Published : 03 Dec 2020 01:40 PM
Last Updated : 03 Dec 2020 01:40 PM
ஐபிஎல் டி20 தொடரில் அடுத்த ஆண்டில் 2 புதிய அணிகளைச் சேர்ப்பது, அமித் ஷா மகனுக்குப் புதிய பதவி வழங்குவது, தேர்வுக்குழு தலைவர்களைத் தேர்வு செய்வது உள்பட பல்வேறு முடிவுகளை எடுக்க பிசிசிஐ ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் வரும் 24-ம் தேதி கூடுகிறது.
இந்தப் பொதுக்குழுவில் ஆலோசிக்கப்பட உள்ள 23 அம்சங்கள் குறித்து அனைத்து மாநில கிரிக்கெட் அமைப்புகளுக்கும் 21 நாட்களுக்கு முன்பே பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பொதுக்குழுவில் மிக முக்கியமாக ஐபிஎல் தொடரில் இரு புதிய அணிகளைச் சேர்ப்பது குறித்து ஒப்புதல் பெறப்படுகிறது. தற்போது 8 அணிகள் ஐபிஎல் தொடரில் இருக்கும் அணியில் இது 10 அணிகளாக உயர்த்தப்பட உள்ளது.
அதானி குழுமம், மற்றும் சஞ்சீவ் கோயங்கா (ரைஸிங் புனே சூப்பர் ஜெயிட்ன்ஸ்) குழுமத்தினர் இரு புதிய அணிகளுக்கு ஆர்வமாக இருக்கின்றனர். இரு அணிகளுமே அகமதாபாத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு பிசிசிஐ சார்பில் பிரதிநிதி தேர்வு செய்யப்பட வேண்டும். ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கான பிரதிநிதியாக பிசிசிஐ செயலாளரும் அமித் ஷா மகனுமான ஜெய் ஷா தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
இந்த அணியின் தேர்வுக் குழுவுக்கு நிர்வாகிகள் இதுவரை யாரும் தேர்வு செய்யப்படவில்லை. மேலும் கிரிக்கெட் குழுவுக்கும், நிலைக்குழுவுக்கும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்படவி்ல்லை. இவற்றுக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
இந்திய அணி 2021-ம் ஆண்டில் மேற்கொள்ள உள்ள வெளிநாட்டுப் பயணங்கள், 2021-ம் ஆண்டில் இந்தியாவில் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டி, 2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டைச் சேர்ப்பது உள்ளிட்ட அம்சங்கள் பேசப்படலாம்.
பிசிசிஐ பொதுக்குழுவில் பேசப்பட உள்ள அம்சங்களாகக் குறிப்பிடப்படுபவை:
பிசிசிஐ துணைத் தலைவர் தேர்வு, ஐபிஎல் நிர்வாகக் குழுவுக்கு இரு பிரதிநிதிகள், ஆண்டு பட்ஜெட், குறைதீர்ப்பு அதிகாரி, ஒழுங்கு அதிகாரி நியமனம் ஒப்புதல், நடுவர்கள் குழு உருவாக்குதல், கிரிக்கெட் குழு மற்றும் நிலைக்குழு உருவாக்குதல், ஐசிசிக்கான பிரதிநிகள் நியமனம், ஐபிஎல் புதிய இரு அணிகளுக்கு ஒப்புதல், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டைச் சேர்ப்பது, 2021-ல் இந்தியாவில் டி20 உலகக்கோப்பை போட்டி நடத்துவது உள்ளிட்டவை பேசப்பட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT