Published : 28 May 2014 07:55 PM
Last Updated : 28 May 2014 07:55 PM
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தேர்வு செய்யப்படாததன் காரணம் குழப்பமாக உள்ளது.
நடப்பு ஐபிஎல் போட்டித் தொடரில் முதுகுக் காயம் காரணமாக சமீபத்தில் நடந்த சில போட்டிகளில் விளையாடவில்லை. இங்கிலாந்து செல்ல இன்னும் சில தினங்கள் உள்ள நிலையில் அவர் காயத்திலிருந்து மீண்டு வர வாய்ப்பில்லையா, அதனால் தேர்வு செய்யப்படவில்லையா அல்லது அணியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளாரா என்பது பற்றித் தெளிவாகத் தெரியவில்லை.
35 வயதாகும் ஜாகீர் கான் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அயராது பந்து வீசினார். விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு அச்சுறுத்தலாகவும் திகழ்ந்தார். தென் ஆப்பிரிக்காவில் ஒரு அரிதான டெஸ்ட் வெற்றியையும் இவரது பந்து வீச்சு ஈட்டுத் தந்திருக்கும்.
அதன் பிறகு நியூசீலாந்தில் 2 டெஸ்ட் போட்டிகளில் சுமார் 107 ஓவர்களை அவர் வீசியிருக்கிறார். அங்கும் அச்சுறுத்தலாகவே திகழ்ந்தார்.
கடந்த முறை 2011ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு இந்திய அணி சென்ற போது முதல் டெஸ்ட் போட்டி துவங்கியபோதே அவர் காயம் காரணமாக வெளியேற அவருக்கு மாற்று வீரர் இல்லாமல் இந்திய அணி அந்த டெஸ்ட் தொடரில் 0-4 என்று படுதோல்வி தழுவியது.
எனவே காயத்திலிருந்து அரைகுறையாக அவர் குணமடைந்து இங்கிலாந்துத் தொடருக்கு அழைத்துச் சென்றால் 2011ஆம் ஆண்டு நடந்தது போல் நடந்து விடும் என்ற அச்சமும் அணித் தேர்வுக்குழுவுக்கு ஏற்பட்டிருக்கலாம். எது எப்படியாயினும் ஜாகீர் கான் இங்கிலாந்தை கதிகலக்கிய ஒரு பவுலர். அவர் இல்லாதது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவே. இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் நிச்சயம் இதனைக் கொண்டாடுவார்கள் என்று நம்பலாம்.
இங்கிலாந்துக்கு எதிராக அவர் 13 டெஸ்ட் போட்டிகளில் 457 ஓவர்களை வீசி 43 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதில் இங்கிலாந்து மண்ணில் விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் சுமார் 297 ஓவர்களை வீசி 31 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சராசரியாக 27 ரன்களுக்கு ஒரு விக்கெட்டைச் சாய்த்துள்ளார் ஜாகீர் கான். மொத்தமாக 92 டெஸ்ட் போட்டிகளில் 311 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் ஜாகீர் கான்.
ஆனாலும் ராஜஸ்தான் அணியின் அயராத வேகப்பந்து வீச்சாளர் பங்கஜ் சிங்கிற்கு டெஸ்ட் அணி வாய்ப்பு ஒருவழியாகக் கிடைத்திருப்பது வரவேற்கத்தக்கதே. தொடர்ந்து உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில், குறிப்பாக ரஞ்சி போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வரும் வீச்சாளராக அவர் திகழ்கிறார். இவருக்கு வயது 29. இப்போது கூடத் தன்னைத் தேர்வு செய்யாவிட்டால் ரஞ்சி கோப்பை விளையாடுவதையே நிறுத்தி விடுவேன் என்று ஒரு முறை பேட்டியளித்தார்.
இப்போதும் அணியில் இருக்கிறார். ஆனால் விளையாடும் 11 வீரர்களில் இடம்பெறுவது கடினமே. இஷாந்த் சர்மா, புவனேஷ் குமார், மொகமது ஷமி ஆகியோர் இருப்பார்கள். 4-வது வீச்சாளராக ஈஷ்வர் பாண்டேக்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே பங்கஜ் சிங் விளையாடுவது என்பது முன்னணி வீச்சாளர்கள் தொடரின் போது காயமடைந்தால் மட்டுமே சாத்தியம் என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT