Published : 03 Dec 2020 10:01 AM
Last Updated : 03 Dec 2020 10:01 AM
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியதையடுத்து, ஐசிசி சூப்பர் லீக் புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசிப் போட்டியில் வெற்றியைப் பதிவு செய்ததையடுத்து, இந்திய அணி புள்ளிப் பட்டியலில் 6-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இதற்கு முன் 30 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து அணியைப் பின்னுக்குத் தள்ளி, 40 புள்ளிகளுடன் தற்போது, ஆஸ்திரேலிய அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இதுவரை ஆஸ்திரேலிய அணி 6 ஒருநாள் போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்விகளுடன் 40 புள்ளிகளுடன் உள்ளது.
இங்கிலாந்து அணி 3 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 30 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. இந்திய அணி 3 போட்டிகளில் ஒரு வெற்றி, 2 தோல்விகளுடன் 9 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது.
2023-ம் ஆண்டு நடக்கும் உலகக் கோப்பைப் போட்டிக்கு அணிகளைத் தகுதிபெற வைக்கும் வகையில் ஐசிசி, சூப்பர்லீக் புள்ளிப் பட்டியலை அறிமுகம் செய்துள்ளது. இந்தப் புள்ளிப் பட்டியலில் 13 அணிகள் உள்ளன.
இதில் முதல் 7 இடங்களைப் பெறும் அணிகள் நேரடியாகத் தகுதி பெறும். இந்தியா போட்டியை நடத்துவதால், இயல்பாகத் தகுதி பெறும். மீதமுள்ள 5 அணிகளுக்கு இடையே தகுதித்சுற்றுப் போட்டி நடக்கும் அந்த அணிகளைத் தேர்வு செய்யவே சூப்பர் லீக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய அணியைப் பொறுத்தவரை போட்டியை நடத்தும் நாடு என்பதால், உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெறும். இருப்பினும் அடுத்துவரும் ஒருநாள் தொடர்கள் சூப்பர் லீக் தொடரில் இந்திய அணி எந்த இடத்தைப் பிடிக்கப் போகிறது என்பதை முடிவு செய்யும்.
அந்த வகையில் 3-வது இடத்தில் தற்போது பாகிஸ்தான் அணி 20 புள்ளிகளுடன் உள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியதால் 20 புள்ளிகள் கிடைத்தன.
அதேபோல பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு ஒருநாள் ஆட்டத்தில் ஜிம்பாப்வே வென்றதால் 10 புள்ளிகள் கிடைத்தன. இங்கிலாந்து அணியை ஒரு ஆட்டத்தில் வென்றதால் அயர்லாந்து அணிக்கு 10 புள்ளிகள் கிடைத்தன. இதனால், ஜிம்பாப்வே அணி 4-வது இடத்திலும், அயர்லாந்து அணி 5-வது இடத்திலும் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT