Published : 02 Dec 2020 12:55 PM
Last Updated : 02 Dec 2020 12:55 PM

முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் நடராஜன்: நெட்டிசன்கள் உற்சாகம்

இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி நடராஜன் இந்திய அணிக்காக தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாட ஆரம்பித்துள்ளார்.

13-வது ஐபிஎல் சீசனில் அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் தனது யார்கர் பந்துவீச்சால் ஈர்த்தவர் தமிழக வீரர் நடராஜன் என்றால் மிகையல்ல. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்ற நடராஜன், 16 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அனுபவமான பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக தொடரிலிருந்து பாதியிலேயே விலகிய நிலையில், வேகப்பந்துவீச்சுக்கு சன்ரைசர்ஸ் அணியில் வலு சேர்த்தவர் நடராஜன்.

டிஎன்பிஎல் லீக்கில் விளையாடிய நடராஜனின் திறமையைப் பார்த்த கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி கடந்த 2017-ம் ஆண்டு அவரை ரூ.3 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், நடராஜனுக்கு ஒரு போட்டியில்கூட வாய்ப்பு வழங்கவில்லை.

இந்த முறை சன்ரைசர்ஸ் அணி, நடராஜனின் திறமையை அடையாளம் கண்டு அவருக்கு தொடர் வாய்ப்புகளை வழங்கியது. நடராஜனின் அபாரமான பந்துவீச்சுத் திறமையால், முதல்முறையாக ஆஸ்திரேலியத் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.

இதில் முதலில் நடந்த ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இந்தியா தோல்வியடைந்து தொடரை இழந்தது. இந்த இரண்டு போட்டிகளிலும் நடராஜன் இடம்பெறவில்லை. இந்தப் போட்டிகளில் இந்தியாவின் பந்துவீச்சும் கடும் விமர்சனத்துக்குள்ளாகியது. இதனால் மூன்றாவது போட்டியில் நடராஜனுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் சிலரே குரல் கொடுக்க ஆரம்பித்தனர். தமிழக கிரிக்கெட் ரசிகர்களும் நடராஜன் அணியில் இடம்பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்து வந்தனர்.

எதிர்பார்த்தது போல புதன்கிழமை தொடங்கிய 3-வது ஒருநாள் போட்டியில் அணியில் நடராஜன் இடம்பெற்றார். அவரது முதல் சர்வதேச ஒரு நாள் போட்டி என்பதால் ஆட்டம் தொடங்குவதற்கு முன் அணியினர் முன்னிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு, அணியின் கேப் வழங்கப்பட்டது. நடராஜனின் ஜெர்ஸியில் 232 என்ற எண் இடம்பெற்றுள்ளது.

நடராஜனின் ஒருநாள் அறிமுகத்துக்கு சமூக வலைதளங்களில் எண்ணற்ற பிரபலங்கள்,முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நடராஜனுக்கு அணியினர் வாழ்த்து தெரிவிக்கும் காணொலி பகிரப்பட்டுள்ளது.

"அவர் இன்று எப்படி ஆடினாலும் டி நடரஜனின் கதை இதயத்தை நெகிழச் செய்யும், ஊக்கமளிக்கும் ஒன்று" என பிரபல மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இயன் பிஷப் ட்வீட் செய்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x