Published : 04 Dec 2020 06:55 PM
Last Updated : 04 Dec 2020 06:55 PM
நடராஜன், சாஹலின் அருமையான பந்துவீச்சு, கே.எல்.ராகுல், ஜடேஜாவின் அதிரடியான பேட்டிங் ஆகியவற்றால் கான்பெரேராவில் இன்று நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.
முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது. 162 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் மட்டுமே சேர்த்து 11 ரன்களில் தோல்வி அடைந்தது.
டி20 போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து பெறும் 10-வது வெற்றி இதுவாகும். ரவீந்திர ஜடேஜாவின் ஹெல்மெட்டில் பந்துபட்டதால், கன்கஸன் வீரராக யஜுவேந்திர சாஹல் களமிறங்கினார்.
விளையாடும் 11 வீரர்கள் கொண்ட அணியில் சாஹல் இல்லாத நிலையில், கன்கஸன் வீரராக சாஹல் களமிறங்கி 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
டி20 அணியில் முதன்முதலில் இடம் பெற்ற யார்க்கர் மன்னன் தமிழக வீரர் டி.நடராஜன், 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
முத்திரை பதித்த இரு தமிழக வீரர்கள்
இந்த ஆட்டத்தில் இரு தமிழர்கள் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர். ஒருவர் வேகப்பந்துவீச்சாளர் நடராஜன், மற்றொருவர் வாஷிங்டன் சுந்தர்.
இதில் வாஷிங்டன் சுந்தர் விக்கெட் ஏதும் வீழ்த்தாவிட்டாலும், கட்டுக்கோப்பான அவரின் பந்துவீச்சு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களைத் திணறவைத்தது. 4 ஓவர்கள் வீசிய சுந்தர் 16 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதில் 13 டாட் பந்துகளாகும்.
இடதுகை வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதில் 7 டாட் பந்துகள். ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
இதில் நடராஜன் வீழ்த்திய 3 விக்கெட்டுகளுமே திருப்புமுனையான விக்கெட்டுகள். மேக்ஸ்வெல், ஷார்ட் என வலுவான பேட்ஸ்மேன்களும், ஸ்டார்க் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணியில் முத்திரை பதித்துவிட்டார்.
"திருப்பதிக்கே லட்டு" நடராஜன்
சர்வதேச வீரர்களைத் தனது யார்க்கர் பந்துவீச்சால் திணறடிக்கும் மிட்ஷெல் ஸ்டார்க்கையே யார்க்கர் மூலம் போல்டாக்கி வழியனுப்பி வைத்தார் தமிழக வீரர் நடராஜன். இது நடராஜனின் யார்க்கர் பந்துவீச்சுக்குக் கிடைத்த மிகப்பெரிய மரியாதையாகும். ஒட்டுமொத்தத்தில் இந்திய அணியின் பந்துவீச்சுக்குக் கிடைத்த சிறந்த வெற்றியாகும்.
சிறப்பாகப் பந்துவீசும் வாஷிங்டன் சுந்தரை ஏன் டி20 போட்டிக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் எனத் தெரியவில்லை. அவரை ஒருநாள் போட்டிக்குப் பயன்படுத்தும்போது நல்ல ஆல் ரவுண்டராக வருவதற்கும், அணிக்கு 6-வது பந்துவீச்சாளராகவும் பயன்படுத்தவும் முடியும்.
இந்திய அணியைப் பொறுத்தவரை 160 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர்தான். அந்த ஸ்கோருக்குள் ஆஸி.அணியை அவர்களின் சொந்த மண்ணில் கட்டுப்படுத்தும் அளவுக்கு இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாகவே இருந்தது. குறிப்பாக சாஹல், சுந்தர், நடராஜனின் பந்துவீச்சு அற்புதமாக இருந்தது.
ஜட்டுவின் காட்டடி
பேட்டிங்கில் நம்பிக்கை நாயகன் கோலி விரைவாக ஆட்டமிழந்தாலும் ராகுல், ஜடேஜாவின் ஆட்டம்தான் அணியின் ஸ்கோர் இந்த அளவுக்கு உயரக் காரணமாக அமைந்தது. அதிலும் ஜடேஜா கடைசி இரு ஓவர்களில் அடித்த 34 ரன்கள் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை ஸ்டார்க் ஒருநாள் தொடரிலிருந்தே சிறப்பாகப் பந்துவீசவில்லை என்பது டி20 தொடரிலும் நன்றாகத் தெரிந்தது. ஹென்ரிக்ஸ் சிறப்பாகப் பந்துவீசினார்.
ஆடம் ஸம்ப்பா கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார். பேட்டிங்கில் பின்ச், ஷார்ட் ஆட்டமிழந்தபின் நடுவரிசையிலும், கடைசி வரிசையிலும் எந்த வீரர்களும் நிலைத்து ஆடவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் (2), ஸ்மித் (12), வேட் (7) என சொற்ப ரன்களில் வெளியேறினர்.
162 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆரோன் பின்ச், ஷார்ட் வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.
முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்த நிலையில் சாஹல் பந்துவீச்சில் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து பின்ச் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்மித் (12) ரன்களில் சாஹல் பந்துவீச்சிலும், மேக்ஸ்வெல் 2 ரன்களிலும் நடராஜன் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினர்.
ஹென்ரிக்ஸ், ஷார்ட் ஓரளவுக்கு நிலைத்து ஆடினர். நடராஜன் பந்துவீச்சில் ஷார்ட் 34 ரன்கள் சேர்த்த நிலையில் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த மேத்யூ வேட் 7 ரன்களில் சாஹலிடம் விக்கெட்டை இழந்தார். வேகப்பந்துவீச்சாளர் ஸ்டார்க் விக்கெட்டை நடராஜன் யார்க்கர் மூலம் வீழ்த்தினார்.
ஸ்வீப்ஸன், 12 ரன்களிலும், அபாட் 12 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் ஆஸி அணி 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்து 11 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்தியத் தரப்பில் நடராஜன், சாஹல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் பின்ச் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, முதன்முதலாகத் தமிழக வீரர் டி.நடராஜன் டி20 அணியில் வாய்ப்பு பெற்றார்.
ஷிகர் தவண், கே.எல்.ராகுல் களமிறங்கினர். மிட்ஷெல் ஸ்டார்க்கும், ஹேசல்வுட்டும் தங்களின் முதல் ஓவரில் இந்திய பேட்ஸ்மேன்களை மிரட்டிக் கட்டுப்படுத்தினர். ஸ்டார்க் வீசிய 3-வது ஓவரில் அவரின் ட்ரேட்மார்க் டெலிவரியான அவுட் ஆஃப் ஸ்டெம்ப்பில் க்ளீன் போல்டாகி தவண் ஒரு ரன்னில் வெளியேறினார்.
அடுத்து கோலி களமிறங்கி ராகுலுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆட பவர் ப்ளேவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் சேர்த்தது. ஸ்வீப்ஸன் வீசிய 7-வது ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து கோலி 9 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
3-வது விக்கெட்டுக்கு வந்த சாம்ஸன், ராகுலுடன் சேர்ந்து அதிரடியாக சில ஷாட்களை ஆடி சிக்ஸர் பவுண்டரியை விளாசினார். 10 ஓவரில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய கே.எல்.ராகுல் 37 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
ஹென்ரிக்ஸ் வீசிய 11-வது ஓவரில் ஸ்ட்ரெயிட் கவர் ஆட முற்பட்டு ஸ்வீப்ஸனிடம் கேட்ச் கொடுத்து 23 ரன்களில் சாம்ஸன் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 38 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்துவந்த மணிஷ் பாண்டே நிலைக்கவில்லை. ஸம்ப்பா வீசிய 13-வது ஓவரில் தேர்ட்மேன் திசையில் ஹசல்வுட்டிடம் கேட்ச் கொடுத்து 2 ரன்களில் வெளியேறினார். நிதானமாக பேட் செய்த ராகுல் 51 ரன்களில் (40 பந்துகள், 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) ஹென்கிர்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
86 ரன்கள் வரை 2 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி, அடுத்த 6 ரன்களைச் சேர்ப்பதற்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. 6-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஜோடி அணியை நிதானமாகக் கொண்டு சென்றது. ஆஸ்திரேலிய வீரர்கள் ஹென்கிர்ஸ், ஹேசல்வுட் பந்துவீச்சை அடிக்க முயன்றும் பாண்டியாவால் முடியவில்லை.
அதிரடி ஜடேஜா
ஹென்ரிக்ஸ் வீசிய 17-வது ஓவரில் லாங் ஆஃப் திசையில் தூக்கி அடித்து ஸ்மித்தால் கேட்ச் பிடிக்கப்பட்டு பாண்டியா 16 ரன்களில் ஆட்டமிழந்தார். 7-வது விக்கெட்டுக்கு வந்த சுந்தர், ஜடேஜாவுடன் சேர்ந்து அவருக்கு ஒத்துழைத்தார்.
ஜடேஜா ஒருபுறம் அதிரடியில் தூள் பறக்க, சுந்தர் நிதானமாக பேட் செய்தார். ஹேசல்வுட் வீசிய 19-வது ஓவரில் ஜடேஜா 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 23 ரன்கள் சேர்த்தார். இந்த ஓவரில் ஜடேஜாவுக்குத் தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டபோதிலும் பொறுத்துக்கொண்டு அதிரடியாக பேட் செய்தார்.
ஸ்டார்க் வீசிய கடைசி ஓவரில் 2-வது பந்தில் ஜடேஜா ஹெல்மெட்டில் பந்துபட்டு சென்றபோதிலும் கேட்ச் பிடிக்க முடியவில்லை. அடுத்த பந்தில் சுந்தர் 7 ரன்களில் லாங் ஆன் திசையில் அபாட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் ஜடேஜா இரு பவுண்டரிகள் அடித்து 11 ரன்கள் சேர்த்தார். கடைசி இரு ஓவர்களில் மட்டும் 34 ரன்கள் சேர்க்கப்பட்டது.
ஜடேஜா 44 ரன்களிலும், சாஹர் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலியத் தரப்பில் ஹென்ரிக்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT