Published : 06 Dec 2020 08:01 AM
Last Updated : 06 Dec 2020 08:01 AM

ஆஸி.க்கு பின்னடைவு:  டி20 அணியிலிருந்து வேகப்பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க் திடீர் விலகல்

ஆஸி. வேகப்பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க் : கோப்புப்படம்

சிட்னி


ஆஸ்திரேலிய டி20 அணியிலிருந்து வேகப்பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க் திடீரென விலகுவாக இன்று அறிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டி சிட்னியில் இன்று நடைபெற இருக்கும் நிலையில் திடீரென ஸ்டார்க் அறிவித்துள்ளார்.

தன்னுடைய குடும்பத்தில் உள்ள சிலருக்கு உடல்நலமில்லாமல் இருப்பதால்,அவர்களுடன் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அணியிலிருந்து விலகுகிறேன் என்று ஸ்டார்க் தெரிவித்துள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதனால் இந்தியாவுக்கு எதிராக அடுத்து வரும் இரு டி20 போட்டிகளிலும் ஸ்டார்க் பங்கேற்கமாட்டார். அதுமட்டுமல்லாமல் ஸ்டார்க் எப்போது மீண்டும் அணிக்குத் திரும்புவார் என்ற தகவலும் உறுதியாக அவர் தெரிவிக்கவில்லை. ஆதலால், வரும் 17-ம் தேதி தொடங்கும் பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் ஸ்டார்க் இடம் பெறுவாரா என்பதும் சந்தேகமாக இருக்கிறது.

இதுகுறித்து ஆஸ்திேரலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் வெளியிட்ட அறிவிப்பில், “ உலகில் குடும்பத்தைவிட முக்கியமானது வேறு ஏதும் இல்லை. இதில் மிட்ஷெல் ஸ்டார்க்கும் விதிவிலக்கல்ல. ஸ்டார்க் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல்நலக் கோளாறு இருப்பதால் அவரை இந்த நேரத்தில் விடுவிக்கிறோம். அவர் திரும்பவும் அணிக்கு வருவதை எப்போதும் வரவேற்கிறோம். எந்த நேரம் அவருக்கு சரியானதாக தோன்றுகிறோ அப்போது அணிக்குத் திரும்பலாம்” எனத் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு எதிராக 3-வது ஒருநாள் போட்டியிலும் ஸ்டார்க் விளையாடவில்லை. ஆனால், முதல் டி20 போட்டியில் விளையாடினார். ஆனால், அடுத்துவரும் இரு டி20 போட்டிகளிலும் ஸ்டார்க் அணியில் இல்லாதது ஆஸி அணிக்கு மிக்பெரிய பின்னடைவாகத்தான் இருக்கும்.

ஸ்டார்க் இல்லாத நிலையில் வேகப்பந்துவீச்சாளர் ஆன்ட்ரூ டை அல்லது அறிமுக வீரர் டேனியல் சாம்ஸ் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். இதில் ஆன்ட்ரூ டை கடந்த 2 ஆண்டுகளாக ஆஸ்திேரலிய அணியில் இடம் பெறவில்லை. இப்போது வாய்ப்பு பெற்றால் 2 ஆண்டுகளுக்குப்பின் ஆஸி அணிக்குள் திரும்பி வருவார்.

ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர், ஆஸ்டன் அகர், ஸ்டாய்னிஸ், மிட்ஷெல் மார்ஷ் ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு ஓய்வில் உள்ளனர். இதில் கம்மின்ஸுக்கும் பணிப்பளு காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் ஸ்டார்க்கும் இல்லாதது அணிக்கு பின்னடைவாக அமையும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x