Published : 29 Nov 2020 08:43 AM
Last Updated : 29 Nov 2020 08:43 AM
மிகப்பெரிய இலக்கை சேஸிங் செய்யும்போது பேட்டிங்கில் நடுவரிசையில் தோனியைப் போன்ற ஒரு வீரர், விராட் கோலியின் படைக்கு அவசியம் தேவை என்று மே.இ.தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்பவான், வேகப்பந்துவீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.
சிட்னியில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திேரலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 374 ரன்கள் சேர்த்தது. 375 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் மட்டுமே சேர்த்து 66 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்திய அணியின் இந்தத் தோல்விக்குப் பின் மைக்கேல் ஹோல்டிங் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
மே.இ.தீவுகள் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:
''இந்திய அணியில் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால், எனக்குத் தெரிந்தவரை ஒரு விஷயம் என்னவென்றால், தோனியை இழந்தபின், விராட் கோலியின் படை மிகவும் தடுமாறப் போகிறது. தோனி இல்லாத வெற்றிடம் இந்திய அணியில் தெரிகிறது.
எனக்குத் தெரிந்து,தோனி நடுவரிசையில் களமிறங்கி பேட்டிங் செய்யும்போது, சேஸிங்கில் அணியை நிதானமாகக் கொண்டு செல்வார். தோனியின் தலைமையில் பல கடினமான ஸ்கோர்களை இந்திய அணி சேஸிங் செய்துள்ளது. ஒருபோதும் எதிரணி டாஸ் வென்று பேட்டிங் செய்து, இந்திய அணி சேஸிங் செய்ய வேண்டுமே என்று அச்சப்பட்டதில்லை. ஏனென்றால், தோனி என்பவர் யார், அவரின் திறமை என்ன என்பது தெரிந்திருந்தது.
இந்திய அணி பேட்டிங் வரிசையில் மிகவும் வலுவானதாகவும், திறமையான வீரர்களையும் கொண்டிருந்தது. குறிப்பாக சில அற்புதமான பேட்டிங் செய்யும் வீரர்கள், ஷாட்களை ஆடக்கூடிய பவர் ஸ்ட்ரைக்கர்கள் இருந்தார்கள்.
ஆதலால், இப்போதுள்ள சூழலில் இந்திய அணிக்கு தோனியைப் போன்ற ஒரு வீரர் அவசியம் கோலிக்குத் தேவை. தோனியின் திறமையைப் போன்ற வீரர் அல்ல, அவரின் குணங்களை, மனோதிடத்தைக் கொண்டிருக்கக் கூடிய வீரராகவும் இருக்க வேண்டும்.
இந்திய அணி சேஸிங் செய்தபோது, எந்தச் சூழலிலும் தோனி பதற்றப்பட்டு நான் பார்த்தது இல்லை. தனது திறமை பற்றி தோனிக்குத் தெரியும், சேஸிங் எப்படி செய்ய வேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும்.
தோனியுடன் யார் பேட்டிங் செய்தாலும், அவருடன் பேசிக்கொண்டே, அவர்களுக்கு உதவிசெய்து கொண்டே சேஸிங்கை சிறப்பாகக் கொண்டு செல்வார். சிறப்பான பேட்டிங் வரிசை தோனி காலத்தில் இருந்தது. அதிலும் சேஸிங் செய்யும்போது தோனி சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தார்''.
இவ்வாறு ஹோல்டிங் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT