Published : 02 Dec 2020 06:32 PM
Last Updated : 02 Dec 2020 06:32 PM
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கரை மீண்டும் நெட்டிசன்கள் வறுத்தெடுக்கும் சூழல் உருவாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு ஒரு நாள் போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வி கண்டு தொடரை இழந்துள்ளது. இதன் பிறகு டி20 தொடர், டெஸ்ட் தொடர் என இந்தியா, ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடவுள்ளது.
புதன்கிழமை நடந்த 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 302 ரன்களைச் சேர்த்தது. இதற்கு கடைசி பத்து ஓவர்களில் அதிரடி ஆட்டம் ஆடிய ரவீந்திர ஜடேஜா (50 பந்துகளில் 66 ரன்கள்) மற்றும் ஹர்திக் பாண்டியா (76 பந்துகளில் 92 ரன்கள்) இருவரும் முக்கியக் காரணமாய் இருந்தனர். ஆட்ட நாயகனாகவும் ஹர்திக் பாண்டியா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சஞ்சய் மஞ்சரேக்கர் பேசிய பேச்சை வைத்து ஒரு சிலர் இணையத்தில் கிண்டல் செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்தப் பேட்டியில், "நான் இவ்வளவு வருடங்களாக பெற்ற அனுபவத்தை, கொள்கையை வைத்துதான் எனது சிந்தனைகளும் அணித் தேர்வும் இருக்கும். பேட்டிங்கோ, பந்துவீச்சோ ஏதாவது ஒரு விஷயத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இருந்தால் அவர்களை என் அணியில் தேர்வு செய்வேன்.
எனக்கு ஜடேஜாவிடம் எந்தப் புகாரும் இல்லை. ஆனால், ஒருநாள் போட்டியில் அவரைப் போன்ற வீரர்கள் மீது எனக்குப் புகார் உள்ளது. ஏன் ஹர்திக் பாண்டியா கூட என் அணியில் இருக்க மாட்டார். அவர்களெல்லாம் அணிக்கு மாயையான ஒரு மதிப்பையே கொண்டு வருகிறார்கள். டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜாவை நான் உயர்வாக மதிப்பிட்டிருக்கிறேன்" என்று மஞ்சரேக்கர் கூறியிருந்தார்.
பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் என எல்லாவற்றிலும் திறமை இருப்பதாகச் சொல்லிக் கொள்பவர்களைவிட ஏதாவது ஒரு விஷயத்தில் திறமை இருப்பது முக்கியம் என்கிற ரீதியில் மஞ்சரேக்கர் கூறியிருந்த கருத்து பலரது கண்ணில் படாமலேயே சென்றுவிட்டது.
ஆனால், தற்போது 3-வது ஒரு நாள் போட்டியில், அணிக்கு மதிப்பு சேர்ப்பதுபோல மாயையைக் கொடுக்கும் வீரர்கள் என மஞ்சரேக்கர் சொன்ன இருவரும்தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாய் இருந்துள்ளனர். எனவே இதைவைத்து இப்போதே சமூக வலைதளங்களில் மஞ்சரேக்கரைக் கலாய்க்கும் படலம் மீண்டும் தொடங்கியுள்ளது. மேலும் ஜடேஜா ஆடிக்கொண்டிருக்கும் போதே மஞ்சரேக்கர் வர்ணனை செய்து வந்தது நெட்டிசன்களுக்கு இன்னும் வசதியாகப் போனது. அதை வைத்து இன்னும் தீவிரமான கலாய்ப்புப் பதிவுகளைப் பலர் பகிர ஆரம்பித்தனர்.
நெட்டிசன்களிடம் சிக்குவது மஞ்சரேக்கருக்கு இது புதிதல்ல. ஒருதலைப்பட்சமாக வர்ணனை செய்கிறார் என்று நீண்ட காலமாகவே அவர் மீது புகார் எழுந்துள்ளது. மேலும் அவர் விமர்சித்திருக்கும் வீரர்கள் அடுத்த போட்டியிலேயே சிறப்பாகச் செயல்படுவதும், அதை நெட்டிசன்களில் சிலர் அவரிடம் சுட்டிக்காட்டி மூக்குடைக்க முயல்வதும் என அவ்வப்போது நடந்துள்ளது.
மஞ்சரேக்கர் ஒருதலைப்பட்சமாக வர்ணனை செய்கிறார் என்று புகார் எழுந்ததால்தான் கடந்த ஐபில் தொடரில் பிசிசிஐ அதிகாரபூர்வ வர்ணனையாளர்கள் குழுவிலிருந்து நீக்கப்பட்டு நடந்து வரும் ஆஸ்திரேலியத் தொடருக்கு மீண்டும் சேர்க்கப்பட்டார்.
கடந்த ஆண்டு ரவீந்திர ஜடேஜா பற்றிய கருத்துக்கு, அவரே காரசாரமாக மஞ்சரேகருக்குப் பதிலளித்திருந்தார். ஆனால் சமீபத்திய கருத்துக்குப் பதில் ஏதும் சொல்லாத ஜடேஜா, தனது சமூக வலைதளப் பக்கத்தில், அமைதி காப்போம் என்று சூசகமாகத் தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment