 2020 06:41 PM
ஹர்திக் பாண்டியான் காட்டடி தர்பார், யார்கர் மன்னன் நடராஜனின் துல்லியமான பந்துவீச்சு, தவண், கோலியின் பொறுப்பான ஆட்டத்தால், சிட்னியில் இன்று நடந்த 2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் சேர்த்தது. 195 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்கைத் துரத்திய இந்திய அணி 2 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது. ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தவறவிட்டாலும், டி20 தொடரை வென்று ஆஸிக்கு பதிலடி கொடுத்தது.
சிட்னி மைதானத்தில் இந்த போட்டியோடு சேர்த்து இதுவரை 3 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடி அனைத்திலும் வென்றுள்ளது. டி20 போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து பெறும் 10-வது வெற்றியாகும்.
ஆட்டநாயகன் விருதுக்கான பந்துவீச்சு
இந்திய அணியின் இன்றைய வெற்றிக்கு இருவரை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். ஒருவர் காட்டடி தர்பார் நடத்திய ஹர்திக் பாண்டியா, மற்றொருவர் யார்கர் மன்னன் நடராஜன்.
பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரி என்று அழைக்கப்படும் சிட்னி மைதானத்தில் தனது துல்லியமான யார்கர், லென்த் பந்துவீச்சால் ஆஸி. பேட்ஸமேன்களை திணறவிடுவது சாதாரண காரியமல்ல. 4 ஓவர்கள் வீசிய நடராஜன் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா போன்ற அசுரத்தனமான அணிக்கு எதிராக கட்டுக்கோப்பாக பந்துவீசுவது எளிதான காரியமல்ல. அதை நடராஜன் கச்சிதமாகச் செய்தார். உண்மையில் நடராஜனுக்குத்தான் ஆட்டநாயகன் விருது அளித்திருக்க வேண்டும்.
ஹர்திக் பாண்டியா வெற்றிக்குப்பின் அளித்த பேட்டியில் பேசும்போது, “ இன்று எனக்கு ஆட்டநாயகன் விருது வழங்கியதைவிட நடராஜனுக்குத்தான் வழங்கியிருக்க வேண்டும். அவரால்தான் இலக்கு 10ரன்கள் குறைந்தது” எனப் பெருமையாகக் குறிப்பி்ட்டார். ே
சேலம் சின்னப்பம்பட்டியின் கொடி சிட்னியில் பறக்கிறது….
ஹர்திக் ஆட்டநாயகன்
ஆனால், காட்டடியால் மிரட்டிய ஹர்திக் பாண்டியாவுக்கு ஆட்டநாயகன் வழங்கப்பட்டதும் தகுதியானதுதான். 22 பந்துகளைச் சந்தித்த ஹர்திக் பாண்டியா 2 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் உள்பட 42 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த இரு சிக்ஸர்களுமே கடைசி ஓவரில் வெற்றிக்காக ஹர்திக் பாண்டியா அடிக்கப்பட்டதுதான்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. சாம்ஸ் பந்துவீசினார் ஹர்திக் பாண்டியா எதிர்கொண்டார். முதல் பந்தில்2 ரன்களும், 2-வது பந்தில் வைட் லாங்கானில் ஒரு சிக்ஸர் விளாசினார் பாண்டியா, 3-வது பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை. 4-வது பந்தில் டீப் மிட்விக்கெட்டில் சிக்ஸர் விளாசி வெற்றியை ஹர்திக் எளிதாக்கினார்.
இந்திய அணியைப் பொருத்தவரை பந்துவீச்சில் இரு தமிழக வீரர்களும் தங்களை ஒரு நாள் போட்டிகளுக்கும் தகுதியானவர்கள் நிருபித்து விட்டனர். வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்கள் வீசி 35 ரன்கள் கொடுத்து கட்டுக்கோப்பாக வீசினார்.
நடராஜன் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து ஹென்ரிக்ஸ், ஷார்ட் ஆகியோரின் விக்கெட்டைச் சாய்த்தார். இதில் நடராஜன் வீசிய 4 ஓவர்களில் 8 டாட் பந்துகள், ஒரு பவுண்டரி மட்டுமே அடிக்க அனுமதித்தார்.
மற்றவகையில் ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர் இருவரின் பந்துவீச்சும் இன்று எடுக்கவில்லை. இதில் தாக்கூர் 12 ரன்ரேட்டும், சாஹர் 10 ரன்ரேட்டிலும் ரன்களை வாரி வழங்கினர். சாஹல் சிறப்பாகப் பந்துவீசினாலும் இந்தப் போட்டியில் ரன்களைஅதிகமாக விட்டுக்கொடுத்தார்.
தவண் அருமை
பேட்டிங்கைப் பொறுத்தவரை கடந்த போட்டியில் செய்த தவற்றை இந்தப் போட்டியில் தவண் செய்யவில்லை. நிதானமாக ஆடிய தவண் அரைசதம் அடித்து வலுவான அடித்தளம் அமைய உதவினார். கேப்டன் கோலி வழக்கமான தனது அதிரடி ஆட்டத்தால் நடுப்பகுதியில் அணியை தூக்கிப் பிடித்தார். கோலி இருக்கும்வரை நிதானமாக ஆடிய ஹர்திக் பாண்டியா கடைசி இரு ஓவர்களில் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார்.
இந்திய அணி முதல் 7 ஓவர்களில் 60 ரன்களும், 7 ஓவர்கள் முதல் 15 ஓவர்கள் வரை 84 ரன்களும், கடைசி 5 ஓவர்களில் 54 ரன்களும் சேர்த்தனர்.
பலவீனமான ஆஸி.
டாஸ் வென்ற கோலி பீல்டிங்கைத் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் பின்ச், ஹேசல்வுட், மிட்ஷெல் ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகியோர் இல்லாமல் வலுவற்ற அணியாகவே களமிறங்கியது.
இதனால் வழக்கமான பந்துவீச்சாளர்கள் இல்லாததால், பந்துவீச்சில் சற்று பலவீனமான அணியாகவே இருந்தது. அதுமட்டுமல்லாமல் ஸ்டாய்னிஷ் முழுமையான உடற்தகுதி பெறவில்லை.
இதனால் இன்றைய ஆட்டத்தில் பந்துவீசாமல் பேட்டிங் மட்டுமே செய்தார். பந்துவீச்சில் வலுவான வீரர்கள் யாருமில்லாததால்தான் 7 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியும் இந்திய அணியின் பேட்டிங்கை கட்டுப்படுத்த முடியவில்லை.
ஐபிஎல் தொடரில் விளையாடி ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் அய்யர் போன்ற செம ஃபார்மில் இருக்கும்போது அவர்களைக் அடக்குமாறு பந்துவீசுவது என்பது கடினமான செயல். அதிலும் சாம்ஸ்ன்போன்ற அனுபவமற்ற பந்துவீச்சாளரை கடையில் வீசச் செய்வது தோல்வியை தட்டில் வைத்து பெற்றுக்கொள்வதாகும்.
மேத்யூ பரிதாப ரன்அவுட்
பேட்டிங்கில் மேத்யூவேட் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து 58 ரன்னில் ஆட்டமிழந்தார். மேத்யூவேட் அடித்த பந்தை கோலி கேட்ச் பிடிக்க தவறினாலும், அதே பந்தில் ரன்அவுட் செய்தால் வேட் பரிதாபமாகவெளியேறினார்.
நடுவரிசையில் துணையாக ஆடிய ஸ்மித் 46 ரன்னில் வெளியேறினார். மற்றவகையில் இருந்த வீரர்கள் ஹென்ரிக்ஸ்(26), ஷார்ட்(9), போன்றோருக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடிய போதுமான அனுபவமில்லை என்பதையே காட்டியது. மேக்ஸ்வெல்(22) ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்டாய்னிஷ் 16, சாம்ஸ் 8 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
20 ஓவர்களில் ஆஸி. அணி 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் சேர்த்தது.
நல்லஅடித்தளம்
195 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தவண், ராகுல் நல்ல தொடக்கம் அளித்து அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்த நிலையில் ராகுல் 30 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கோலி, தவணுடன் சேர்ந்தார்.
இருவரும் ஆஸ்திரேலியப் பந்துவீச்சை பதம்பார்த்து, பவுண்டரி, சிக்ஸருக்கும் தள்ளினர். பவர்ப்ளேயில் இந்திய அணி ஒருவிக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய தவண் 34 பந்துகளில் அரைசதம் அடித்து,52 ரன்னில்(36பந்துகள் 2சிக்ஸர்,4பவுண்டரி) ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு 3 ரன்கள் சேர்த்தனர்.
இந்திய அணி 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. கடைசி 8 ஓவர்களில் 95 ரன்கள் அடிக்க வேண்டியது இருந்தது. கோலி, சாம்ஸன் ஜோடி நீண்டநேரம் நிலைக்கவில்லை. சாம்ஸன் ஒருசிக்ஸர், பவுண்டரி என 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஹர்திக் பாண்டியா, கோலியுடன் சேர்ந்தார்,
கோலி அடித்து ஆட, ஹர்திக் நிதானம் காட்டினார். கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 54 ரன்கள் தேவைப்பட்டது. சாம்ஸ் வீசிய 17-வது ஓவரில் கோலி 40(24பந்து 2சிக்ஸ்,2பவுண்டரி) ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கி பாண்டியாவுடன் சேர்ந்தார்.
இருவரும் அணியை வெற்றியை நோக்கி நகர்த்தினர். ஸம்ப்பா வீசிய 18-வது ஓவரில் சிக்ஸர்,பவுண்டரி என ஸ்ரேயாஸ் 12ரன்கள் சேர்த்தார்.
ஹர்திக் ருத்ரதாண்டவம்
கடைசி இரு ஓவர்களில் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை ஆன்ட்ரூ டை வீச, அந்த ஓவர் முழுவதையும் பாண்டியா சந்தித்தார். 2பவுண்டரி உள்பட 11 ரன்களை பாண்டியா சேர்த்து கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தார்.
20 ஓவரை சாம்ஸன் வீசி ஹர்திக் எதிர்கொண்டார். வெற்றிக்கு 6பந்தில் 14 ரன்கள் தேவைப்பட்டது. சாம்ஸ் வீசிய முதல் பந்தில் 2 ரன்கள் சேர்த்த பாண்டியா 2-வது பந்தில் லாங்ஆன்திைசயில் சிக்ஸர் விளாசினார், 3-பந்தில் ரன்ஏதும் அடிக்கவி்்்ல்லை 4-பந்தில் டீப் மிட்விக்கெட்டில் உயரமாக சிக்ஸர் விளாசி பாண்டியா அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் சேர்த்து இந்திய அணி வென்றது. ஹர்திக் பாண்டியா 42 ரன்னிலும், ஸ்ரேயாஸ் 15 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஆஸ்திரேலியத் தரப்பில் ஆன்ட்ரூ, ஸ்வீப்ஸன், ஸ்ம்பா, சாம்ஸ் தலா ஒருவிக்கெட்டை வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT